புதன், 24 மார்ச், 2010

தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும்

மகிந்தாவிற்கு எப்படி வந்தது இந்த தைரியம்? தமிழ் தேசிய இயக்கத் தலைவர்கள், புலிகள் கோரிய தாய் தமிழகம் குறித்த கோரிக்கையை முன்வைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு துணிச்சலை தர, நமது தலைவர்களே பெரும் காரணமாகி விட்டார்கள். எமது தேசிய தலைவர் களத்தில் இல்லாத ஒரே காரணத்தால் மகிந்தாவிற்கு இத்தனை வாய்துடுக்கு வர காரணமாகிவிட்டது. கடந்த 26ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவடைந்துவிட்டது. இன்று களத்திலே தமிழ் தேசிய அடையாளத்தை முன் நிறுத்துவதற்கான வேட்பாளர்கள் யாரும் இல்லாமல் அந்த இடம் வெற்றிடமாக காட்சி அளிக்கிறது. கடந்த தேர்தலுக்கும், நடைபெற இருக்கின்ற தேர்தலுக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. இப்போது தேர்தல் நடத்த இருக்கும் பெரும்பாலான இடங்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சிறப்புற வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது எமது மக்களின் விடுதலை வாழ்வு சிதைக்கப்பட்டு, புலிகள் இயக்கம் தமது ஆயுதங்களை அமைதிப்படுத்தி, களத்திலிருந்து சற்று தள்ளி பார்வையாளர்களாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஆக, இப்போதைய தேர்தல் என்பது, புலிகளின் பார்வையில் நடந்த தேர்தல், புலிகள் பார்க்க நடக்கும் தேர்தல் என்ற பொருளோடு தான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சியின்கீழ் பகிரங்கமாக இயக்கத்தின் ஆதரவாளர்கள் அல்லது விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்ற நேரிடையான அடையாளத்தோடு களத்தில் இறங்கினார்கள். இயக்கமும், இவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழர்களை கேட்டுக் கொண்டது. மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா, வன்னி மாவட்டமும், கிளிநொச்சி உள்ளடக்கிய யாழ் மாவட்டமும் சேர்ந்தது என வடமாகாணம் அமைந்திருக்கிறது. அதேபோன்றே கிழக்கு மாகாணம் என்று சொல்லப்படுவது, திரிகோண மலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். 2004ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 9 இடங்களில் 8 இடங்களையும், வன்னி மாவட்டத்தில் 6 இடங்களில் 5 இடங்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 இடங்களில் 4 இடங்களையும், அம்பாறை மாவட்டத்தில் 7 இடங்களில் 1 இடத்தை கைப்பற்றியது. அதேபோன்று வடகிழக்கு மாநிலத்திற்குரிய 31 இடங்களில் 20 இடங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால், அன்று நடந்ததைப் போன்று இன்றைய தேர்தல் இல்லை. கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் நேரடி மேற்பார்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்படி ஒரு மகத்தான வெற்றியை பெற்று, தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தியது. இதேபோன்ற வெற்றியை இப்போது நடைபெறுகின்ற தேர்தலில் இவர்கள் அடைய முடியுமா? என்ற கேள்வியே பல்வேறு அரசியல் பார்வையாளர்களின் மனவோட்டமாக பிரதிபலிக்கிறது. ஆனால் அது இயலாது என்பதே பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் தரும் பதிலாக இருக்கிறது. மேலும், இந்த தேர்தலில் தலைகீழ் மாற்றங்கள் பல நிகழும் என்பதே இப்போதைய நிலைபாடாக இருக்கிறது. எப்படியிருந்தாலும் இந்த தேர்தலால் எமது மக்களின் வாழ்வுக்கு எந்தவித விடுதலையும் அல்லது எந்தவித மகிழ்ச்சியான நடவடிக்கையும் கிட்டப்போவது இல்லை என்பது உறுதி. ஆகையால்தான் மகிந்தாவால் இப்படி பேச முடிகிறது. நமது தலைவர்கள் ஒற்றுமையின்றி கிடப்பதாலும், தமது இனத்திற்குள்ளேயே துரோகங்கள் பெருகியதாலும், இதுவரை நம்மைக் கண்டு அஞ்சி, நடுங்கி, நடந்து கொண்டிருந்த சிங்கள பேரினவாத அரசின் தலைமை, நான் சொல்வதைக் கேள். இதற்கு மேல் நீ பேசாதே என்று சொல்லும் அளவிற்கு நமது நிலைமை தாழ்ந்து போய்விட்டது. இந்த தாழ்ச்சிக்கு யார் காரணம். ஒவ்வொரு தமிழனும் என்பதை மறந்துவிடக் கூடாது. யார்மீதும் யாரும் பழிபோடக் கூடாது. யாரும் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது. உலகெங்கும் வாழும் எல்லா தமிழர்களும்தான் இந்த நிலைக்குக் காரணம். குறிப்பாக வேண்டுமானால் தமிழ்நாட்டைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமது இன அடையாளம், ஒரு மண்ணிலிருந்து அழிக்கப்படுகிறது என்கிற அடிப்படை உணர்ச்சிக் கூட இல்லாமல் அவன் மிக இயல்பாக தொலைக்காட்சியிலே மானாட-மயிலாட பார்த்துக் கொண்டிருந்தான். தமது இனம் செத்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் அவன் திரைப்பட அரங்குகளில் வரிசையில் நின்று கொண்டிருந்தான். தமது இன வாழ்வு ஒரு மண்ணிலே முறியடிக்கப்படுகிறது என்கிற உணர்ச்சி துளியும் இன்றி அவன் தமிழனின் எதிரணியிலே நின்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தான். தமிழனுக்குள் இருக்கும் கேவலம், இந்த இன அழிப்பின் மூலம்தான் வெளிப்படுத்தப்பட்டது. அவன் தன்னலத்திற்காக, தனது மகிழ்ச்சியான வாழ்விற்காக, பணத்திற்காக, பாழும் சுகத்திற்காக இனத்தை மட்டுமல்ல, தம் சொந்த தாயையையும் காட்டிக் கொடுப்பான் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு அடையாளப்படுத்தியது. அதன் தொடர்ச்சிதான் இந்த தேர்தல். உள்ளபடியே தமது இனத்தின் ஆன்மாவை, அதன் ஆளுமையை, தமிழர்களுக்கான உள் கட்டமைப்பை, அவர்களுக்குள் புதைந்துள்ள இன உணர்வை, வாழ்வியல் அடையாளத்தை, நாம் மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்குமேயானால், தமது இன மக்கள் அடைந்த துயரத்தைக் கண்டு கோபப்படுவார்களேயானால் தமக்கான தனிமனித குரோதங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, கரம் கோர்ப்போம் நாம், களம் காண்போம் நாம். இது உனக்கும் எனக்கும் உயர்வு தருகின்ற தேர்தல் அல்ல. இது எமது இனமக்களின் அடையாளத்தை மீட்டெடுக்கும் தேர்தல். எமது மக்களை ஒருமனம் கொண்டவர்களாய் படைத்தாள்வோம். அவர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவர முயன்றிடுவோம். அவர்களுக்குள் புதைந்துள்ள வேதனைகளையும், வலிகளையும் அகற்றுவதற்கு பக்கத்திலிருந்து தாய்மையோடு பணிசெய்வோம் என்கிற எண்ணம் நமது தலைவர்களுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்து அவர்கள் எத்தனை இடங்களில் நாம் வெற்றி பெறுவது, நாம் மக்களவைக்குள் சென்று எப்போது அமர்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருப்பதை செயல்பாடுகள் விளக்குகின்றன. ஆனால் சற்று பின்னோக்கிப் பாருங்கள். நமது தேசிய தலைவர் தாய்மையோடு அந்த மக்களை நேசித்தார். ஒரு கோழி தனது குஞ்சுகளை காப்பாற்ற பருந்தோடு மோதுவதைப் போன்று, மிக கடுமையாக மோதினார். தமது இறப்பை குறித்து அவர் ஒருநாளும் சிந்தித்தது இல்லை. ஆனால் தமது இன மக்களின் இருப்பை அவர் விரும்பினார். அதற்காக தமது இயக்கத்தின் போராளிகளை எல்லாம் கள பலியாக்கினார். அவர்கள் காடு, மலையெங்கும் சுழன்று காற்றோடு காற்றாய் கரைந்துபோனார்கள். வானவெளி எங்கும் வார்த்தையாய் நின்று போனார்கள். அவர்கள் அம்மா என்று அலறவில்லை. என் தாய்நாடே என்று மகிழ்ந்து இறந்தார்கள். அவர்கள் ஒவ்வொருநாளும் தமது உயிரை இந்த நாட்டின் உயர்வுக்காக, இந்த நாட்டின் வாழ்வுக்காக, தமது மக்களின் மகிழ்வுக்காக, இயற்கையாக அர்ப்பணித்தார்கள். இயற்கையோடு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று இந்த தன்மை எங்கே போயிற்று. அப்படி ஒரு ஈக வாழ்வு வாழ்ந்த இயக்கம் ஓய்வெடுக்கும் காரணத்தினால்தானே ராஜபக்சேவிற்கு இப்படி பேசுவதற்கு துணிச்சல் வந்தது. நாம் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்கிற மனநிலைதானே இப்படி பேச வைத்தது. இனியும் காலம் கடந்துவிடவில்லை. நாம் களத்திலே இருக்கிறோம். இந்த களம் எமது மக்களின் வாழ்வை மீட்டெடுக்கும் களம். எமது மக்களின் மகிழ்வை உறுதிபடுத்தும் களம் என்பதை நாம் புரிய வைக்க இன்னமும் நமக்கு காலம் இருக்கிறது. இந்த நேரத்திலும் நாம் பிரிந்துபோய் துரோகிகள் செய்த அதே செயலை செய்வோமேயானால், நாளைய தமிழீழ அரசு அமையும்போது உங்களின் பெயர் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்படலாம். உங்களின் செயல் அவர்களுக்கு எதிர்மறை தன்மையை சொல்லித்தர உதவலாம். நாம், ஒற்றுமையை இழந்துவிட்ட காரணத்தினால்தான் மகிந்தாவிற்கு நம்மை எதிர்த்து பேசும் துணிச்சல் வந்திருக்கிறது. ஆகவே, இது நமக்கான காலம். மார்ட்டின் லூர்தர் சொல்கிறபடி, மகிழ்வான காலங்களில் எடுக்கும் முடிவு அல்ல, ஆனால் துயர் நிறைந்த காலங்களில் எடுக்கும் முடிவே சாதனையாகிறது” என்கிற சொல்லை உறுதிபடுத்துங்கள். சிங்கள பேரினவாத அரசிற்கு நமது தேசிய தலைவர் ஓய்வெடுக்கும் காலத்தை நீங்கள் அவரின் நிழல்களாக தொடருங்கள். அவர் யாரையும் அடிமையாக இருக்க அனுமதித்தது கிடையாது. நமது தேசிய தலைவர் எந்த நிலையிலும் தமது சுயமரியாதையை இழந்தது கிடையாது. தமது மக்களும் இழக்கக்கூடாது என்பதிலே தெளிவாக இருந்தார். நமது தேசிய தலைவர் நமக்கான விடுதலையை தவற விட்டது கிடையாது. அவரும் விடுதலை உணர்வோடு வாழ்ந்தார். நம்மையும் விடுதலை உணர்வோடு வாழ வைத்தார். ஆகவே, அவர் மீண்டும் களத்திற்கு வரும் காலத்திற்குள் நமது உறுதியான பங்களிப்பை சரியான திசையில் செலுத்துங்கள். நமது செயல், இறுதி பயணத்துக்கான செயல் என்பதை நினைத்துப் பாருங்கள். வெறும் வாக்குகள் மட்டும் வாழ்க்கையை மாற்றிவிடாது. தேசிய தலைவர் சொல்வதைப்போல நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, புரட்சிவாதிகள் என்பதை உங்களுடைய செயல்களின்மூலம் உறுதியாக்குங்கள். காரணம் அரசியல்வாதிகள் மேடைகளிலே பேசி, மேடையை விட்டு கீழே இறங்கியவுடன் மூழ்கி போவார்கள். ஆனால் புரட்சிவாதிகள் தமக்கான விடுதலையை அடையும்வரை விடாமல் போராடுவார்கள். அவர்களின் குருதி விடுதலையின் வேர்களிலே பாயும். விடுதலை வீச்சோடு வளர்த்தெடுக்கப்படும். அவர்களின் உடல் விடுதலைக்கு உரமாக்கப்படும். விடுதலை மகிழ்ச்சியோடு கிளைவிட்டு பரவும். அவர்களின் பேச்சு விடுதலைக்கு ஒளியூட்டும். விடுதலை ஒளிவந்த திசை நோக்கி முகம் சாய்க்கும். ஆம்! நாம் புரட்சியாளனிடம் பாடம் பயின்றவர்கள். நாம் ஒரு தாயிடம் பாடம் கற்றவர்கள். அந்த தாய் நம்மை, நமது பிள்ளைகளை நேசிக்க கற்றுக் கொடுத்தவன். அவரின் வாழ்வியல், அவரின் தியாகம், அவரின் களப்பணி, அவரின் செயல்திறன், ஆற்றல், அளப்பறியா தொலைநோக்கு, அடுக்கடுக்காய் அரசியல் அறிவு, எவனுக்கும் இல்லாத ஆளுமை, தனிமனித மேன்மை, வாழ்வில் தனித்தன்மை, தமது இனமக்களின்மீது அன்பு, அவர்களின் வாழ்விற்காக அர்ப்பணிப்பு என அடுக்கடுக்காய் ஆதாரமாய் வாழ்கிறவன் நமது தலைவன். இந்த நேரத்தில் அந்த தலைவனுக்கு நன்றி உடையவனாக இருங்கள். இதுவே போதும் ராஜபக்சே நம்மை பார்த்து அச்சமுற. அதை தவிர்த்து, தேசிய தலைவர்தான் களத்தில் இல்லையே? நாம் விரும்பியபடி செய்யலாம், வாழலாம் என்ற எண்ணம் நமக்குள் எழுமேயானால் அது நமது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். நமது வீழ்ச்சிக்கு மட்டுமல்ல, நமது இன வீழ்ச்சிக்கும் அதுவே வழி சொல்லும் என்பதை இந்த தேர்தல் களத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். விரைவாய் செயல்பட வேண்டும். புரிதலுடன் செயல்பட வேண்டும். புரட்சி நிறைந்த எண்ணத்தோடு செயல்பட வேண்டும். மகிழ்வாய் செயல்பட வேண்டும். அதில் ஒவ்வொன்றிலும் எமது மக்களின் வாழ்வு இருக்கிறது, அவர்களின் எதிர்காலம் குவிந்திருக்கிறது, நமக்கான ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது, தமிழீழம் என்கின்ற அடிப்படை உரிமை இருக்கிறது என்பதையெல்லம் இந்த நேரத்திலே நாம் மீண்டுமாய் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நம்மை செம்மையாக நடத்துவதற்கு துணைபுரியும். மகிந்தாவின் நாவை மட்டுமல்ல, மகிந்தாவின் நடமாட்டத்தையும் இது முறியடிக்கும். மீண்டும் தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும் பரக்க வழிவகுக்கும் என்பதை மறந்துவிடாமல் செயல்படும் தருணத்தை திட்டமிட்டு வினையாற்றுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக