சனி, 31 ஜூலை, 2010

தமிழரின் காவலர் பிரசன்னம் இல்லாததால் ஸ்ரீலங்காவின் காவல்துறையினரின் அனுசரணையுடன் நடைபெறும் வல்லுறவுகள் ...

யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு இடம்பெற்று வரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
வலிகாமத்தின் அளவெட்டிப் பகுதியில் ஆலயத் திருவிழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு
5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி காவற்துறையினர் காக்க முற்பட்டமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .


அளவெட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் திருவிழா தற்பொழுது நடைபெறுகின்ற நிலையில் வழமை போன்று இரவு நேரத் திருவிழாக்கள் உச்சம் பெற ஆரம்பித்திருக்கின்றன. அவ்வகையில் அன்றிரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றை பார்வையிட்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மேற்படி 5 இளைஞர்களாலும் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் இவர் கைவிடப்பட்டுள்ளார். பொதுமக்கள் சிலரால் மீட்கப்பட்ட இவர் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சம்பவம் தொடர்பாக மல்லாகம் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை அடுத்து காவற்துறையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்படி குற்றச் செயலுடன் சம்பந்தப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கொழும்பிற்கு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்றவரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் தற்பொழுது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக