ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

குடும்ப அரசியலிற்குள் மறைந்திருக்கும் வியூகங்கள் .......?


ஆசிய நாடுகளில் இராஜ குடும்பம், இராணி, இளவரசன், இளவரசி என்ற மகாராஜா குடும்ப மனப்பான்மை இன்றைய அரசியலிற் கூட குடும்ப ஆதிக்கம் தொடர இடமளித்து வருகிறதெனலாம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குடும்ப அரசியல் வலுவிழந்து மாற்றங்கள் சில தோன்றி விட்டபோதும், மீண்டும் மீண்டும் பிரபல்யம் என்பது அதே குடும்ப அரசியலை மீள நிலைநாட்ட உதவுகிறது. பிரித்தானியாவில் அரச குடும்பம் கௌரவிக்கப்படும் அதே பாணியில், பாரதத்தில் மேலே கொண்டு வரப்பட முயலப்பட்ட “பிரியங்கா” இந்திரா போன்ற தலைமைத்துவம் உடையவர் என்று பேசப்பட்டது. 1997 காலப்பகுதியில், அதற்காக கழுத்தும் , மூக்கும் , அந்த மிடுக்கும் துணைக்கு இழுத்து வரப்பட்டன. ஆனால் நளினியைச் சந்தித்த பின்னர் பிரியங்கா தெரிவித்த எங்கள் அப்பா நல்லவர் என்ற பேதமைமிக்க கற்றுக் குட்டித் தன வாக்கு மூலம் அவரின் அறிவுப் பஞ்சத்தைப் பறை சாற்றியது. சம கால நிகழ்வுகளையோ, அன்றில் மறுதரப்பு நிலைப்பாட்டையோ புரிய முயலாத, ஒரு அரசியல் மழலையாக அவர் விலகினாலும், அவரை அழ வைத்ததுடன் ஆரம்பித்ததே முள்ளி வாய்க்கால் முடக்கமாகும். ராகுல், பிரியங்கா, சோனியா ஆகிய மூவரையும் பழி வாங்கல் ஊடாகத் திருப்திப்படுத்த இந்திய நடுவண் அரச, உளவு மற்றும் அரசியல் துறை பிரமுகர்கள் எடுத்த பெரு முயற்சியின் விளைவே முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பாகும். காந்தியைச் சுட்ட போது அவர் கோட்சேயை மன்னிக்கச் சொன்னார். ராகுலோ என் தந்தை தொடர்பான நீதியான தீர்ப்பு தங்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து இந்த இன அழிப்பிற்கு எண்ணை வார்த்தார். இதனால் சட்டத்தை தன் கையிலே எடுத்த இந்தியா, ஒரு பேட்டை ரவுடி போல், உலக வழக்கம், சர்வ தேச மரபுகள், போர் விதி முறைகளை எல்லாம் தானே மீறி ஒரு பாரிய இன அழிப்பை நடாத்தி முடித்தமை தான் நீதியான தீர்ப்பா என்பதே மே 18 இல் இந்தியாவை நோக்கி எழுப்பப்படவேண்டிய கேள்வியாகும். இலங்கைத் தீவில் நிலவும், இந்த இன முரண்பாட்டிற்கு என்ன காரணம் என்று ராகுல் என்ற அழகிய இளைஞனோ அன்றில் நல்லவர் என்ற கணிப்புள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கோ சிந்திக்கவில்லை. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் இயேசுவின் வாக்கியம் இத்தாலியப் பெண்மணியிடமிருந்து வரவில்லை. இவற்றை எல்லாம் அவதானித்த, இலங்கை அதிகாரிகள் புலிகளிற்கு எதிராக இந்தியத் துணையுடன் ஒரு பெரிய போரை நடத்தலாம் என்பதை கணித்துக் கொண்டு காரியத்தில் இறங்கி தமிழ் இனத்தையே வீழத்தி விட்டனர். ராகுலினதும், பிரியங்காவினதும், சோனியாவினதும் முயற்சி ராஜீவை திருப்பி பெற உதவுவதற்கு மாறாக ஒரே நாளில் ஆயிரக் கணக்காணவர்களை கொல்லவே உதவியது. சகிப்பும், விட்டுக் கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் இந்தியாவிற்கு தலைமை தாங்குபவரிற்குத் தேவை. பல இன மக்களையும், சுற்றி வர பல்வேறு நாடுகளையும் கொண்ட பாரதத்தை நிர்வகிக்கும் போது, ராகுல் இதே “றிற் போ றைற்” தன்தைக் காட்டுவாரேயானால், பொற்கோயிலைத் தொடர்ந்து வந்த இந்திராவின் முடிவு தான் திரும்ப வாய்ப்புண்டு. இவரது புலியைப் பலி எடுக்கும் முனைப்பு இன்று சோனியாவின் கை வாளாக மாறி விட்ட கலைஞரின் ஊடக மற்றும் அரசியல்க் கதிர்களால் காக்கப்பட்டாலும் “கிஸ்றி ரிப்பீடஸ் இற் செல்வ்” என்பதற்கு இணங்க 20 ஆண்டுகளின் பின்னரோ என்னமோ ராகுல் இதற்கான விணை விலையை செலுத்த வேண்டும் என்பது இயற்கையின் நியதியாகலாம். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இன்றைய பிரதமர் ஜனாப் அலி பூட்டோவின் மகளின் கணவராக காணப்படுகிறார். பூட்டோவின் மகள் பெனாஜீர் கொல்லப்பட இவர் பதவிக்கு வந்தார். இவ்வாறே இந்திரா அம்மையார் சுடப்பட, சஞ்சய் ஏற்கனவே விமான விபத்தில் கொல்லப்பட்டதால் வேறு எவரும் அற்ற நிலையில் குடும்ப அடிப்படையில் ராஜீவ் இழுத்து வரப்பட்டார். இவ்வாறு இதே குடும்ப அரசியல் உண்மையான இராஜ குடும்பத்திலிருந்து அதிகாரத்தை இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதை இராம இராஜ்ஜியப் பாணி மக்கள் உணர்ந்ததாக இல்லை. இனி , நாம் நமது இலங்கைக்கு வந்தால், இதுவரை சகோதரர்களை சூழ வைத்திருந்த மகிந்த தற்போது, தனது மைந்தனையும், மூத்த சகோதரரையும் அவைக்கு இழுத்து வந்துள்ளார். புலி இயக்கத்திடமிருந்து பல விடயங்களைக் கற்றுக் கொண்ட மகிந்த, தனக்கு வேண்டிய நம்பிக்கையை உறுதி செய்ய கோத்தபாயாவை பாதுகாப்புச் செயலாளராக்கினார். சந்திரிகா அம்மையார் தனது மாமனை அமர்த்தியதைப் பிரதி செய்த மகிந்த பிறரிடமிருந்து கற்றுக் கொண்டதே மிக அதிகம். இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இந்த ஆண்டு இறுதியில் பதவிப் பிரமாணம் செய்யும் போதோ, அன்றில் தனது பதவி வலுக் குறைய ஆரம்பிக்கும் பிந்திய காலப்பகுதியிலோ ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து, பிரதமராக தான் பாராளுமன்றத்துள் நுழையும் போது, பாதுகாப்பாக சபாநாயகராக இன்றே நியமிக்கப்பட்டிருப்பவரே சமல் ராஜபக்ச ஆவார். திரு பிரேமதாசா அரச தலைவராக இருநத போது, எச் எம் முகமட் நம்பிக்கைகக்குரிய சபாநாயகராக இருக்காமையால் ஒரு ஆபத்தை பிரேமதாசா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சந்திரிகா அம்மையார் இரண்டாந்தடவை பதவிப் பிரமாணம் எடுத்தமை தொடர்பாக சட்டச் சிக்கலை மனதில் கொண்டு, பிரதம நிதியரசர் நியமனத்தை கையாண்ட அதே பாணியில் மகிந்த வகுக்கும் வியூகம் அவதானிப்பிற்குரியது. இவ்வாறே இந்திராவை என்றுமே எங்கும் அழைத்துச் சென்று அரசியலையும் அறிமுகத்தையும் நேரு ஏற்படுத்தினார். அதே பாணியில் வெற்றி பெற்ற தன் மைந்தனிற்கு பிரதி அமைச்சர் பதவியைக் கூட உடனடியாக வழங்காமல், தனது மாளிகையிலேயே உடன் அமர்த்தி அரசியலை போதிப்பதுடன், உலகத் தலைவர்களின் அறிமுகத்தையும் எற்படுத்துவதே மகிந்தவின் திட்டமாகும். அதே சமயம் தனது பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயராளராகத் தொடர்ந்தும் கோத்தபாயாவை வைத்திருப்பதும், சமாதானப் பேச்சில் ஈடுபட்ட உலகத்தால் அறியப்பட்ட, போராசிரியர் திரு ஜி எல் பீரிஸ் அவர்களை வெளிநாட்டு அமைச்சராக்கியிருப்பதும், தன்னைச் சமாதானப் பிரியராகக் காட்டி, புலம் பெயர் தமிழர்கள் மீது வைக்கும் குறிக்கு சான்றாகின்றன. ஆயுதப் பிரயோகப் போராட்டம் என்பது தாயகத்தில் சாதகமான நிலையை தோற்றுவித்த அதே சமயம் சர்வதேசப் பரப்பில் புலிகளை பயங்கரவாதிகளாக்க மிகவும் உதவியதுடன் அவர்களை முறை வகையின்றிக் கொல்லவும் உதவி விட்டது. இந்த நிலையில் திரு வி உருத்திரகுமாரன் அவர்கள் ஆயதம் இனி எங்கள் அகராதியிலே இராது என்பது விவேகமான வாக்கு மூலமாகும். இலங்கைத் தீவில் கண்டிச் சிங்களவரின் ஆதிக்கம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன் அடிப்படையில் கூச்சல் போட்ட கண்டியர்களைத் திருப்திப்படுத்தவே டி எம் ஜெயரட்ண பிரதமராக்கப்பட்டுள்ளார். இந்தக் கண்டிப் பாராம்பரியத்துள்ளும் மறைந்து கிடப்பது பரம்பரைக் குடும்ப ஆதிக்கம் தான். இலங்கைத் தீவில் பெண்கள் ஆண்களிற்கு சமனாக மதிக்கப்பட்டதாலேலே உலகின் முதற் பெண் பிரதமராக சிறீமாவோ பண்டாரநாயக்கா வர முடிந்தது என்று இந்த உலகமே எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் சந்திரிகா அடங்கலாக இந்த பெண் எழுச்சி எல்லாம் நான் ஆரம்பத்தில், குறிப்பிட்ட இராணி இளவரசி மனப்பான்மை குடும்ப அரசியலின் வெளிப்பாடுகள் தான். எது எப்படியிருப்பினும், ருக்மன் சேனநாயக்கா, பிரேமதாசா குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ராஜபக்ச குடும்பம் என்று பல குடும்பஙகள் இன்று தோன்றி விட்டதால் தனி ஒரிரு குடும்ப ஆதிக்கம் என்பது தீவில் வலுவிழந்து விட்டது என்ற திருப்தியுடன் நிறைவு செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக