செவ்வாய், 7 டிசம்பர், 2010

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தாக்கப்பட்டுள்ளார்

கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, லண்டனில் இருந்து கொழும்பு திரும்பியபோது இன்று மாலை வானூர்தி நிலையத்தில் வைத்து காடையர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இவர், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள், சிங்கள மக்கள். ஊடகவியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியபோது தாக்கப்பட்டுள்ளார்.




வானூர்தி நிலையத்திற்கு வெளியே விக்கிரமபாகுவின் கட்சி உறுப்பினர்கள், சட்டவாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தவேளை, அங்கு சென்ற 20 முதல் 30 வரையிலான சிங்கள காடையர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.


தமது தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க, விக்கிரமபாகு நாட்டைப் பிரிக்க முயல்வதாகவும், துரோகி எனவும் கெட்ட வார்த்தைகளால் தூற்றியவாறு காடையர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலின்போது ஈ நியூஸ் ஊடகவியலாளர் சாந்த ஜயசூரிய உட்பட மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காடையர்களின் தாக்குதலில் இருந்து விக்கிரபாகுவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டதால் அவர் மிக மோசமான தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிங்கள ஊடகர் ஒருவர் கூறினார்.


முன்னர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், தற்போதையை சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் வானூர்தி சேவை இருந்தது. தற்பொழுது வானூர்தி மற்றும் துறைமுக அமைச்சுக்கள் மகிந்த ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மகிந்த குடும்பத்தின் ஆதரவாளர்களே வானூர்தி நிலையத்தில் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.


கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பணியாற்றும் காடையர்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகவும், இதுவொரு திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.


என்.எஸ்.எஸ்.பி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் மகிந்தவிற்கு எதிரான பரப்புரையிலும், செயற்பாட்டிலும் லண்டனில் ஈடுபட்டிருப்பதாக சிங்கள இனவாத அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் கடந்த சில நாட்களாகக் கண்டனம் வெளியிட்டுவரும் பின்புலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக