வெள்ளி, 23 ஜூலை, 2010

படித்தசமூகமான தமிழினம் பாராளுமன்றுக்கு கடத்தல் ,கப்பம் கோருவோர் ,துணைப்படை ,போன்றோரை பிரதிநிதியாக அனுப்பும் துர்பாக்கிய நிலை ..ஸ்ரீரங்கா

"பிறப்பு அன்னையால்; சிறப்பு கல்வியால்' என்ற தாரக மந்திரம் தமிழ் மக்களின் மனதில் வேரூன்றிப் பதிந்துள்ளது. இதனாலேயே தமிழ் பேசும் மக்கள் கல்வியில் முக்கிய கவனம் செலுத்தினார்கள். அதிலும் குறிப்பாக வடக்கு மக்கள் அதிகூடிய கவனத்தைக் கொடுத்தனர்.



அழியாச் செல்வமான கல்வியைக் கொடுக்கக் கொடுக்க வளர்கின்ற கல்வியில் வடமாகாண மக்கள் அதிக கவனத்தைச் செலுத்தி வந்ததை வரலாற்று புள்ளி விவரங்கள் எடுத்தியம்புகின்றன. எழுத்தறிவிலும், பல்கலைக்கழக நுழைவிலும் அதிகூடிய விகிதத்தினை வடக்கு கொண்டிருந்தது.


இதனை சகித்துக் கொள்ளாத ஜீரணிக்க முடியாத சில தீய சக்திகள் வடக்கில் கல்வி நிலை உயர்ந்ததற்கு காரணம் வெள்ளைக்காரரின் ஆட்சியில் அவர்களுடன் சேர்ந்து சோரம்போகும் இனமாக இருந்ததாலேயே ஆங்கிலேயர்கள் பல பாடசாலைகளைக் கட்டியதாக முழங்கால்களில் முடிச்சுப் போட முயல்கின்றனர்.


இது இயலாமையின் வெளிப்பாடு என்பதை வரலாற்று ஆய்வாளர்களால் உணர முடியும். இந்துமதத்தை ஆங்கிலேயர்கள் அங்கீகரிக்காத போது வாழை இலையில் சாப்பிட்ட யாழ்.மக்கள் வாழை இலையை கூரையில் செருகியும் தமது கலாசாரத்தைக் கைவிடவில்லை.


இன்று பல்கலைக்கழகம் நுழையும் விகிதத்தில் யாழ்.இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்.இந்து மகளிர் கல்லூரி எனப் பல இந்துக் கல்லூரிகள் இன்றும் சிறந்து விளங்குகின்றன. யாழ்ப்பாணம் ஆங்கிலேயர்களால் முன்னேறியது என்றால் அவர்களின் காலத்தில் அழிக்க முற் பட்ட இந்து மதத்தின் பெயர்களில் உள்ள பாடசாலைகள் இன்றும் மிளிரும் விளக்குகள் போல் ஒளி விட்டுக் கொண்டு எப்படியிருக்க முடியும்.


இப்படியெல்லாம் மூதாதையரால் கட்டி வளர்க்கப்பட்ட அழியாச் சொத்தான கல்வி, இடப்பெயர்வுகளாலும் அகதி வாழ்க்கையினாலும் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்ததை யாரும் மறுக்க முடியாது. எனவே மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க கல்வியில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்திருக்கின்றது.


படித்தவர்கள் நிறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிய தமிழ்பேசும் சமூகம் இன்று கடத்தல்காரர்களையும், கப்பக்காரர்களையும், ஆயுத துணைப் படைகளையும் அனுப்பும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமாற வேண்டும் என்றார்.சக்தி எவ்.எம் வானொலி கடந்த ஞாயிற்றுக்கிழமை புலமைப்பரிசில் மாணவர்களுக்காக யாழ்.மத்திய கல்லூரியில் நடத்திய "சக்தியின் புலமைத்துளிகள்' கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக