ஞாயிறு, 18 ஜூலை, 2010

மறவர் மனம் ....

விடுதலையின் விலைதானே மரணம்.
விடுகதையா தினம்போட்டு மகிழ
ஒடுக்கிவைத்து தடுப்பாரை தகர்க்கும்
ஓய்வறியா நெடுந்தூரப் பயணம்
கெடுப்பதற்கு இரண்டகத்தார் இழைக்கும்
கெடுமதியை முறியடித்து ஒடுக்கும்;
தடுக்கமின்றி தமிழீழம் அமைய,,

நமக்கான களம் காணும் மறவர்.
பொழுதெல்லாம் பொருளீட்டிக் கிடந்தால்
பொருளற்று தவித்திடுவாய் மனிதா?
பழுதற்ற குமுகாயம் படைக்க
பகுத்தறிவு நெறிமுறையில் சுழல்வாய்
எழுத்தொன்றி வரும்நிலையில் படிக்க
எண்ணத்தின் பொருள்பதியும் சுவட்டில்
முழுதாக மனிதத்தை பரப்பும்
முகவரியில் மனம் கலப்போம் மகிழ்ந்து.
உலகமயம் வலைவீசிப் பிடிக்கும்
உரிமைகளை களையெடுத்து எறியும்!
நிலமனைத்தும் பறிப்போகும் முறையால்
நிதமிங்கு கலவரம்தான் வெடிக்கும்;
பலமிழந்து குரலெழுப்பி உறங்கும்
பகல்கனவில் விடுதலையா கிடைக்கும்!
நலம்குன்றி பலம்தேடும் மனிதா
நம் கையேதான் ஆயுதமென் றறிவாய்;
திரைப்படத்து சுருளென்று கருதி
திருப்புமுனை அரசியலில் தொடர;
விரைந்துவரும் அரிதாரக் கலைஞன்
வில்லங்கம் புரிவதற்கு இடமா?
நுரைத்துவரும் கடல்நீராய் அசைந்து
நுழைகின்ற நாயகனின் செயலில்
வரைமுறையை அறியாத இளைஞர்
வழிமாறிப்போவதற்கோ இயக்கம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக