வியாழன், 16 டிசம்பர், 2010

தமிழரைச் செம்மணியிலும் முள்ளி வாய்க்காலிலும் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்குத் தமிழரையே வாக்களிக்கக் கேட்டதை நினைத்துப் பார்த்தால் ஆறறிவு பற்றிப் பேசுவது ???

இன்று தமிழரின் உரிமைப் பிரச்சினையாக ஸ்ரீ லங்காவின் தேசிய கீதத்தை தமிழில் பாடும் உரிமை மறுக்கப் பட்ட விடையம் மிகப் பெரிய அளவில் பேசப் படுகிறது. இதைப் பேசுபவர் தமிழரின்
அரசியல் கட்சியெனத் தானும் பிரச்சாரம் செய்து மற்றவராலும் பிரச்சாரப் படுத்தி வரும் தமிழர் தேசியக் கூட்டமைப்பாகும். இன்று இலங்கையில் வாழும் தமிழரின் நிலையை யதார்த்தமாகப் பார்க்கும் எவருக்கும் இது எத்தனை அபத்தமான கோரிக்கை என்பது புரியும்.


சிங்களம் போருக்குப் பின்னர் நடந்து கொள்ளும் முறையில் தமிழருக்கான நிலையான கௌரவமான அரசியல் தீர்வு என எதுவுமே கிடையாது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா முடிந்த வரையில் முயன்றும் முடியாத நிலையில் அது தமிழர் தலைவர்களைச் சிங்களத்துடன் பேசி ஒரு தீர்வைக் காணுமாறு கையை விரித்து விட்டது.


மகிந்தர் தாமாக எந்தத் தீர்வையும் வைக்கப் பேவதில்லை. நீங்களே புலிகள் கேட்காத தீர்வைக் கேளுங்கள் சிங்கள மக்களின் சம்மதம் பெற்ற பின் தருவதாகக் கூறினார். இலண்டனில் மூக்குடைந்து திரும்பியவர் தனது தீர்வை இலண்டனில் வெளிப் படுத்த இருந்த போது அதனைப் புலிகள் கெடுத்து விட்டனர் என்கிறார்.


இந்தியா காலால் இட்டதைத் தலையால் செய்யச் சங்கர்ப்பம் எடுத்துள்ளது. சிங்களம் காலால் இட்டதை இந்தியா தன் தலையால் செய்து ஈழத் தமிழின அழிப்பைச் செய்தது. இப்போது தமிழர் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் விருப்பத்துக்கு அமையவே தமது அரசியல் செயற்பாடு இருக்கும் என அதன் பேச்சாளரான சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறுகிறார். இதன் மூலம் முன்னர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்கக் கேட்ட கூட்டமைப்பின் தாற்பரியம் புரிகிறது.
இந்தியா ஈழத் தமிழினத்தை சிங்களத்திடம் பலி கொடுக்கும் வேள்வி இன்னமும் முடிந்த பாடில்லை. இந்த நிலையில் மகிந்தர் காலடியில் கிடக்கும் தமிழர் தலைமைகளும் இந்தியாவின் காலடியில் கிடக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழருக்கான புலிகள் கேட்காத ஒன்றைத் தேடிப் பிடித்து சிங்கள மக்களின் சம்மதத்துடன் தமிழருக்கான அரசியல் தீர்வாக தமிழர் மீது சுமத்தப் போகின்றனர்.


அதாவது பைத்தியம் தெளிந்து கலியாணம் நடக்கும் எனக் கூறுகிறார்கள். ஆறறிவுள்ள எந்த மனிதனும் நினைத்தும் பார்க்க முடியாத வகையில் நிலைமை உள்ளதை உணர முடியும். ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றில் தமிழரைச் செம்மணியிலும் முள்ளி வாய்க்காலிலும் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்குத் தமிழரையே வாக்களிக்கக் கேட்டதை நினைத்துப் பார்த்தால் ஆறறிவு பற்றிப் பேசுவது மிக அதிகமோ எனத் தெரிகிறது.


தமிழரின் பிரச்சனைகள் என்ன என்பதைத் தமிழர் தரப்பு வட்டுக் கோட்டைத் தீர்மானமாகவும் பின்னர் அவற்றைத் திம்புப் பேச்சுக் கோரிக்கைகளாகவும் முக்கியத்துவப் படுத்திய வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படை அரசியல் இலட்சியங்களில் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதன் தேசிய கீதத்துக்கும் என்ன தேவை அல்லது தொடர்பு என யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை.


இலங்கையில் மட்டும் அல்ல இந்தியாவிலும் கூட எவரும் இந்தக் கோரிக்கைகள் பற்றிப் பேச முடியாது என்பது உண்மைக் கள நிலை. ஆனால் அவற்றைக் தமிழர் தரப்பு மறந்து விட வேண்டும் என்பதில் சிங்கள அரசுகள் மிகத் தீரமாக 1960களில் இருந்தே தமிழருக்கு என்ன பிரச்சனை என்ற புதிர்க் கேள்வியை எதிர்க் கேள்வியாக்கி தனது இன மேலாதிக்க ஆட்சியை வலுப்படுத்தி வந்துள்ளது. ஆயினும் தமிழரசுக் கட்சி தனது கொள்கை உறுதிப் பாட்டில் 1965 வரை உறுதியாக இருந்து பண்டாவும் டட்லியும் தமிழர் தரப்பில் பிரச்சனைகள் இருப்பதை ஏற்க வைத்து எழுத்து மூலமாக ஒப்பந்தங்களைச் செய்யவும் வைத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தால் மட்டுமெ தமிழரின் கோரிக்கைகளை உலகறியச் செய்ய முடிந்தது. பிரேமதாச, சந்திரிகா, ரணில், என அனைவரும் பிராந்திய அளவில் இந்தியாவும் சர்வதேச அளவில் அகில உலகமும் தமிழர் அறிய வைத்தவையே தமிழரின் இந்த நான்கு அடிப்படை அரசியல் கோரிக்கைகளும் ஆகும்.


ஆனால் சதி நிறைந்த போர் ஒன்றின் அழிவில் நிற்கும் தமிழரை வரலாற்றை மறைத்து தமிழீழம் புலிகளின் கோரிக்கை எனச் சிறுமைப் படுத்தி வருகிறது. எல்லாரும் ஓரினம் ஒருதாய் மக்கள் என்ற மாய வார்த்தைகளால் தமிழர் பிரதேசங்களைப் பறித்தும் அங்கே சிங்கள குடியேற்றங்கள் நடக்கின்றன. நிரந்தர இராணுவ அடக்கு முறைக்குள் தமிழரை சிங்களத்தின் கொத்தடிமைகளாய் வைத்து இலங்கை முழுவதும் பௌத்த ஆரிய சிங்கள தேசமாக்கி; விடத் துணிந்து விட்டது.


தமிழர் தரப்பு தனது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட நிலத்தையும் அதன் ஆளும் உரிமையையும் ஆதாரங்களோடு அறிந்து வைத்திராத வரை சிங்களத்தின் ஏமாற்றுப் பொய்ப் பிரச்சாரங்களால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. இதனை மாற்ற வேண்டுமானால் தமிழர் ஒவ்வொருவரும் தமிழினத்தின் உண்மை வரலாற்றை நன்று கற்று எதிரிகளின் பொய்ப் பிரச்சாரங்களை உலக அளவில் முறியடிக்க வேண்டும்.


தமது வரலாற்றை மறக்காது ஓரு கட்டுப்பாடான சமூகமாக யூத மக்கள் வாழ்ந்த காணத்தால் அவர்களால் 2000ம் ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமது தாயகத்தை மீட்க முடிந்தது. ஆனால் நாமோ எமது கண் முன்னே எமது நாடும் மக்களும் எம்மிடமிருந்து பறிபோக இடம் அளிக்கிறோம் . எமது தேசம் எம் கண்ணெதிரிலே பறிக்கப் படுகிறது. எமது மக்கள் எம் கண் முன்னாகக் கொல்லப் படுகின்றனர். பெண்கள் மானபங்கப் படுத்தப் படுகின்றனர். மக்கள் பட்டினி போடப் படுகின்றனர்.


உல்லாச விடுதிகளும் ரப்பர் பெருந் தோட்டச் செய்கைகளும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கின்றன. யாழில் தமிழ் வர்த்தகர்கள் புலிகளுக்குப் பணம் கொடுத்தனர் என அவர்களின் வணிக வளங்கள் பறிக்கப் பட்டு பிச்சைக்காரர் ஆக்கப் படுகின்றனர். அடுத்து வரும் தமிழர் பரம்பரை சிங்கள முதலாளிகளின் பெருந் தோட்டங்களில் கூலி வேலை செய்யும் மலையகத் தொழிளாளர் போன்ற வாழ்வுக்குத் தள்ளப்படுவர். இவற்றைத் தடுக்கும் உரிமை புலம் பெலர் தமிழருக்கு இல்லையா? இல்லை என்கிறது இந்தியாவும் சிங்களமும்.


சிங்கள அரசின் தயவில் பதவி உயர்வு பெற்று இன்று அரச அதிபராக விளங்கும் இமெல்டா சுகுமார் எப்படி முதலில் வவுனியா அரச அதிபராகி, பின்னர் கிளிநொச்சி யாழ்ப்பாணம் என பிரகாசிக்க முடிந்தது என்றால் அவரது வெற்றியின் இரகசியம் புரியும். எனவே வடக்கிலே தமிழருக்கு எவ்வித கொடுமையும் நிகழ்வதில்லை போரிலே புலிகள் போர்க் குற்றம் செய்தனர். போர் முனையில் தமிழ் மக்களை புலிகள் கேடய மாக்கிச் சுட்டனர் போன்ற அறிக்கைகளின் பின்னணியே அவரது வெற்றியின் இரகசியம் என்பது புரியும்.


இப்போது புலம் பெயர் மக்களுக்கு அவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலம் பெயர் தமிழருக்கு விடுக்கும் அச்சுறுத்தல் நீங்கள் புலத்தில் அரசியல் பேசினால் உங்கள் உறவுகள் உயிர் வாழ முடியாது. எனவே அரசியலை குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசை மறந்து விட்டு உங்கள் சில்லறை மட்டும் கொடுங்கள் எனச் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள்;.


இவர்களால் மக்களிடம் வாக்குப் பிச்சை ஒன்றைக் கேட்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடிகிறது? அரசியல் உரிமை பற்றிக் கூட அவர்கள் பேச வேண்டாம் அவர்களுக்கான அன்றாட அரிசியைக் கூடப் பெற்றுக் கொடுக்கிறார்களா? தாங்கள்தான் மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களின் குறைகளைத் தெரிந்தவர்கள் அவர்களுக்கான தேவை தீர்வு என்ன என்பதை தம்மை விட வேறு எவருக்கும் தெரியாது அவை பற்றிப் பேசும் அருகதையும் பிறருக்குக் கிடையாது எனும் அளவுக்கு விட்டால் விழுந்து கட்டிப் பேசுகிறார்கள்.


புலம் பெயர் தமிழர் அத்தனை பேருமே நாட்டை விலை பேசி விற்று விட்டு வெளிநாடு வந்தவர்களா? 1890 களிலும் அதற்குப் பின்னரும் மலேசியா சிங்கப்பூர் போணியோ போன்ற நாடுகளுக்குப் போய்க் குடும்பமாய் பல தலைமுறை காலமாய் வாழ்ந்த வடபகுதித் தமிழர் இரண்டாவது உலகப் போரின் முடிவில் நாடு திரும்பி வாழ வில்லையா? அவர்களின் தேசம் அவர்களதாக இருந்ததால் மட்டுமே அங்கே வர முடிந்தது.


சிங்கள இனவெறி இராணுவ அடக்கு முறைக்குள் வாழ முடியாது என்பதால் இங்கு ஓடி வந்தவரே ஏராளம். எம் முன்னால் உள்ள பிரச்சினை சிங்கள ஏகாதிபத்தியமே அல்லாது வேறில்லை. எனவே அதற்கும் அதற்கு ஆதரவாக உள்ள எவர்க்கும் எதிராகப் பேசவும் போராடவும் புலம் பெயர் தமிழருக்கு உரிமை உண்டு.


அத்தகைய வளமும் வசதியும் வாய்ப்பும் பலமும் புலத்தில் இருந்தும் தமிழராகிய நாம் பயன் படுத்தாது போனால் நளை எமது வருங்காலத் தலைமுறை நாடற்ற ஐரோப்பிய ஜிப்ஸிகள் போன்று வாழ ஒரு நாடின்றி பிறநாட்டவரால் விரட்டப் படுவர். அத்தகைய ஒரு நிலைக்கு நம் சந்ததி உள்ளாகும் நிலையை நாம் இன்று தடுக்காது போனால் வரலாறு எம்மை மன்னிக்காது


நமது மக்களுக்கும் மண்ணுக்குமான போரை ஜனநாயக முறையில் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் நம்மால் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்ற கட்டாய சூழ் நிலையில் உள்ளோம். இலங்கை இந்திய அரசுகள் எம் மக்களின் மனிதாபிமான உரிமைகளைக் கூட உறுதிப் படுத்தாத நிலையில் நாம் எப்படி அவர்களோடு ஒரு நிலையான அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியும்?


எமக்கு முன் உள்ள முதற் கடமையாக இன அழிப்புப் போர் சர்வ தேச விசாரணைக்கு உட்படுத்தப்; பட்டு எமக்கான நீதியும் நிவாரணமும் உரிய முறையில் பெறப்பட வேண்டும். இரண்டாவதாக ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் வடக்குக் கிழக்குப் பகுதிகள் நிர்வகிக்கப்பட்டு ஒரு முழுமையான அமைதிச் சூழலில் கொசோவோ கிழக்குத் தீமோர் போன்று மக்களின் வாக்களிப்பின் மூலம் ஆட்சி முறை தீர்மானிக்கப்பட வேண்டும்.


தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு எவரோ இத்தகைய ஒரு செயல் திட்டத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். இந்தியாவில் மனைவி மக்களை வைத்து வாழ்ந்து கொண்டே இலங்கையில் அரசியல் நடக்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தொண்டர்களும் இந்திய விசாவுக்காக தமிழினத்தைப் பலியாக்கும் பாவச் செயல் தொடரக் கூடாது.


இவர்களால் உருவாக்கப் படும் இலண்டன் கனடா சுவிஸ் நாட்டுக் கிளைகள் இவர்களுக்கு உண்டியல் சேர்க்க உதவலாம் அதன் மூலம் நாடு கடந்த அரசுக்கு எதிரான இன்னொரு தடைக் கல்லாக இலங்கை இந்திய அரசுகளால் பயன் படுத்தப்படும் அபாயம் உள்ளது. இவர்கள் இவ்விரு அரசுகளின் வேலைத் திட்டத்துக்கு அமையவே அரசியல் நடத்து கின்றனர். இவர்கள் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்புகளா இல்லையா என்பதை நாளைய வரலாறு தீர்மானிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக