புதன், 21 ஜூலை, 2010

உலகத்திலிருந்து நாம் நம்மை மீட்டெடுத்து விடுதலையடைய வேண்டியிருக்கிறது....

முதலாளித்துவத்தின் அதன் விஸ்வரூபமாகிய இந்த உலகமயமாக்கலின் மூலம் உருவாகும் பேரழிவுகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு உலகமே செல்வச் செழிப்பில் கொழிப்பதாய் அலங்காரம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் "முதலாளித்துவம் இரத்தத்தாலும், சகதியாலும் மூடப்பட்டிருக்கிறது" என்று அன்றைக்கே சொல்லியிருந்தார். ஆனால் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய் புலப்பட மக்களின் கோபங்கள் பீறிட்டு எழ ஆரம்பித்திருக்கின்றன.


2001ம் ஆண்டு ஜூலை மாதம் இத்தாலியில் ஜெனொவாவில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது. உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்களின் கூட்டம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், கனடா, இத்தாலியோடு கடைசியாக சேர்க்கப்பட்ட ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். கொஞ்சம் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் தெரியும். இந்த நாடுகள் தான் இரண்டாம் உலகப் போரில் எதிர் எதிராக நின்றவை. சமீப காலமாக முதலாளித்துவ நாடுகளின் முரண்பாடுகளைத் தீர்க்கவும், முதலாளித்துவ நெருக்கடிகளைத் தீர்க்கவும், வளரும் நாடுகளுக்கு எதிரான சதிகளைத் தீட்டவுமே இந்த மாநாடுகள் வருடத்திற்கு ஒரு முறை நடை பெறுகின்றன.
ஜெனொவாவில் இந்தக் கூட்டத்தை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் திரண்டிருந்தனர். இருபதாயிரம் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் அடக்குமுறையில் 231 பேர் படுகாயமடைந்தனர். அடுத்த நாள் இதனை எதிர்த்து இத்தாலி முழுவதும் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு இயக்கங்கள் கலகங்களாக உருவெடுத்தன. 1976 லிருந்து இந்த உச்சி மாநாடுகள் நடந்து வந்த போதிலும் சமீபத்திய சில ஆண்டுகளில்தான் இவைகளை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். உலகின் பல பாகங்களில் மிகக் கடுமையான ஆர்ப்பாட்டங்களும், கலகங்களும் நடைபெற்றிருக்கின்றன.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டங்களும், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களும் நாளுக்கு நாள் பரவலாகிக் கொண்டு வருகின்றன. மேலும் தத்தம் நாடுகளில் மக்களும் தொழிலாளர்களும் ஊதிய உயர்வுக்காகவும், ஆலைகள் மூடுவதற்கு எதிராகவும் போராடுகிற போராட்டங்கள் யாவுமே உலகமயத்தினை எதிர்த்த மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியாகவே நாம் உணரமுடியம்.
யுத்தத்திற்கு எதிரான மனோபாவமும், மக்களின் நடவடிக்கைகளும் எப்போதும் இல்லாத அளவுக்கு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது காணமுடிந்தது. ஏறத்தாழ உலகத்தின் பெரும்பகுதி மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கனடா நாட்டின் தலைநகரான மாண்ட்ரிலில் இரண்டரை லட்சம் பேர் பங்கு கொண்ட ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அந்த நாட்டின் வரலாற்றில் இதுபோல எப்போதும் இல்லை. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் போரை எதிர்த்துத் திரண்டிருந்தாலும், அர்ஜெண்டினா மக்கள் நடத்திய போராட்டம் உணர்ச்சிவசப்படக் கூடியதாயிருந்தது. அமெரிக்க தூதரகம் கடுமையான பாதுகாப்போடு கருங்கல் கட்டிடத்திற்குள்ளிருந்து அதைப் பார்த்தது. ஹாங்காங், இந்தியா வியட்நாம், நியூஸிலாந்து சைப்ரஸ் பாகிஸ்தான் என அனைத்து நாடுகளிலும் அங்கங்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள் தன்னெழுச்சியாய் நடைபெற்றன.
பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் மக்கள் வெள்ளமாய் பிரிட்டன் நகரங்களில் கூடி இருக்கிறார்கள். .
சகலபகுதிகளிலும் இன்று நடைபெறுகிற போராட்டங்கள் ஒரு சர்வதேச பிரக்ஞையோடும், பார்வையோடும் துளிர்விடுகின்றன. சுற்றுப்புறச் சூழல் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்,  பன்முகக் கலாச்சாரம் குறித்த விவாதங்களும், நாடுகள் தோறும் சிறுசிறு அலைகளாக உருவெடுத்திருக்கின்றன. உலகமயமாக்கலுக்கு எதிராக, உலக மக்கள் திரண்டு போரடுகிற காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இந்த எதிர்ப்பு உணர்வு உலக மக்களிடையே படர்ந்து பரவிக் கொண்டு இருக்கிறது. வருகிற காலத்தில் இன்னும் நிலைமைகள் தெளிவாகும். கூர்மையடையும். மக்கள் தங்கள் உண்மையான சக்தியை உணருவார்கள்.
மீண்டும் உலகமெங்கும் கடுமையான பொருளாதார சரிவு துவங்கியிருக்கிறது. 1929களில் காணப்பட்ட உலகம் இப்போது திரும்புவதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். வித்தியாசம் அப்போது ரேடியோக்களோடு இருந்த உலகம் இப்போது கம்ப்யூட்டர்களோடுஇருக்கிறது. இது மேலும் அதிகரித்து உற்பத்தியை பாதிக்கும். லாபத்தின் விகிதம் கடுமையாக சரியும். அது முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கைகளை தகர்க்கும்.
முன்னர் சிறு சிறு ராஜ்ஜியங்களாக இருந்த பிரதேசங்கள் முதலாளித்துவத்தின் காலனியாதிக்கத்தால் எல்லைகளை வகுத்துக் கொண்ட நாடுகளாயின. உலகத்தோடு தொடர்பு இல்லாமல் அந்தந்த பகுதி மக்கள் மட்டுமே போராடினர். சோவியத் என்கிற ஒரு நாட்டில் மட்டும் சோஷலிசம் துளிர்த்தது. மன்னர்களின் ஆட்சிகள் முடிவடைந்து ஜனநாயக வடிவத்தில் ஆட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகிற காலம் உருவானது. இப்போது இரண்டாவது காலனியாதிக்கம் உலகமயமாக்கல் என்னும் வடிவத்தில் தீவிரமடைகிறது. ஆனால் மக்கள் இயக்கங்களோ உலக அளவில் நிகழ்கின்றன. முதலாளித்துவத் துவத்தின் தொழில் நுட்பத்தின் மூலம், விரைவான தகவல்கள் மூலம் இவை சாத்தியப்படுகின்றன. இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் கூர்மையடைந்து தீவீரமடையும்போது சோஷஸிசத்தின் மீதான நம்பிக்கை உலகம் முழுவதும்படரும். 
 வாழ்க்கைதான் பிரச்சினைகளை முன் வைக்கிறது. இந்த வாழ்க்கைதான் பிரச்சினைகளை தீர்க்க மனிதர்களை நெருக்குகிறது. இந்த வாழ்க்கைதான் மனிதர்களை சகலத்தையும் உடைத்துக் கொண்டு போராட அழைக்கிறதுபுகைந்து கொண்டிருக்கிறது எங்கும். தீப்பற்றும் காலம் தொலைவில் இல்லை. எம் ஈழவிடுதலைப் போராட்டமும் உலகமயமாக்களின் ஒரு பகுதி காரணங்களால் அழிக்கப்பட்டதே.

இதனை மீறி புலம்பெயர் நாடுகளில் 
ஆழ வேரூண்டி உள்ள 
எம் தமிழின உறவுகளால் எமது மக்களுக்கும் 
எமதுநாட்டுக்கும் 
விடுதலை பெற்று தரமுடியும்.அதற்கு நாம் சில விட்டுகொடுப்புக்களை எமக்கு செய்ய 
வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக