செவ்வாய், 7 டிசம்பர், 2010

இன்னொரு "கிட்லர்" பிறப்பே புலிகளின் இராணுவ தோல்விக்கு காரணமாக இருந்தது.

ஸ்ரீலங்கா இராணுவம் ஆளனி,படைக்கலன்களின் பெருக்கம் மற்றும் அதிகூடிய(பரந்த கொலைவெறி) சூட்டு வலு காரணமாக , உள்ளுர் வளங்களுடன் மற்றும் பெருளாதார, மருத்துவ நெருக்கடியின் மத்தியில் போராடிய அமைப்பை வெற்றிகண்டுள்ளமையை வெற்றி என்று கூறலாமா? .
சிலாவத்துறையில் ஆரம்பித்த  போரானது எந்த இராணுவ தந்திரத்தை பின்பற்றியதாக அல்லது ஏதாவது புதிய தந்திரத்தை பின்பற்றியதாக இருந்ததா? போர் ஆரம்பித்த முதற் கொண்டு இடைவிடாத தாக்குதல் முறையையே படைகள் பின்பற்றி வந்தன. மேலும் பரவலான தாக்குதல் முறைகள் இதில் விமான குண்டுத் தாக்குதல்கள் முழத்திற்கு முழம் இடம் பெற்றதாகும்.
ஏற்கனவே ஊடுருவியிருந்த(ஒப்பந்த காலத்திலோ அதற்கு முன்னரோ) படையினர் தகவல்களை துல்லியமாக வழங்கியிருந்ததினால் விமானத் தாக்குதல்கள் சில வெற்றியளிப்பவையாக இருந்தது. மேலும் வீதியோர கிளைமோர் தாக்குதல்களையும் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்டதினால் மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து இருந்தது. ஆழ ஊடுருவும் படையணியினர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவது மிகக் கடினமான ஒரு விடயமல்ல.
ஏற்கனவே மடுவை அண்டிய காடுகள் ஊடாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொருட்கள் எடுத்து வரும் செயற்பாடுகள், இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் மக்கள் தப்பிச் செல்லுதல் போன்றன இடம் பெற்று வந்தன. இந்த காடுகளை அண்டிய எல்லைகளில் புலிகளின் காவலரண்கள் இருக்கவில்லை. யானைகள் மற்றும் காட்டு மிருகங்கள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இவை காணப்பட்டன.இராணுவத்தைப் போல் நடு காட்டில் முழு நீளத்திற்கும் கம்பி வேலி அடித்து காவலரன் அமைத்து இரவு பகல் கடமையில் ஈடுபடக் கூடிய வசதி புலிகளிடம் இருக்கவில்லை.
ஆகவே தான் 1996 ஆம் ஆண்டு குறிப்பிட்ட காடுகளை அண்டிய பகுதியில் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தை சென்ற உலங்குவானூர்தி தொழிநுட்ப கோளாறு காரணமாக தரை இறங்கியதும் பின்னர் அந்தப்பகுதி வாசி ஒருவர் மனிதாபிமானமாக நேர்மையாக நடந்துகொண்டதினால் அமைச்சர் கால் நடையாக இராணுவ பகுதியை சென்றடைந்தமையும்,அமைச்சரால் அந்த தமிழ்மகனுக்கு எதிர்கால நல்வாழ்வு பற்றி நன்றியாக கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாமையும் ஞாபகம் இருக்கக் கூடிய கதைகள்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் புலிகளின் பகுதிக்குள் படையினர் ஊடுருவது தொடர்பகாக ஆராயப்பட்டு அதற்கென ‘ஆழ ஊடுருவும் படையணி” பொரளையில் கொல்லப்பட்ட மேஜர் முத்தலிப் தலைமையில் அமைக்கப்படது.   இவை எல்லாம் கோட்டபாயவுக்கோ அல்லது சரத் பென்சேகாவுக்கோ உதித்த புத்திகள் அல்ல.
சமாதான கால பகுதியில் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்குவது போல பாசங்கு செய்து புலிகளின் அமைப்புக்குள் ஊடுருவிய ரணில் அரசு விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை தாக்கி அழித்ததுடன் முக்கிய தாக்குதல் தளபதியான கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்தமை போன்ற உறுதியான அடிப்படை வெற்றிகளின் விளைவுகளும், இந்தியா சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தொழில்நுட்பவியல் உதவிகளும் ஒன்று குவிந்தமை புலிகளின் இராணுவ கட்டமைப்பை சிதைக்க உதவியது.
இதற்கு மேல் கடந்த சுமார் 3 வருடத்திற்குள் பதவியேற்ற சரத் பென்சேகாவின் இராணுவத் தலைமையோ, பாதுகாப்பு செயலாளரின் உத்திகளோ அல்லது ஜனாதிபதியின் திறமையான திட்டமிடல்களோ புலிகளின் இராணுவ பலத்தை சிதைத்தது என்று கருத முடியாது.
முப்பது வருட போரின் இறுதி நான்கு வருடங்களில் ஸ்ரீங்கா அரசு மனித உரிமைகள் மிகவும் மோசமாக மீறப்பட்டமையானது மக்களை வெகுவாக பாதித்தது. இதனால் மக்களின் விடுதலை உணர்வும் பாதிக்கப்பட்டதுடன், போராட்ட நிலையிலிருந்தும் ஒதுங்கினர். அதிலும் மாவிலாறில் போர் ஆரம்பித்து முதற் கொண்டு பல்வேறு அமைப்புக்கள் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பல எச்சரிக்கைகளும் கவலைகளும் வெளியிடப்பட்ட போதும் அவை கணக்கில் எடுக்கப்டாமல் ஸ்ரீங்கா அரசு  இடைவிடாத போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
இதனிடையே கருணாவின் பிரிவு முதற் கொண்டு தொடர் தோல்விச் செய்திகளை தமிழ் மக்களையும், ஈழ விடுதலை உணர்வாளர்களையும் உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் தொடர் பிரசாரங்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டு வந்தது.  இதற்கு சாதகமாக கருணாவின் முழு கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு பகுதியை முதலில் கைப்பற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வெற்றிச் செய்தியை அறிவித்து, அது தொடர்பான காட்சிகளை அடிக்கடி தேசிய தொலைக்காட்சிகளில் காண்பித்து, நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை இராணுவ மயமாக்கியதுடன், இன்னுமொரு பகுதியினரை உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கியது.
இறுதிக்கட்ட போர் மாவிலாற்றில் ஆரம்பமாகியது முதல் முள்ளியவாய்க்கால் வரை கண்மூடித் தனமான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். இதில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்,
கண்மூடித்தனமான இத்தாக்குதல்களை குறைந்த ஆளனியுடன், குறைந்தளவு இராணுவ தளபாடங்களுடன், சுமார் 3 வருடங்கள் விடுதலைப் புலிகள் சமாளித்துள்ளார்கள் என்பது தான் முக்கிய விடயம்.
அள்ளிவீசியெறிந்த குண்டுகளின் புறத்தல், கட்டவிழ்க்கப்பட்ட பட்டிகளைப் போல் கவச வாகன சகிதம் வருகை தந்தவர்களை தடுத்து நிறுத்தி பல உக்கிர தாக்குதல்களையும் புலிகள் மேற்கொணடனர்.
இதற்கென புலிகளால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளும் தடுப்பு மண் அணைகளும் பல இராணுவ நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியது.இறுதி வரை மனோதிடத்துடன் போராடிய புலிகளுக்கு பல நாடுகளாலும் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட தொழிநுட்ப உதவிகள் பெரும் சாவலாக அமைந்தது.
ஒவ்வொரு உறுப்பினரினதும் அசைவினை மிகத் துள்ளியமாக அவதானிக்கக் கூடிய கருவிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. புலிகள் பயன்படுத்தும் வாகனத்தின் இலக்கத் தகடுகளைக்கூட அவதானிக்கக் கூடிய தொழில்நுட்பம் அரசிற்கு பிற நாடுகள் வழங்கியிருந்தன..
மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியில் இருந்த மக்களுக்கு பொருளாதார நெருக்கடிகளும், மருத்துவ நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டமை புலிகளையும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இப்படியான ஒரு சூழலில் நிகழ்ந்த இப் போராட்டத்தில் மீட்புப்பணிகளை இறுதிவரையும் புலிகள் மேற்கொண்ட வண்ணமே இருந்தனர். வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிட்ட இந்த போரில் இராணுவத்தரப்பு மேற்கொண்ட உத்தி இடைவிடாத தாக்குதல் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல். அதாவது ‘தேனியை கொட்டுடன் கொழுத்தி தேன் எடுக்கும்” முறை போன்றே இப்போர் நடந்து முடிந்துள்ளது..
o இதில் பிற நாடுகள் கற்றுக் கொள்வதற்கு என்ன உள்ளது?
o இன அழிப்பு எப்படி என்றா?
o அல்லது தாம் வழங்கிய ஆயுதங்களின் பயன்பாடு எவ்வாறிருந்தது என்பதின் மதிப்பீட்டிற்கா?
o அல்லது ஸ்ரீங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு வசதியாக ‘பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட அரசு” என்ற கௌரவத்தை கொடுப்பதற்காகவா?
பிற நாடுகள் இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள கதையானது நிச்சயமாக ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்களை உலகம் மறப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே நோக்க இடமுண்டு.
இவ் இறுதிக் கட்ட போர் ஆரம்பித்த நாள் முதற் கொண்டு புலிகள் மீது அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டை அரசு சுமத்தியதுடன், புலிகள் தாக்கியதினால் தான் தாம் தாக்கியதாகவும் கூறிவந்தது.
இந்தக் காலப் பகுதியில் உள்ளுர் ஊடகவியலாளர்களை அடக்கப்பட்ட நிலையில், பிரபல வெளிநாட்டு ஊடகங்களில் அரச அறிக்கைகள் முதன்மை இடத்தை பிடித்திருந்தமையும் அரசாங்கத்திற்கு போர் பிரசாரத்திற்கு சிறந்த வசதியை ஏற்படுத்தியிருந்தது..
மேலும் சில முக்கிய சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளும் ஊடகங்களுடன் உடனுக்கு உடன் தொடர்பு கொள்ளாமை அல்லது தொடர்பு கொள்ள வசதி கிடைக்காமையானது அரசிற்கு மேலும் சாதக நிலைமையை உருவாக்கியிருந்தது. அதாவது அரசிற்கு கிடைத்த அல்லது தனது அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த சகல வளங்களையும் போருக்கு என அரசு முதன்மைப்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக உள்ளுர், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அரசின் சட்ட திட்டங்களுக்கு அடிபணிய வேண்டி இருந்ததுடன், சில தொண்டர்கள் கொல்லப்படவும், நாட்டைவிட்டு வெளியேறவும், சிலரின் பயணஅனுமதிகள் ரத்துசெய்யப்படவும் நேரிட்டது. இவ்வாறு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சகல தரப்பினரையும் அடுக்கு முறைக்குட்படுத்தியே இந்தப் போரில் அரசு வென்றது.
இன்னொரு கிட்லர் பிறப்பே புலிகளின் இராணுவ தோல்விக்கு காரணமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக