வியாழன், 16 டிசம்பர், 2010

கடவுள்தான் இனித் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் -தந்தை செல்வா

10 வருட செயற்பாட்டுத் திட்டமொன்றின் கீழ் 2011இல் ‘மும்மொழி இலங்கை’ என்ற திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.இத்திட்டம்.....

எந்தவொரு அரசாங்க நிறுவனத்துடனும் ஒவ்வொரு பிரசையும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2011 இல் 100 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸாவின் 2011 வரவு செலவுத்திட்ட உரையின் ஒரு பகுதி.


சிறிலங்காவின் தேசியகீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாடவேண்டும். தமிழில் பாடக்கூடாது. இது அதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸாவின் அமைச்சரவை எடுத்த முடிவு. இதன்படி தமிழர்கள் தேசியகீதத்தை சிங்கள மொழியில் எவ்வாறு பாடுவது என்று கற்பிப்பதற்காகவே 100 மில்.ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


இதன் முதற்கட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. மானிப்பாய் மகளிர் கல்லூரியில் இராணுவத்தின் அனுசரனையில் ஆசிரியர் லீலா கிருஸ்ணன் என்பவர் மூலம் இலவச சிங்கள வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வியைக்கூட இராணுவமே எடுத்து நடத்துகின்ற ஒரு மோசமானநிலை இங்கு உருவாகிவிட்டது.


வரவு செலவுத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை அறிவிப்பு. ஆனால் நடைமுறையில் ஒரு மொழிக் கொள்கையின் செயற்பாடு. ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற தமிழ் மக்களின் அரசியற் கொள்கைக்கு மாறான ஓரே நாடு ஓரே இனம் என்ற மகிந்த சிந்தனையின் வெளிப்பாடே இது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்ட வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டதன் மூலம் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதற்கான தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது. பதிலுக்கு அரசாங்கம் தனது ஒரு மொழிக் கொள்கையை அறிவித்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது.


அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இம் முடிவிற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சார்ந்த அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனை ஏற்றுக்கொண்டார். இத் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கியமாகியுள்ளது. தமிழர்களின் தலைவிதி எங்குபோய் முடியப்போகின்றதோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக