சனி, 24 ஜூலை, 2010

குழந்தைகளையும் தாய்மார்களையும் விடுதலை செய்க ,,,

வெலிக்கடைச் சிறையில் சொல்லொணாத் துயரங்களுடன் இருந்துவரும் 50 பெண்களையும், அவர்களது குழந்தைகளையுமாவது உடனடியாக விடுதலை செய்யுமாறு அரிய நேந்திரன் எம்.பி மஹிந்தவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.




அவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டிருப்பவை வருமாறு:
எமது நாட்டில் 30 வருடங்களாக இடம் பெற்று வந்த ஆயுதப் போராட்டம் கடந்த வருடம் மே 19ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் அப்போராட்ட காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வேறு மாவட்டங்களிலும் வசித்துவந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சுமார் 765 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கீழ்க் குறிப்பிடப்படும் சிறைச்சாலைகளில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


நியூ மகஷின் சிறைச்சாலையில் 115 பேரும், வெலிக்கடை ஆண்கள் பிரிவில் 18 பேரும், வெலிக்கடை பெண்கள் பிரிவில் 55 பேரும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 340 பேரும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 26 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் 48 பேரும், வவுனியா சிறைச்சாலையில் 27 பேரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 30 பேரும், திருகோணமலை சிறைச் சாலையில் 40 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 35 பேரும், போகம் பறைச் சிறைச்சாலையில் 16 பேரும், பதுளை சிறைச்சாலையில் 15 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


குறிப்பிடப்பட்ட 765 பேரில் வெலிக் கடைப் பெண்கள் பிரிவுச் சிறையில் 50 பெண்களும், 5 குழந்தைகளுமாக மொத் தம் 55 பேர் உள்ளனர். அவர்களின் முழுவிவரம் அடங்கிய பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


தாய்மார்களின் பரிதாப நிலை


அவர்களில் பின்வரும் 5 தாய்மார் குழந்தைகளுடன் மிகவும் பரிதாபமான வாழ்க்கை நடத்துகின்றனர்.
பூபாலசிங்கம் ஜெயந்தினி 27 வயது, கந்தலிங்கம் தங்கனா 24 வயது, மயில்வாகனம் அன்னலெட்சுமி 31 வயது, பாலசிங்கம் லதாஜினி 34 வயது, ரவிச்சந்திரன் வஜிதா 39 வயது.


குழந்தைகளின் பெயர்கள் விவரம் வரு


விருஷன் 1 1/2 வயது, துவாரகன் 2 வயது, குணபாலன் 5 வயது, கேதினி 3 வயது, ஆரணி 3 வயது. இவர்கள் கைக்குழந்தைகளுடன் கண்ணீர் சிந்த சொல்லொணாத் துயரில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். குழந்தைகளுக்கு போஷாக்குமிக்க பால் இன்றியும், நோய் தொற்றும் அபாயத்துடனும் அசுத்த வாழ்க்கையை நடத்துவதுடன் இவர்களில் சிலர் அங்கவீனர்களாகவும் உள்ளனர்.


இக் குழந்தைகள் தமது தகப்பனையும், உறவுகளையும் கேட்டுப் பரிதவிக்கும் ஏக்கக் காட்சிகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. இதனைவிட சிறையில் உள்ள இந்தப் பெண்களில் அநேகமானவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டும், உள ரீதியாகத் தாக்கத்திற்கு உள்ளாகியும், பல்வேறு நோய்த் தாக்கங்களை அனுபவித்தும் தாங்கள் எப்போது விடுதலை செய்யப்படுவோம் என எண்ணி ஏங்கித்தவிக்கின்றனர்.


மனநோய்க்கு ஆளாகும் ஆபத்து


இந்தப் பெண்கள் சிறைச்சாலையில், கடந்த 2008 கார்த்திகை 26ஆம் திகதி தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராசா ராஜேஸ்வரி என்னும் (28 வயது) மனநோயால் பாதிக்கப்பட்ட தாய் தற்போது இந்தச் சிறைச்சாலையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என அறிகின்றேன்.


இந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட மன நோய்த் தாக்கம் அங்குள்ள ஏனைய பெண்களுக்கும் ஏற்படுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
கடந்த கால யுத்தத்தின்போது பல உதவிகளைச் செய்தவர்களும், நேரடியாக யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களும், யுத்தத்திற்காக சர்வதேச ரீதியாகச் செயற் பட்டவர்களும் தங்களால் அரசியல் தலைவர்களாகவும், சமூக நற்பிரஜைகளாகவும் மாற்றப்பட்டதனை நான் மிகவும் பாராட்டு கிறேன்.
அதுபோல் எந்த யுத்தத்திலும் சம்பந்த மில்லாமல் சந்தேகத்தின்பேரில் பல வருடங்களாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் சுமார் 765 சிறைக் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் எனத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


பெண்கள், குழந்தைகளையேனும் விடுதலை செய்க


பொதுமன்னிப்பு வழங்குவதில் தங்களுக்குச் சிரமங்கள் உள்ள பட்சத்தில் அவர்களைப் பிணையிலேனும் விடுதலை செய்து நீதி விசாரணை மேற்கொள்ளும் வாய்ப்பையாவது வழங்குங்கள் என மன்றாட்டமாகக் கேட்கின்றேன். இவ்வாறு எழுதியுள்ளார் அரியனேந்திரன் எம்.பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக