ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணம்...................................?

வடமராட்சியில் அது ஒரு பண்பாட்டு விழா. அதுவும் நடந்து முடிந்த தைப் பொங்கலை ஒட்டிய விழா. மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாட்டாளர்கள் யாவரும் பண்பாட்டு விழாவுக்கு ஏற்ற வகையில் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்திருந்தனர். எமது பண்பாட்டு விழுமியங்கள் எம்மைவிட்டு மெல்லமெல்ல நழுவிப்போகின்ற போது இவ்வாறான விழாக்களை கலாசார நலன் விரும்பிகள் ஆங்காங்கே நடத்துவது, 'எல்லாமே அருகிப்போகின்றதே' என்று ஆதங்கப்படும் - குமுறிக்கொள்ளும் - மனங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தெம்பினை ஊட்டுகின்றது. விழா அரங்கிலே மங்களச் சுடர் ஒளி விட்டுப் பிரகாசிக்க அந்தணச் சிவாச்சாரியர்கள் ஆசியுரையினை அமுதவாக்காகச் சொல்லி முடிக்க நிகழ்வின் பிரதம விருந்தினர் தனது உரையினையும் சுருக்கமாகக் கூறி அமர்ந்தார். விழா அழைப்பிதழில் குறிக்கப்பட்ட நேரத்தில் ஆரம்ப சம்பிரதாய நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. 'அன்பார்ந்த பார்வையாளர்களே! எமது பண்பாட்டு விழாவின் ஆரம்ப சம்பிரதாய நிகழ்வுகள் இத்துடன் நிறைவு பெற்றுள்ளன. இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன' என்று அறிவிப்பாளரின் குரல் கணீரென்ற தொனியில் அந்த மண்டபம் அதிரும்படியாக ஒலித்தது. 'முதல் நிகழ்வாக நடனம்' என்று நிகழ்ச்சி நிரலினை அறிவித்தார் அறிவிப்பாளர். பண்பாட்டடு விழா ஆதலால் முதலில் 'வரவேற்பு நடனம்' தான் என்ற எமக்குள்ளெ தீர்மானித்து விழிகளை அரங்கின் நேரே வைத்திருந்தோம். அரங்கில் திரை விலகியது; அப்போது - முன்னர் எமக்குள் நாம் தீர்மானித்த கற்பனையும் விலகியது. நாம் எதிர்பார்த்திருந்தது வரவேற்பு நடனத்தை; ஆனால், 12 வயதுச் சிறுமி ஒருத்தி 'ஜீன்சும், ரீசேர்ட்டும்' அணிந்தபடி அரங்கினில் காட்சியளித்தாள். 'மன்மதராசா... மன்மதராசா... கன்னி மனசை கி்ள்ளாதே...' என்ற பாடல் வானலையில் அதிர - அந்தச் சிறுமி ஆடத் தொடங்கினாள், தமிழர் பண்பாட்டு விழாவின் வரவேற்பு நடனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக