ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

உலகநாடுகளின் நகர்வாக ........................

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு அரசாங்கம் எதைச் செய்யப் போகிறது என்பது அடுத்த கேள்வியாக உள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும் சரி- கிடைக்காது போனாலும் சரி- அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கப் போவது தமிழர் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தான். சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் வெற்றியை வாழ்த்தியதற்கும் வரவேற்றதற்கும் பின்னால் இருக்கின்ற இரகசியம்- இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதே என்பதற்காகத் தான். அதாவது இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எல்லாமே சர்வதேசத்துக்கு சில சாட்டுப் போக்குகளைச் சொல்லி வந்தன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை- மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை, அது இருந்தால் தான் துணிவோடு மாற்றங்களைச் செய்யலாம்- அதிகாரங்களைப் பகிரலாம் என்ற நியாயங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இப்போது இப்படிச் சாட்டுகளைச் சொல்லும் வாய்ப்புகள் இல்லாது போயுள்ளன. இந்தநிலையில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பது இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைத் தான். வாழ்த்துச் செய்திகளின் ஊடாக சர்வதேசம் இந்தச் செய்தியையும் இலங்கை அரசுக்குச் சொல்லியிருப்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் சர்வதேசம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறதே தவிர தமிழர்கள் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி நாம் கற்பனை செய்வது மிகையானதொரு நிலைப்பாடாக இருக்கும். சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில் நியாயமான நீதியான தீர்வாக அது வலியுறுத்துவது ஆகக் குறைந்த அரசியல் தீர்வாகவே இருக்க முடியும். அவர்களுக்குத் தேவை இலங்கையில் அமைதி. சமஷ்டி முறையில் தீர்வு அமைவது பற்றியோ அல்லது வேறெந்த வடிவிலான தீர்வு பற்றியோ அவர்களுக்குக் கவலையில்லை. இந்தக் கட்டத்தில் அரசாங்கம் தமக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பெரும்பான்மை மக்களினது என்று கூறி எப்படி சர்வதேசத்தை சமாளிக்கிறதோ அதுபோலவே தமிழ் மக்களும் ஜனநாயக ரீதியாக தமது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் பொதுத்தேர்தலை தமிழ்மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்களா என்பது சந்தேகமே. வடக்கிலும், கிழக்கிலும் பிரதான கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஆசனங்கள் இந்தக் கேள்வியை எழுப்புவதற்கு வசதியாக அமையும். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சக்தியாக வந்திருப்பதால் அவர்களை சர்வதேசம் புறக்கணிக்க முனையாது என்று நம்பலாம். தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வந்துள்ள நிலையில் அதனுடன் அரசு பேச்சு நடத்துவதையே சர்வதேசம் விரும்பும். இது இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளை பொதுத்தேர்தலில் மட்டுன்றி அடுத்து வடக்கில் நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கப் போகிறது. இதில் வெற்றிபெறும் தரப்புகள் இனப்பிரச்சினைத் தீர்வில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே சர்வதேசத்தின் அணுகுமுறைகளைத் தமக்கு சார்பாக வைத்திருக்க தமிழ்மக்கள் விரும்பினால்- வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும்; தமது அபிலாசையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சக்தியாக மாகாணசபைத் தேர்தலில் உருவெடுக்க வேண்டியது அவசியம். இந்தச் சந்தர்ப்பதை அவர்கள் தவறவிடுவது- சர்வதேச ஆதரவைத்தக்க வைக்கும் முயற்சிக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக