புதன், 21 ஜூலை, 2010

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைத் தடுப்பதற்கு பலவழிகள் அன்று இருந்த போதிலும் அரசுகள் அதனைச் செய்வதில் கவனம் செலுத்தத் தவறினர் - குணசேகர

சிறுபான்மை தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படவேண்டுமெனவும் அதனைத் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டுமெனவும்
தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான டியூ குணசேகர நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படுவதோடு, ஜனாதிபதி பதவி சம்பிரதாயபூர்வ பதவியாகவே அமையவேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.


தற்போதைய அரசியலமைப்பின் 4 ஆவது 6 ஆவது திருத்தங்களே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிரிந்து பிரபாகரன் தமிழினத்தின் ஒரே தலைவராக உருவாக முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர்மாக்கார் நிலையம் கொழும்பு வெள்ளவத்தை மராயன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய "தேசிய ஐக்கியத்துக்கான ஜனநாயக அரசியலமைப்பை நோக்கி..." எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அமைச்சர் டியூ குணசேகர மேற்கண்டவாறு கூறினார்.


அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களும் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது;


1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் இரண்டாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வரவழிவகுத்தது.


1978 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை அறிமுகப்படுத்தி பாராளுமன்றத்தின் அதிகாரம் முற்றுமுழுதாகப் பலவீனப்படுத்தப்பட்டது.


சோல்பரி அரசியலமைப்பில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்த போதிலும் அது பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை என்றே கூறவேண்டும். அதன் பின்னர் 72 இலும் 77 இலும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிலும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் நலன்களை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டன.


1948 முதல் இன்று வரையில் சிறுபான்மை தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான உறுதியான திட்டங்கள் எதுவுமே முன்வைக்கப்படவில்லை. அதன் காரணமாகவே தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தனர்.


அதன்பின்னர் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினர். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைத் தடுப்பதற்கு பலவழிகள் அன்று இருந்த போதிலும் அரசுகள் அதனைச் செய்வதில் கவனம் செலுத்தத் தவறினர் என்றே சொல்ல வேண்டும்.


78 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு இதுவரையில் 17 தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பு மாத சஞ்சிகை போன்று அடிக்கடி மாற்றத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அரசியலமைப்புக்குரிய பெறுமானத்தைக் கூட அது இழந்துள்ளது.


இன்று அரசியலமைப்பை மாற்றுவது அல்லது திருத்தம் கொண்டு வருவது பற்றிப் பேசப்படுகின்றது. அது எவ்வாறான மாற்றம் அல்லது திருத்தம் என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எமது நிலைப்பாடு அரசியலமைப்பானது தேசிய ஒருமைப்பாட்டுடன் கூடியதாக உருவாக்கப்படவேண்டுமென்பதே ஆகும்.


குறிப்பிட்ட சிலருக்காக அரசியல் கட்சிகள் மட்டும் பேசி அது உருவாக்கப்படக்கூடாது. அனைத்துத்தரப்புகளையும் உள்ளடக்கிய தேசிய ஒருமைப்பாட்டின் கீழ் ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே தேசிய ஐக்கியத்துக்கான வழிகாட்ட முடியும். தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக அது அமையவேண்டும்.


பதவிப் பெயர்கள் மாறுவதால் எந்தவித பயனுமில்லை. அதிகாரம் மட்டுமப்படுத்தப்பட வேண்டும். நான் சொல்வேன் பழைய பாராளுமன்ற முறையே எமது நாட்டுக்கு பொருத்தமானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி பதவி சம்பிரதாயபூர்வமானதாக இருந்து விட்டுப் போகலாம்.


எமது அரசியல் கலாசாகரம் மோசமான நிலைக்குத்தள்ளப்படுவதற்கு இன்றைய தேர்தல் முறையும் ஒரு காரணமாகும். இந்தத் தேர்தல் முறை உடனடியாக மாற்றப்படவேண்டும். கலப்புத் தேர்தல் முறைதான் மிக அவசியமானது.


அடுத்தது மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். அரசியலமைப்பில் அதுகுறிப்பிடப்பட்டிருப்பினும் அதனை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தால் அரசியலமைப்பிலிருந்து அந்த விதியை நீக்கிவிட வேண்டும்.


பொலிஸ் ஆணைக்குழு உள்ள நிலையில் மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் டியூ குணசேகர சுட்டிக்காட்டினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக