சனி, 22 மே, 2010

நக்கீரன் பத்திரிக்கை கேணல் ராமுடனான பேட்டியின் 2 ஆம் பாகம் ...

""படபடக்கும் பறவைகளின் சிறகுகள்கூட அச்சத்தை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது அந்த வனப்பகுதியில். ஆனால், மரணத்தை எந்த நேரத்திலும் வரவேற்கக் காத்திருக்கும் விடுதலை வீரர்களை இந்த சலசலப்புகளால் எதுவும் செய்துவிடமுடியாது என்பதை அவர்களின் மன உறுதி வெளிப்படுத்துகிறது'' என்கிறார்
 ஈழத்தின் கிழக்கு மாகாணக் காடுகளில் கேணல் ராமை சந்தித்த தமிழகப் பத்திரிகையாளர் பாண்டியன். அடர்ந்த காடுகளுக்கு நடுவே நடந்த இந்த சந்திப்பின்போது, எந்த நேரத்திலும் சிங்களப் படை சுற்றி வளைக்கலாம் என்கிற சூழல் நிலவியதை யும், தங்கள் உயிர் பற்றி கவலைப்படாமல், தமி ழகத்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளரைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினர் விடுதலைப்புலிகள். காட்டுக்குள் பரண் அமைத்து அதில்தான் அவர்கள் தங்கி யிருக்கிறார்கள். அந்தப் பகுதியைச் சுற்றி ஐந்து கி.மீ. பரப் பளவுக்கு அவர்களின் பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பில் கேணல் ராமுடன் நடந்த உரையாடலை, தொடர்ந்து விவரித்தார் பாண்டியன். நான் கேணல் ராமிடம், "முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப்பிறகு, விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் உலகத்திற்கு செய்தி சொல்லிக்கொண்டிருக் கிறது. ஆனால், நீங்கள் வலிமையான ஒரு படையைக் கட்டி யமைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.வடக்கில் மிகக் கொடுமையான தாக்குதலை நடத்தி, புலிகளை வீழ்த்திய சிங்கள ராணுவம், கிழக்கில் மட்டும் உங்களைத் தொட முடியாமல் இருப்பது எப்படி' என்று கேட்டதும், உங்களுக்கும் அதே சந்தேகமா என்பதுபோல ஒரு பார்வை பார்த்துவிட்டு, பதில் சொல்ல ஆரம்பித்தார் ராம். ""தலைமையின் கட்டளைப் படி நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் எங்கள் படையணி நேரடி போரில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந் தது. முள்ளிவாய்க் காலுக்குப்பிறகு, போராட்டத் தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். இது அத்த னை சுலபமானதல்ல என்பது நடைமுறை அனுபவத்தில் புரிந்தது. கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரே இடத்தில் முகாம் அமைத்து எங்களால் செயல்படமுடியாதபடி ராணுவத்தின் கண்காணிப்பு நிலவுகிறது. என்னைக் குறி வைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நீண்டகால போர்க்கள அனுபவத்தின் காரணமாக நான் தப்பித்து வருகிறேன். எங்கள் படையணி யினரின் வீரமும் மன உறுதியும் தாய்நாட் டின் விடுதலை வேட்கையும்தான் எங்களை இயங்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், சிங்கள ராணுவத்துக்கு நாங்கள் சவாலாகவே இருந்துவருகிறோம். சில மாதங்களுக்கு முன், கிழக்கு மாகாண காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து சிதறியதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இதனை வெறும் விபத்து என்பதைப்போல இலங்கை அரசு சித்தரித்தது. உண்மையில், எங்கள் படையினர் சுட்டு வீழ்த்தியதால்தான் அந்த ஹெலி காப்டர் விழுந்து நொறுங்கியது. புலிகளின் வலிமையை இலங்கை அரசு உணர்ந்திருக்கிறது. ஆனால், உலக நாடுகளை ஏமாற்றும் விதத்தில் அது அறிக்கைகளை வெளியிடுகிறது. 6 மாதங்களுக்கு முன்பு, தென்கொரியத் தலைநகர் சியோலில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த இலங்கை விமானத்தை சர்வதேச ஏஜென்சிகள் சுற்றி வளைத்து மடக்கின. என்ன காரணம்? அந்த விமானத்தில் கெமிக்கல் பாம் நிரப்பப்பட்டிருந்தது. நான்காம் ஈழப்போரில் பயன்படுத்தப்பட்ட அதேவகையான கெமிக்கல் பாமை, போர் முடிந்ததாகச் சொல்லும் இலங்கை அரசு ஏன் கையாளவேண்டும்? விடுதலைப்போர் இன்னும் முடியவில்லை என்பதும், புலிகளை அழிக்க முடியாது என்பதும் இலங்கை அரசுக்குத் தெரியும். அதனால்தான், ராணுவம் எங்களைக் குறிவைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது'' என்று கேணல் ராம் விவரித்தார். கொழும்பில் நாங்கள் தரையிறங்கியதிலிருந்து, மலைக்காட்டுப் பகுதியை அடையும்வரை பலவிதமான நெருக் கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததையும் அவரிடம் நான் பகிர்ந்துகொண்டேன். ஏர்போர்ட் இமிகிரேஷனில் என்னைப் பத்திரிகையாளர் என்று பதிவு செய்துகொண்டபோது, அதிகாரிகளின் பார்வை குத்தீட்டி போல கூர்மையாக என் மீது பதிந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. கொழும்பில் எனக்காக ஒரு ஹோட்டலில் ரூம் போடப்பட்டிருந்தது. அங்கே ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, தொடர்புகொள்ளச் சொன்னார்கள். நான் தொடர்புகொண்டபோது எதிர் முனையில் பேசியவர், நானே உங்கள் லைனுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு, அங்கிருந்து வேறொரு ஹோட்டலுக் கு சென்று தங்குமாறு தகவல் வந்தது. அங்கேயிருந்துதான் என்னை திரிகோண மலைக்கு கூட்டிச் சென்றார்கள். போகும் வழியிலேயே, வேறொரு இடத்துக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அது எந்த இடம் என்பதை நான் குறிப்பெடுக்க முயன்றபோது, தயவு செய்து குறிப்பெடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டதால் நானும் குறிப்பெடுக்கவில்லை. அந்தளவுக்கு அவர்கள் முன்னெச்சரிக்கையோடுதான் செயல்பட்டார்கள். எத்தகைய ஆபத்தும் சூழக்கூடும் என்பதாலும், என்னிடம் உள்ள குறிப்புகள் ராணுவத்தின் கையில் சிக்கினால், புலிகளின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு முற்றுகையிடுவார்கள் என்பதாலுமே அவர்கள் இப்படி செயல்பட்டார்கள். இலங்கைக்குப் பயணமாகும்போதே நானும் இதையெல்லாம் எதிர்பார்த்துதான் வந்தேன். தொடர்பு எண்களை என் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டேன். ஆபத்து நிறைந்த பயணம் என்பதையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும் உணர்ந்தே இருந்தேன். எனினும், கேணல் ராம் தலைமையிலான படையினர் மீது ஈழத்தமிழர் நலனில் அக்கறையுள்ள தமிழகத் தலைவர்கள் சிலரே சந்தேகங்கள் கிளப்புவதையும், இணையதளங்களில் இதுகுறித்த விவாதங்கள் நடப்பதையும் கவனித்தபிறகு, நேரடியாகவே அவரிடம் இதுபற்றி கேட்டுவிடலாம் என்றுதான் நேர்காணலின்போது அந்தக் கேள்வியைக் கேட்க ஆயத்தமானேன். புலிகள் தேநீர் தயாரித்துக் கொடுத்தார்கள். பால் இல்லாத தேநீர். சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்திருந்தார்கள். மலைத் தேயிலை, காட்டுத் தேன் என இயற்கை அளித்த அமுதம் போல அது சுவைத்தது. நீண்ட பயணக் களைப்பினைப் போக்கும் மருந்தாகவும் அமைந்தது. அதனைப் பருகியபடியே என் கேள்வியை முன்வைத்தேன். "நீங்கள் இலங்கை அரசுடனும் கருணாவுடனும் தொடர்பில் இருந்து கொண்டு, தமிழினத்திற்கு துரோகம் இழைப்பதாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. சிதறிக் கிடக்கும் புலிகளை ஒன்றிணைப்பது என்பதே சிங்கள ராணுவத்திடம் காட்டிக்கொடுப்ப தற்காகத்தான் என்றும், மிஞ்சியிருக்கும் புலிகளை மொத்தமாக இலங்கை அரசிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறதே' என்றேன். முகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டாமல் பேசத் தொடங்கினார் கேணல் ராம். ""எதற்காக இப்படிப்பட்ட விமர்சனமும் குற்றச்சாட்டும் தமிழ்ச் சகோதரர்களால் முன்வைக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. நிதர்சனம் என்ன என்பதை நீங்களே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நான் 1982-83-ம் ஆண்டுவாக்கில் இயக்கத்தில் சேர்ந்தேன். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில்தான் பயிற்சிகளைப் பெற்றேன். ஈழத்தைப் பொறுத்தவரை, கிழக்கு மாகாணத்தினரும் வடக்கு மாகாணத்தினரும் ஒருவரையொருவர் நம்ப மாட்டார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மட்டக்களப்பு லெஃப்டினென்ட்டாக ஜோ இருந்தார். அதன்பிறகு ரீகன் என்ற சிற்றம்பலம் இருந்தார். பிறகுதான் கருணாம்மன் பொறுப்புக்கு வருகிறார். கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த பொறுப்பையும் கருணாம்மனின் கையில் தலைவர் கொடுத்தபோதும், அதற்குள் அடங்கிய அம்பாறை மாவட்டத்தை தனியாக என்னிடம் ஒப்படைத்தார். எனக்கு தலைவர் கொடுத்த பணி என்பது, அம்பாறைக்கு அருகிலிருக்கும் சிங்கள பகுதிகள் மீது, ராணுவத்திற்கு நடுக்கம் ஏற்படுத்தும் விதத்தில் கொரில்லா தாக்குதல் நடத்த வேண்டும் என்பதுதான். அதை நான் முழுமையாக செய்தேன். என் மனைவியை குருவியக்கா என்றுதான் இயக்கத்தினரும் பொதுமக்களும் அழைப்பார்கள். அவர் நர்ஸாக இருந்தவர். எங்களுக்குத் திருமணம் செய்துவைத்தவரே தலைவர்தான். நான்காம் ஈழப்போரின் கடைசிகட்டத்தில் சிங்கள ராணுவத் தின் குண்டுவீச்சுத்தாக்குதலில் என் மனைவியும் இரண்டு மகள்களும் இறந்து போய்விட்டார் கள். விடுதலைப் போராட்டத்தை முன் னெடுத்துச் செல்லும் ஒரே நோக்கத்துடன்தான் உயிர் வாழ்கிறேன். இது எப்படி துரோகமாகும். யார் துரோகி, யார் தியாகி என்பதற்கு காலம் பதில் சொல்லும். எங்களுக்கு உணவுத்தட்டுப்பாடு இருக்கிறது. தமிழீழ மக்கள் தங்கள் வறுமையிலும் எங்க ளுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து உதவுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவு கிடைக்கிறது. காட்டுக்குள் இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி எங்கள் போராட்ட வாழ்வைத் தொடர்கிறோம். இப்படியெல்லாம் சிங்கள ராணுவத்தை எதிர்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பி, எங்கள் மீது துரோக முத்திரை குத்தப் பார்க்கிறவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்கிறேன்... நாங்கள் மரபுரீதியான போர் முறையைக் கடைப்பிடிக்கவில்லை. அதற்கான சூழ்நிலையும் இப்போது இல்லை. எங்களிடம் உள்ள பலத்தை உணர்ந்து, கொரில்லா முறையிலான தாக்குதல் களை நடத்தி வருகிறோம். இதில், பலவிதமான தந்திரங்களையும் வியூகங்களையும் கையாண்டு வெற்றி பெறமுடியும். தலைவர் அதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அவர் வழியில்தான் எங்கள் போராட்டம் தொடர்கிறது. சிங்கள ராணுவத்தின் இரவுகளை தூங்காத இரவுகளாக நாங்கள் ஆக்கியிருக்கிறோம். எங்களின் வீரப்போர் பற்றி அறிந்த ஒரு பெரிய நாட்டின் உளவுத்துறை, எங்களுக்கு ஆயுத உதவி செய்வதாக தகவல் அனுப்பியது'' என்றார் கேணல் ராம். "எந்த நாடு?' என்றேன். (நேர்காணல் தொடரும்) -பிரகாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக