சனி, 24 ஜூலை, 2010

நாடும் நடப்பும் ......புலிகளின் வெளிநாட்டு முகவர்களை பிடிக்க இலங்கை அரசு இன்டர்போலின் உதவியை நாடுகிறது ...

வெளிநாடுகளில் தளம் அமைத்து செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கும் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கும் இன்டர் போல் பொலிஸாருடன் இணைந்து இலங்கை புலனாய்வுப் பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



அண்மையில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் விசவமடுவில் கண்டெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவிற்கு தலைமை தாங்கிய கஸ்ரோ என்பவரின் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் நாள் குறிப்புக்கள் ஆகியவற்றிலிருந்து வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சட்டவிரோத நிதி சேரிப்பு குறித்த விபரங்கள் என்பன தெரியவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல், ஆயுதக் கடத்தல், கிழக்கு ஆசியா, மேற்கு ஐரோப்பா, கனடா, ஆபிரிக்கா ஆகியவற்றில் நிதி மோசடி நடவடிக்கைகள் போன்றவற்றில் மீதமுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபடுவது குறித்து முக்கிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் பெற்றுள்ளார்கள் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.


வர்த்தகர்கள் என்ற போர்வையில் ஆயுத கொள்வனவிலும் கப்பல் போக்குவரத்திலும் ஈடுபட்டுள்ள அச்சுதன் என்றும் சுரேஷ் என்றும் அழைக்கப்படும் சிவராசா பிருந்தாபன், பவி என்றழைக்கப்படும் பஹீரதன், நரேன் என்றழைக்கப்படும் நரேந்திரன் ரத்னசபாபதி, ரூபன் என்றழைக்கப்படும் கணேஷரூபன், ஐயா என்றும் ராஜா என்றும் அழைக்கப்படும் பொன்னையா ஆனந்தராஜா ஆகியோரும் மற்றும் சிலரும் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர்களின் நடமாட்டங்களை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.


விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மேற்கொண்டு வந்த கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள், வியாபார முயற்சிகள் தொடர்பான முதலீடுகள் மற்றும் கொடுக்கல் வாய்கல்கள் ஆகியன தொடர்புபட்ட பல்வேறு ஆவணங்கள் விசுவமடுவில் கண்டெடுக்கப்பட்டவற்றில் அடங்குகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.


ராஜா என்றும் பொன்னையா என்றும் அழைக்கப்படும் பொன்னையா ஆனந்தராஜா 2002-2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நிதி, கொள்வனவு, கப்பற் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் தற்போது பிரெஞ்சு கடவுச் சீட்டை வைத்திருப்பவருமான அச்சுதன் என்றழைக்கப்படும் சிவராசா பிருந்தாபன் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பில் தீவிரமாக பணியாற்றிய பின்னர் தற்போது எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.


தற்போது தூர கிழக்கிலும் கனடாவிலும் வசித்துக் கொண்டு விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பில் பணியாற்றி வரும் இவரது சகோதரர்களின் ஈடுபாடுகள் பற்றியும் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதற்கிடையில், ரஷ்ய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஐரோப்பாவிலிருந்து செயற்பட்டுவரும் நரேந்திரனை இன்ரர்போல் பொலிஸார் எந்நேரமும் கைது செய்யலாம் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் இரண்டு உயர்தர விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் விடுதலைப் புலி அலுவலகங்களை நடத்திவருவதாக தெரியவந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் விசுவமடுவில் மறைவிடத்தில் இருந்து மீட்கப்பட்ட நிதி தரவுகளிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி சட்டவிரோதமானதும் சட்டரீதியானதுமான பல தொழில் துறைகளில் முதலீடு செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் நிதிகள் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


மேலும் பல எச்சரிக்கை அறிவித்தல்கள் வெளியிடப்படும் என்றும் இன்ரர் போல் பொலிஸாரினதும் அக்கறை காண்பிக்கும் அரசாங்கங்களினதும் உதவியுடன் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக