ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நாடு கடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் எங்கே?


மலேசிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் எங்கே?. அவர்களுக்கு என்ன நடந்தது?.தமது நாட்டில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் கடந்த காலத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் உசெய்ன் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார். மலேசியாவில் விடுதலைப் புலிகள் தளம் அமைப்பதை தடுப்பதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியதாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர்களான இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியதாகவும் அந்த அறிக்கையில் நிஷாமூதீன் கூறியுள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் மலேசியாவை தளமாகக் கொள்வதைத் தடுப்பதே தமது நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் சம்பந்தமாக பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவினால் இவ்விதமாக சர்வதேச ரீதியில் செயற்பட்ட விடுதலைப் புலிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தால் அந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சம்பந்தமாக இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாகும். நாடொன்று ஒருவரை நாடு கடத்தும்போது அந்த நபரை பொறுப்பேற்கும் நாடு அந்த நபரை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதே வழமையாகும். இந்த நிலையில், மலேசியாவில் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கையை மேற்கொண்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் மலேசியா இதுதொடர்பான அறிக்கையை வெளியிடும் வரை இலங்கை அரசாங்கம் இதுகுறித்து எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்களா அல்லது விடுவிக்கப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த காலத்தில் வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலரை இலங்கை அரசாங்கத் தரப்பினால் சட்டவிரோதமான முறையில் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறு பல நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மலேசியாவிலிருந்து கடந்த காலத்தில் நாடு கடத்தியவர்கள் சம்பந்தமாக இலங்கை அவர்களை என்ன செய்தது, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எவ்விதமான தகவல்களை வெளியிடவில்லை. கடந்த ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனையும் மலேசியாவில்வைத்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக