ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஆயுதப் போராட்டம் என்பது இனிமேல் தமிழரின் வரலாற்றில் சாத்தியமேயில்லாத ஒன்று. ?!

கடந்த வருடம் போர் முடிந்த சில மாதங்களின் பின்னர்- சிறைப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை குறித்து
கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேரை போராளிகள் என்று சிறைபிடித்து வைத்திருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
இவர்களில் ஒரு தொகுதியினரை விடுவித்து விட்டதாகக் கூறுகிறது சிங்களதேசம். இன்னமும் 11 ஆயிரம் போராளிகள் வரை தடுப்பு முகாம்களில் உள்ளனர்.

புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய காலம், அவர்கள் வகித்த பொறுப்புகள், பங்கேற்ற தாக்குதல்களின் அடிப்படையில் முன்னாள் போராளிகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசு கூறுகிறது.
ஒரு வகையினர் கடும் போக்குள்ள புலிகள் என்றும் ஏனையோர் சாதாரண உறுப்பினர்கள் என்றும் வகைப்படுத்தியிருக்கிறது அது.
கடும்போக்குள்ள புலிகள் எத்தனை பேர்- அவர்கள் எங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இரகசியம்.
அதேவேளை பங்கர் வெட்டப் போனவர்களும்- துணைப்படையாக நின்றவர்களும்- சம்பளத்துக்கு பணியாற்றியவர்களுமாக இருக்கும் ஒரு தொகுதியினருக்கு புனர்வாழ்வு கொடுப்பதாக கூறுகிறது சிங்கள அரசு.
இவர்களை கட்டம் கட்டமாக விடுதலை செய்யப் போகிறதாம். ஆனால் இந்த முன்னாள் போராளிகளின் விடுதலை எப்போது என்பது தான் கேள்விக்குறி.


1971இலும், 1987-89 காலத்திலுமாக இரண்டு முறை ஜேவிபி அரசுக்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டது.
இதன்போது ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பின்னர் ஜேவிபிக்கு பொதுமன்னிப்பு அளித்தது சிங்கள அரசு.
ஜேவிபி உறுப்பினர்கள் விடுதலையாகி அரசியலில் ஈடுபடவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.


அது போன்று புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுமா?


சிங்கள அரசு ஜேவிபியை தமது இளைஞர்களாகப் பார்த்தது. ஆனால் தமிழ் இளைஞர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் உள்ள போராளிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவது அவசியம்.
இது போராட்டத்;துக்கு வலுவூட்டுவதற்கான செயற்பாடல்ல.
புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பது முடிந்து போன ஒன்று.
எம் இனத்துக்கு- சமூகத்துக்கு வலுவூட்டுவதற்கு சிறைப்பட்ட போராளிகள் வெளியே கொண்டு வரப்பட வேண்டியது அவசியம்.


ஒன்றிரண்டு பேரல்ல- 11 ஆயிரம் பேர் சிறைப்பட்டிருக்க, எப்படித் தமிழனால் நிமிர்ந்திருக்க முடியும்.


சிறைப்பட்டுள்ள போராளிகளை விடுவிக்க கே.பி முயற்சி எடுத்து வருவதாக சில தகவல்கள் வெளியாகின.


அது உண்மையா- பொய்யா என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.


சிறையிலுள்ளவரும்- சிறைப்படுத்தியிருப்பவரும் பேசிக் கொள்வதைப் பற்றி வெளியே இருப்பவர்களால் ஊகிக்கத் தான் முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது.


அதேவேளை சிறைப்பட்டுள்ள போராளிகளின் விடுதலைக்கு கே.பி முயற்சிக்கிறாரே இல்லையோ- வெளியே இருப்பவர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.


கோத்தாபய ராஜபக்ஸவும், டி.எம்.ஜெயரட்ணவும் என்ன சொல்கிறார்கள்?


புலிகள் இயக்கம் வெளிநாட்டில் இருந்து உயிர் பெற்று வந்து விடலாம் என்கிறார்கள் அவர்கள்.
வெளிநாட்டில் பயிற்சி பெற்று கடல் வழியாக வந்து தரையிறங்கலாம் என்று பயம் காட்டுகிறார்கள்
இது சிங்களவருக்காக அவர்கள் காட்டும் பூச்சாண்டியல்ல- தமிழருக்காக வெட்டும் புதைகுழி.
புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் தான் அவர்கள் இப்படிச் சொல்வதற்குக் காரணம்.
ஆயுதப்போராட்டம் அழிந்து விடவில்லை- தேசியத் தலைமையும் தளபதிகளும் பாதுகாப்பாகவே உள்ளனர்- மீளவும் வந்து ஐந்தாவது கட்ட ஈழப்போரை நடத்துவர் என்று செய்த பிரசாரத்தின்; விளைவு இது.
சிங்கள அரசுக்குத் தெரியும்- இப்படி எதுவும் நடக்கப் போவதில்லை என்று.
ஆனால் சிறைப்பட்டுள்ள போராளிகளை நிரந்தரமாகவே தடுத்து வைத்திருப்பதற்கு- நாம் கொடுத்த பொல்லை வைத்தே எம்மைத் தாக்குகிறது சிங்கள அரசு.
புலிகள் இயக்கம் மீள உயிர் பெற்றால் விடுதலையாகும் போராளிகள் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்று கோத்தாபய வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் அதீத கற்பனையுடன் செய்யும் பிரசாரம்- தடுப்புக்காவலில் உள்ள போராளிகளுக்கு எமனாக மாறியுள்ளது.
இங்கே எமது தலையில் மண் அள்ளிப் போட வேறெவரும் வரவில்லை- நாமே தான் அதைச் செய்கிறோம்.
எமக்கு நாமே குழிபறிக்கிறோம். எமக்கு நாமே பொறி வைக்கிறோம்.
ஆயுதப் போராட்டம் என்பது இனிமேல் தமிழரின் வரலாற்றில் சாத்தியமேயில்லாத ஒன்று.
அப்படியான கற்பனைக் கோடொன்றை வரைந்து புலம்பெயர் மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள்- தடுப்புமுகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறார்கள்.
பதிவு (சுவிசிலிருந்து வாசகர் ,நிருபர் ,-ஜெயமோகன் )
-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக