செவ்வாய், 7 டிசம்பர், 2010

புலம்பெயர் தமிழீழ விடுதலைத் தளத்தைச் சிதைக்கும் திட்டத்தின் முதல் அடியாகவே சிங்களப் புலனாய்வாளர்களால் ‘தமிழர் நடுவம்’ - சுவிசிலிருந்து கதிரவன்

‘வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் காணவும், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை அறிந்துக் கொள்ளவுமே கே.பியை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. கேபியை பயன்படுத்தி, வெளிநாட்டு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது’ – சிங்களத்தின் அமைச்சர் விமல் வீரவன்ச.........



‘தர்மத்தைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்கிறது பகவத் கீதை. ஈழத் தமிழர்களது இன்றைய நிலை அதற்கு உதாரணமாக உள்ளது.
தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ஈரான் என நீண்டு செல்லும் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவிகளுடன் நொருக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் களமுனை இழப்பிற்குப் பின்னர், தமிழீழ மக்கள் வாய் பேச முடியாதவாறு மௌனிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோரை இழந்த பிள்ளைகளும், கணவனை இழந்த மனைவியும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும், அவையவங்களை இழந்த தமிழர்களுமாகத் தமிழீழம் ஊனப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன தங்கள் உறவுகள் திரும்பி வரமாட்டார்களா? என்ற ஏக்கம், புதையுண்டு போன உறவுகளின் கல்லறைகளில் கதறி அழும் நாள் வராதா என்ற கண்ணீரும் தீருவதற்கான எந்த அறிகுறியும் அற்றவர்களாகத் தமிழர்கள் நடைபிணங்களாக்கப்பட்டுள்ளனர்.
சாட்சிகளற்ற போர்க் குற்றங்களும், படுகொலைகளும் நிகழ்த்தி முடிக்கப்பட்ட திமிரில் சிங்கள தேசம் தமிழினத்தின் அழிவைப் பெரு விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தது. இந்த அழிவுகளுக்கெல்லாம் பக்கத் துணையாக நின்ற காந்தி தேசம் சிங்களத்தின் குரூர வெற்றிப் பெருமிதத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு, மகிந்த ராஜபக்சேயை தனது நாட்டுக்கு அழைத்து முதல் மரியாதை வழங்கிக் கௌரவித்தது.


ஆனாலும், சிங்கள அரசின் நிம்மதியைக் கெடுப்பது போல், தொடர்ந்து வெளிவரும் கோரமான படுகொலைக் காட்சிகளும், கொடூரமாக அரங்கேற்றப்பட்ட பாலியல் கொடூரங்களும் சிங்கள ஆட்சியாளர்களைக் கிலி கொள்ள வைத்துள்ளது. அடுத்து என்ன காட்சிகள் வெளிவருமோ? என்ன ஆதாரங்கள் அம்பலத்திற்கு வருமோ? என்ற அலற வைத்துள்ளது. சிங்கள தேசம் நடாத்தி முடித்த இனக்கொடூரங்களால் கோபம் கொண்ட பிரித்தானிய தமிழர்கள் அங்கு விஜயம் செய்த சிங்களத்தின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேக்கு பெரும் சங்கடங்களையும், அதிர்ச்சிகளையும் அள்ளிக் கொடுத்து, அங்கிருந்து விரட்டப்பட்டதற்கு ஒப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
‘தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்ற நம்பிக்கை தமிழர் மத்தியில் மீண்டும் உருவாகும் அளவிற்கு மேற்குலகின் இலங்கை தொடர்பான அணுகுமுறையும் மாற்றம் பெற்று வருகின்றது. ஏற்கனவே, திட்டமிடப்பட்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலஸ்டேயார் பர்ட்டின் அவர்கள் தனது இலங்கைக்கான பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.
இந்த உலக மாற்றங்கள் எல்லாம் புதிய நம்பிக்கையையும், தென்பையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கிவரும் வேளையில் சிங்களத்தின் திட்டங்கள் வேகம் பெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் வரை ஈழத் தமிழர்களது பேரழிவுக்கு ஓயாமல் உழைத்த சிங்களத்தின் புலனாய்வுத் துறை மேற்குலகை மையப்படுத்தித் தனது நகர்வினை வேகப்படுத்தியள்ளது. அதன் முதல் இலக்காக பிரான்ஸ் தேசமே தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் எதிர்பார்ப்பது போல் சிங்களத்துப் புலனாய்வாளர்கள் சிங்களவர்களாக இருக்கப் போவதில்லை. மாறாக, தமிழீழ மக்கள் மீதான இன அழிப்பிற்கு முக்கிய அனுசரணை வழங்கிய ஒட்டுக் குழுவினருடன் இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரும் மூளைச் சலவை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு அரசியல்வாதிகள் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்.
கடந்த 03 ஆம் திகதி ஊடகவியலாளர் மத்தியில் பேசிய சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ச ‘வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் காணவும், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை அறிந்துக் கொள்ளவுமே கே.பியை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. கேபியை பயன்படுத்தி, வெளிநாட்டு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது’ என சிங்களத்தின் திட்டத்தைப் போட்டுடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கே.பி.யின் குருநாதர் கோத்தபாய ராஜபக்ச உடனடியாகவே விமலது கூற்றை அவசரமாக மறுத்துள்ளார்.
ஆக மொத்தத்தில், சிங்கள அரசின் புதிய போர்முனை மேற்குலகில் முனைப்புப் பெற்று வருவது உறுதியாகியுள்ளது. இந்தப் போர் முனைப்பின் பங்குதாரராக கே.பி. உள்ளார் என்பது விமல் வீரவன்ச மூலமாக வெளிவந்துள்ளது. கே.பி.யின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியினை புலம்பெயர் கே.பி. குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். கே.பி. குழுவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகள் மிக அவதானமாகக் கவனிக்கப்பட வேண்டியதான தளமாக உள்ளது. பிரான்சில் தமிழ்த் தேசியத்தின் இயங்கு சக்தியாக நிலைத்து நிற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சிதைக்கும் நோக்கத்தோடு சிங்கள அரசின் திட்டப்படி உருவாக்கப்படும் ‘தமிழர் நடுவம்’ என்ற சதியின் பின்னணியில் இந்த சக்திகள் இருப்பதான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பெரும் சோதனை அவர்களுக்கு மத்தியிலிருந்தே உருவாக்கும் முயற்சியில் சிங்களம் வெற்றி பெற்றுள்ளது. கருணா குழு மூலமாக தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தை தமிழீழ மண்ணில் சிதைத்தது போலவே, கே.பி. குழு மூலம் புலம்பெயர் தமிழீழ விடுதலைத் தளத்தைச் சிதைக்கும் திட்டத்தின் முதல் அடியாகவே ;தமிழர் நடுவம்’ என்ற பொறி வைக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் வரைக்கும், அதன் பின்னரான இன்றைய இந்த விநாடி வரை பிரான்ஸ் நாட்டில் தமிழீழ விடுதலைக்கான இயங்கு சக்தியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே உள்ளது. பிரான்சில் நடைபெற்ற போராட்டங்கள், வணக்க நிகழ்வுகள், தமிழ்த் தேசியத்திற்கான பிரச்சாரங்கள், நடை பயணங்கள் என்ற அத்தனை நிகழ்வுகளையும், நடைபெற்று முடிந்த மாவீரர் தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் உப அமைப்புக்களும், மக்கள் பேரவையுமே நடாத்தி முடித்தன. இனி வரும் காலங்களும் அந்த அமைப்புக்களின் அர்ப்பணிப்புக்காகவே காத்திருக்கின்றன. இந்த நிலையில், ‘தமிழர் நடுவம்’ என்ற பொறி தமிழ்த் தேசிய சிதைவுக்கான தளமாக உருவாக்கப்படுவது காரணம் கூற முடியாத சதி நடவடிக்கையாகவே தமிழர்களால் நோக்கப்படுகின்றது.
இன்றைய பொழுதில், தமிழீழ விடுதலைக்கும், தமிழீழ மக்களுக்கும் தேவையானது புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபட்ட போராட்டமே. அதை சிங்கள தேசமும் நன்றாகவே உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடே ‘தமிழர் நடுவம்’ என்ற சிலந்தி வலை. தமிழர்கள் தமக்குள் பிளவு பட்டு மோதிக்கொண்டால், தம்மீதான அழுத்தங்கள் வீச்சுக் குறைந்துவிடும். காலப்போக்கில், தென் தமிழீழம் போல் நாட்டுக்கு ஒரு கருணாவும், பிள்ளையான்களும் உருவாக்கப்படுவதற்கான ‘மீனகம்’ ஆக ‘தமிழர் நடுவம்’ உருவாக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்காலின் பின்னர் இயங்காத மனிதர்களும், நகராத அமைப்புக்களும் இணைந்து சிங்கள தேசத்தின் நெறிப்படுத்தலுடன் நடாத்தும் இந்த நாடகத்தை முறியடிக்க வேண்டிய பாரிய கடமை தமிழீழ மண்ணையும், மக்களையும் நேசிக்கும் அனைத்துத் தமிழர்களது கடமையாகும். இந்தச் சதி வலைக்குள் உங்களைச் சிக்க வைக்கும் பகீரத முயற்சியிலும் பலர் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், நீங்கள் ஏன்? எதற்காக? என்ற கேள்விகளைத் தொடுத்துப் பாருங்கள் உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
விடுதலைப் புலிகளின் பலம் தமிழீழ மண்ணில் முறியடிக்கப்பட்டு விட்டாலும், விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் சிங்கள தேசத்தால் நெருங்க முடியாதவையாகவே உள்ளன. அந்தப் பலப் பின்னணியுடன்தான் புலம்பெயர் தமிழர்களால் பல்வேறு போராட்டங்களையும், எழுச்சி நிகழ்வுகளையும் முன்னெடுக்க முடிந்தது. அந்தத் தளத்தைத் தகர்த்துவிட்டால் தமிழீழ விடுதலைப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத அவல நிலை ஏற்பட்டுவிடும். இது, இன்றுவரை தமிழீழ விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்குச் செய்யும் மிகப் பெரும் துரோகமாக, தமிழீழ வரலாற்றில் கறையாகப் படிந்துவிடும்.
முரண்பாடுகள் ஓர் இடத்தில் அமர்ந்து பேசித் தீர்க்கவேண்டியது தவிர, அந்த முரண்பாடுகளுக்காக கருணா போலவே எங்கள் தேசிய விடுதலைப் போரைச் சிதைத்து விடாதீர்கள். எங்களுக்காகவும், உங்களுக்காகவும் மரணித்த அந்த மாவீரர்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒன்றுமே இல்லாதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எங்கள் மக்கள் தேசியத் தலைவரை சூரிய தேவனாக வரித்துக் கொண்டவர்கள். அவரது பாதையில் நடக்கக் கற்றுக்கொண்டவர்கள். அவரால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களின் ஆணி வேர்களாக இருப்பவர்கள். அவர்கள் விடுதலை விருட்சத்தைச் சாய்த்துவிட்டு, விஷச் செடிகளுக்கு நீராக வாழ்வதற்குச் சம்மதிக்க மாட்டார்கள்.
‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழீழமாக இருக்கட்டும்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக