சனி, 24 ஜூலை, 2010

சிவந்தனின் நடைபயணம் ஆரம்பித்தது..

கறுப்பு ஜுலையை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்,
தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள், பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும். முகாம்களிலுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும்,
மனித உரிமைகளை மதிக்கும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி இடம்பெற்றது. பேரணியைத் தொடர்ந்து லண்டனில் இருந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்துள்ளது.


முன்னதாக இரவு 10:00 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள ரொட்ஹில் (Tothill) வீதியில் இருந்து ஆரம்பித்த பேரணி, 10:45 அளவில் பிரித்தானியப் பிரதமரது இல்லமான இல.10 டவுணிங் ஸ்றீற்றை (Downing Street) சென்றடைந்தது.


அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானிய இளையோர் அமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசு, அக்ட் நவ் (Act now), பிரித்தானிய தமிழர் பேரவை, தென் தமிழீழத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதியுமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, மற்றும் நடை பயணத்தை ஆரம்பித்துள்ள சிவந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.


பேரணியில் கலந்து கொண்டோர் ஆரம்பத்தில் தமது கோரிக்கைகளை முன்வைத்து பாடல்களைப் பாடிச்சென்றனர். பின்னர் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால் இரவு நேரம் என்றும் பாராது சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனக் குரலெழுப்பிச் சென்றனர்


கறுப்பு ஜுலை என்பதாலும், தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கைகளை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தவும் இரவு நேரம் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும், குழந்தைகளைத் தாங்கிய தாய்மார், சிறியவர்கள், பெரியோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் மெழுகுதிரிகளையும், ஒளிவிளக்குகளையும், பாதாகைகளையும், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஏந்திச் சென்றதுடன், தமது கோரிக்கைகளை அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் பிரித்தானியா மற்றும் ஏனைய நாட்டு மக்களிற்கு வழங்கிச் சென்றனர்.


பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற உரைகளையடுத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்தது. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இந்த நடை பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்த அதேவேளை, அங்கு கூடியிருந்த மக்கள் சிவந்தனுக்கு தனது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.


இவர் பிரித்தானியக் கடற்கரையான டோவரைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்ஸின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், அங்கிருந்து பரிஸ் நோக்கி நடந்து, பின்னர் ஜெனீவா நோக்கிச் செல்ல இருக்கின்றார்.


சிவந்தனுடன் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து உறவுகள் இணைந்து நடந்து செல்ல வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 6ஆம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) பிற்பகல் 2:00 மணியளவில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும், மனுக் கையளிப்பு நிகழ்விலும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழ் மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக