வியாழன், 22 ஜூலை, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல-சர்வதேச நீதிமன்றம்

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொத்தமான 14 நீதிபதிகளில் 10 பேர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.



இந்தத் தீர்ப்பு சட்டரீதியில் கட்டுப்படுத்தாதது, ஆனால், மேலதிக சர்வதேச அங்கீகாரத்துக்கு இது கொசோவாவை ஊக்குவிக்கும்.


செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 வருடங்களின் பின்னர் கொசோவோவாவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர் 2008 இல் சுதந்திர பிரகடனம் செய்தனர்.


பெரும்பாலான மேற்கத்தைய நாடுகள் கொசோவோவாவை அங்கீகரித்தன. ஆனால், செர்பியாவும் அதன் கூட்டாளியான ரஷ்யாவும் அதனை நிராகரித்தன.


தீர்ப்பின் தாக்கங்கள் என்ன?


சர்வதேச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பானது, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறது.


ஏற்கெனவே நிறுவப்பட்டு நிலைபெற்றிருக்கும் ஒரு நாட்டில் இருக்கும் ஒரு தொகுதிமக்கள், மொழியின் அடிப்படையிலோ, தேசியஇன அடையாளத்தின் அடிப்படையிலோ தாங்கள் தனித்துவமானவர்கள் என்று கூறி தாங்கள் வாழ்ந்த ஒரு நாட்டிலிருந்து தாமாகவே பிரிந்து செல்வது சரியா என்பது முதல் கேள்வி.


அது சரியென்றால், தற்போதைய நாடுகள் தங்களின் இறையா ண்மையையும், தமது ஆட்புல ஒருமைப்பாட்டையும் எப்படி பாதுகாத்துக்கொள்வது.


இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களை தான் இன்றைய தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.


கொசோவோ பிரிந்தபோது அதை பல நேட்டோ நாடுகள் ஆதரித்திருந்தன. அதன் பிரிவினையானது எதிர்காலத்தில் உலகின் மற்ற பகுதிகளுக்கான முன்னுதாரணமாக ஆகாது என்று அந்த நாடுகள் அப்போது கூறின.






ஆனால் ரஷ்யா இந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. 2008 ஆம் ஆண்டு ரஷ்ய படைகள் ஜியார்ஜியாவுக்குள் சென்றன. இதன் விளைவாக, தென் ஒசெட்டியா மற்றும் அப்காசியா ஆகிய இரண்டு குட்டி நாடுகள் உருவாக வழிபிறந்தது. ஆனால் இந்த இரு நாடுகளையும் இதுவரை வெகுசில நாடுகள் தான் அங்கீகரித்துள்ளன.


இந்தப்பிரச்சினையானது, எந்த ஒரு நாட்டுக்குமே முடிவெடுப் பதற்கு கடினமான ஒன்று. அதிலும் குறிப்பாக, பிரிவினை இயக்கங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு இது ஒரு கடினமான பிரச்சினை.


அந்த காரணத்தால்தான் ஸ்பெயின் நாடானது, மற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகளின் நிலையிலிருந்து விலகி கொசோவோவின் சுதந்திர பிரகடனத்தை ஏற்க முடியாது என்று அறிவித்தது


கள நிலவரத்தில் இன்றைய இந்தத்தீர்ப்பு உடனடியாக பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரப்போவதில்லை.


செர்பியாவைப் பொறுத்தவரை கொசோவோ மீதான தனது பாத்தியதையை வலியுறுத்துவதைவிட, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது உறவுகளை மேம்படுத்துவது எப்படி என்பது தான் அதன் முக்கிய கவலையாக இருக்கக்கூடும்.


அதேசமயம், கொசோவோவில் இருக்கும் செர்பியர்கள் அதிகம் வாழும்பகுதிகளை கொசோவோவிலிருந்து பிரித்து செர்பியவுடன் இணைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழக்கூடும்.


அதேசமயம், பரந்துபட்ட அளவில் பால்கன் பகுதியிலும், குறிப்பாக போஸ்னியாவிலும், தற்போதைய எல்லைகள் மற்றும் ஏற்பாடுகளின் எதிர்கால நிலைத்த தன்மை குறித்த கேள்விகளை இந்த தீர்ப்பு எழுப்பக்கூடும். ஆனால் அதைபற்றி விவாதிப்பதற்கு மேற்குலக ராஜாங்க அதிகாரிகள் யாரும் தயாராக இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக