சனி, 31 ஜூலை, 2010

நாம் எதைப் பேசினாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடவே பலர் காத்திருக்கிறார்கள்-ஹக்கீம்

தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் உரிய தேவையான அக்கறை காட்டவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள கனிய வளங்களைச் சுவீகரித்து இலாபம் தேடுவதிலேயே அதிக அளவில் அக்கறை காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சாடினார்.

இதேவேளை இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஹக்கீம் கூறினார்.


தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் தென்னிலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ள வடக்கு ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:


பல வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை இழுத்தடித்து வரும் அரசாங்கம் அவர்களை மீளக்குடியேற்றுவதில் உண்மையில் போதிய அக்கறை இன்றி இருக்கிறது.
ஆனால் அங்குள்ள கனியவளங்களை தேடித் தேடிக் கண்டுபிடித்து அதனை சுவீகரித்து இலாபம் தேடுவதில் அதீத அக்கறை கொண்டுள்ளது.


அத்துடன் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு எங்கெல்லாம் ஹோட்டல்களை அமைத்துக் கொடுக்கலாமோ அங்கெல்லாம் அமைத்துக்கொடுப்பதற்கு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக கிழக்கில் புதிய ஹோட்டல்கள் பலவற்றை அமைப்பதற்கு அரசாங்கம் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றது.


இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுகின்ற ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்கின்றோம். அதற்காகத்தான் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்து வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள தீவிரவாதப் போக்குடையவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் எதைப் பேசப்போகிறார்கள் அவர்களுடைய எதிர்கால அரசியல் நகர்வுகள் என்ன எனப் பல்வேறு விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனைக் கருத்திற்கொண்டே இரண்டு கட்சிகளும் சாதுரியமான முறையில் எமது நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.


அடுத்த வாரமளவில் தமிழர்களின் பலம் வாய்ந்த சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எமது கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்கள்.


இந்த அரசாங்கம் அதிகாரப் பகிர்வுகளை மேற்கொள்வதில் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை என்பது எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.


எனவே இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றுபட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக