புதன், 24 மார்ச், 2010

நாங்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் - இலங்கை

இலங்கை அரசு பிற நாட்டவர்களின் முடிவுக்கு ஒருபோதும் கட்டுப்படாது என்றும், எங்கள் உள்விவகாரத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக தெரிவித்தார். போரின் போது இலங்கை அரசு அப்பட்டமாக மனித உரிமையை மீறியதாகவும்,​​ மனித உரிமை குறித்து அந்நாட்டுக்கு அறிவுரை வழங்க நிபுணர்கள் அடங்கிய தனிக் குழு அமைக்கப்படும் என்றும் சமீபத்தில் ஐ.நா.​ பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புத்தளம் பகுதியில் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ரத்னசிறி விக்ரமநாயக,​​ ஐ.நா.பொதுச் செயலாளரின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியதாவது, இலங்கை சுதந்திரமான,​​ இறையாண்மையுடைய நாடு.​ தனி நாடு என்ற விதத்தில் சுயமரியாதையும் இலங்கைக்கு உண்டு.​ ஆனால் சில மேற்கத்திய நாடுகள் இதை உணர்ந்து நடப்பதில்லை.​ இலங்கை இன்னும் காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடப்பதாகவே அவர்கள் நினைக்கின்றனர்.​ இதனால்தான் இலங்கையின் உள்விவகாரத்தில் அவர்கள் சற்றும் தயக்கமில்லாமல் மூக்கை நுழைக்க முயல்கின்றனர். இதை இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது.​ ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்றொரு நாடு தலையிடுவதை கடுமையாக எதிர்க்கும் வியன்னா ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டதுடன்,​​ அதை தீவிரமாகவும் கடைப்பிடித்துவருகிறது.​ இதுவரை இலங்கை எந்த ஒரு உள்நாட்டு விவகாரத்திலும் தலையிட்டது கிடையாது.​ இலங்கையை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று இலங்கை ஆட்சியாளர்களுக்கு தெரியும்.​ இதுகுறித்து பிற நாட்டவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.​ இலங்கை அரசு பிற நாட்டவர்களின் முடிவுக்கு ஒருபோதும் கட்டுப்படாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக