செவ்வாய், 7 டிசம்பர், 2010

ஊடக சுதந்திரம். இலங்கையானது ஆசியாவின் ஆச்சரியம்.

ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த விடயமாக இருப்பது ஊடகத்துறையாகும். ஊடகத்துறையானது ஒரு நாட்டை நல்ல வழியில் அல்லது. கெட்டவழியில் இட்டுச் செல்கின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. இலங்கையில் ஒரு சுதந்திரமான ஊடகம் இருந்ததா என்பது தொடர்பில் ஒரு கேள்விக்குறியே இருக்கின்றது.ஏனெனில் .துரதிஷ்டவசமாக எமது நாட்டில் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ரிச்சட் சொய்ஸா தொடக்கம் 2009 மார்ச் மாதம் 6 ஆம் திகதி சதிமதன் வரையும் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
 படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர்களில் 34 தமிழ் ஊடகவியலாளர்களும் 2 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றார்கள். எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவந்ததற்குப் பிற்பாடுதான் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்
.முன்னாள் ஜனாதிபதிகளான அமரர் ஆர். பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் 2 ஊடகவியலாளர்களும் திருமதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்கள். உலகில் 1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்றுவரை 580 ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்கள்.இத்தொகையுடன் எமது நாட்டில் கொலைசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்த்தால் அது 7.1 சதவீதமாக இருக்கின்றது.எனவே அதிகளவான ஊடகவியலாளர்கள் எமது சிறிய நாடான இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையானது ஆசியாவின் ஆச்சரியம்
தற்பொழுது ஓர் ஊடகம் சுதந்திரமாக இயங்குவதற்கென செய்தித் தணிக்கை செய்யப்படுவது இல்லை.எதனையும் எழுதலாம்.எவ்வாறும் எழுதலாம் என்று சொல்கின்றார்கள் பத்திரிகைத் தணிக்கை பல வருடங்களாக இருந்தபொழுதிலும்கூட தற்பொழுது அது இல்லையென்று கூறப்படுகின்றது.ஆனால்,அதற்கு மாற்றமாக வெவ்வேறு விதமாக வழிகளில் ஊடகவியலாளர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள்.
அதாவது ஓர் ஊடகத்தில் ஊடகவியலாளன் ஒருவன் செய்தியை எழுதுகின்றபோது அல்லது உண்மையை வெளியிடுகின்றபோது அல்லது சுதந்திரமாக ஒரு கருத்தை வெளியிடுகின்ற போது அவன் தாக்கப்படுகின்றான் அல்லது காணாமல் போகின்றான் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றான். தற்பொழுது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஓர் ஊடகவியலாளரான திஸ்ஸநாயகத்தை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.சுதந்திரமாக தனது கருத்துகளை எழுதியதன் காரணமாக அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உலகிலுள்ள அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் தற்பொழுது செய்தியை எழுதுகின்ற ஆசிரியர் அல்லது செய்தியை வெளியிடுகின்ற ஊடகவியலாளர் கொலை செய்வதையும் அச்சுறுத்துவதையும் விடுத்து அந்த ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.உதாரணமாக "மஹாராஜா' நிறுவனம் தாக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலே இருக்கின்ற "உதயன்' பத்திரிகை நிறுவனம் பலமுறை தாக்கப்பட்டிருக்கின்றது. அன்று தினக்குரல் பத்திரிகைகூடத் தாக்கப்பட்டதாகச் செய்திவந்தது. ஆகவே இவ்வாறாக ஊடகவியலாளர்களுக்கு அப்பால் ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுகின்றபோது அந்த ஊடக நிறுவனங்களை நடத்துகின்ற உரிமையாளர்கள் பத்திரிகையாளர் மாநாடுகளுக்குச் செல்கின்ற தங்களுடைய ஊடகவியலாளர்களிடம் பத்திரிகை மாநாடுகளில் பொறுப்பான பிரச்சினையாகக்கூடிய ஒரு கேள்வியையும் கேட்காமல் அவர்கள் சொல்வதைக் கிளிப்பிள்ளைபோல் கேட்டுக்கொண்டு வந்து எங்களுடைய பத்திரிகைக்கு எழுதுங்கள் என்று சொல்லிக் கொடுக்கின்ற ஒரு நிலைமை இன்றுள்ளது.அதனால் உண்மைத்தன்மையான செய்திகள் வெளியிட முடியாமல் ஊடகவியலாளர்கள் இன்று திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கருத்தைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும் வெளியிடுவதற்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு.கட்டுப்பாடுகளின்றி தேச எல்லையைக் கடந்து எந்தவோர் ஊடகத்தின் மூலமாகவும் தகவல்களைத் திரட்டுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு என்று 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி ஐ.நா. சபை வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான நம்பிக்கைப் பிரகடனத்தின் 10 ஆவது சரத்தின் 11 ஆவது பிரிவில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இது ஐ.நா. சபையின் மனித உரிமை சாசனத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால்,இந்த விடயத்தை இலங்கையில் பேணிப்பாதுகாக்கின்றார்களா என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அண்மைக்காலத்தில் ஒரு வெட்கக்கேடான சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.அதாவது உலக செய்தி நிறுவனமான பி.பி.சி. ஊடகச் சேவை தனது செய்திகளை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் எப்.எம். வானொலி ஊடாக வெளியிடவேண்டும் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்திருக்கின்றது.ஆனால் இன்று என்ன நடக்கின்றது?கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினம் செய்தியை அவர்கள் ஒலிபரப்புவார்கள் என்பதற்காக அன்று அது தடை செய்யப்பட்டிருக்கின்றது. இன்று உலகம் சுருங்கி இருக்கின்றது. ஊடகத்துறை வளர்ச்சியடைந்திருக்கின்றது. நிச்சயமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மட்டும்தான் பி.பி.சி.செய்தியைக் கேட்கவேண்டும் என்பதல்ல. ஒவ்வொரு வீட்டிலும் இணையத்தள வசதி இருக்கின்றது.முடிந்தால் அதன் மூலம் செய்திகளை அறியலாம். இவ்வாறு தன்னை ஒரு சுதந்திர ஊடகம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஓர் ஊடகம் இன்னோர் ஊடகச் செய்தியைத் தடை செய்து கொண்டிருக்கின்றது என்றால் எந்த வகையிலே நாங்கள் ஊடகச் சுதந்திரத்தைப் பற்றி பேச முடியும்? எந்த வகையிலே சமாதானத்தைப் பற்றிப்பேச முடியும் எனவே இதனையும்  ஆசியாவின் ஆச்சரியமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது.
இதைவிட செய்தித் தணிக்கை அமுல்செய்யப்படாதபோது சுதந்திரமாக எழுதப்படுகின்ற ஒரு செய்தி பிழையாக இருந்தால் அந்தச் செய்தியைத் திருத்தி மறுபிரசுரம் செய்யலாம்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகர்
சுவாமி உண்மையை எழுது உண்மையாகவே எழுது,ஏசுவார்கள்,எரிப்பார்கள் என்றுதான் ஒரு காலத்திலே கூறியிருந்தார். யோகர்சுவாமி காலத்திலே ஏசுவதும் எரிப்பதும் இருந்ததன் காரணத்தினால்தான் அவர் உண்மையை எழுது உண்மையாகவே எழுது என்று கூறியிருந்தார்.ஆனால் இப்பொழுது உண்மையை எழுதினால் உண்மையாக எழுதினால் ஏசுவதுமல்ல எரிப்பதுமல்ல ஒன்றில் எழுதுபவர்கள் காணாமல் போகின்றார்கள் அல்லது சுடப்படுகின்றார்கள் அல்லது கொலை செய்யப்படுகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக