ஞாயிறு, 18 ஜூலை, 2010

தடை முகாமில் உள்ளோர் மகிந்தாவுக்கு முறையீடு -.பி பி சி

முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த யுத்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறையிட்டுள்ளனர்.



யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர்கள் கடந்த புதன்கிழமை ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.


கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து அகதிகளை ஜனாதிபதி சந்தித்தபோதே அவர்கள் இந்த முறைப்பாட்டைத் தெரிவித்ததாக பி.பி.சி. தமிழ்ச்சேவை தெரிவித்தது.


திருமுறிகண்டி,இந்துபுரம்,சாந்தபுரம் பகுதிகளைச் சேர்ந்த அகதிகளை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதாக வவுனியா மெனிக்பாம் முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் இரு மாதங்கள் கடந்தும் தாங்கள் இடைத்தங்கல் முகாம்களிலேயே வைக்கப்பட்டிருப்பதாகவும் முறையிட்டுள்ளனர்.


கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.


முறிகண்டியில் நிலைமையை அறியவென அகதிகள் சென்றபோது அவர்களின் காணிகளூடாக வீதி அமைக்கும் பணி இடம்பெறுவதை அவர்கள் பார்த்துள்ளனர். அதனைத் தடுத்து நிறுத்தும் நிலையில் தாங்கள் இல்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக