சனி, 22 மே, 2010

ஆணைக்குழுக்கள் மூலம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

இலங்கை ஏற்கனவே 20 வருடங்களை விவாதங்களில் வீணாகக் கழித்து விட்டது என்பது தெளிவானது. மேலும் அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் மூலம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய தருணம் இதுவாகும். என ஓய்வு பெற்ற இந்திய புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஹரிஹரன் தெவித்துள்ளார். இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றில் “சில வெற்றித் தின சிந்தனைகள்' எனும் தலைப்பில் வெளியான ஆசிரிய தலையங்கம் குறித்து
 கருத்து வெளியிட்ட போதே ஓய்வு கேணல் ஆர்.ஹரிஹரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யுத்தம் தொடர்பான பாடங்களை எம்மில் எல்லோரும் ஏற்கனவே கற்றுள்ளோம். முப்பது வருட யுத்தத்தில் இன்னும் கற்க வேண்டிய பாடங்கள் குறித்தும் நன்றாகவே அறிந்துள்ளோம். இவற்றுள் சில: எந்த ஒரு சமூகமும் மற்றொரு சமூகத்தை அடக்கவோ நசுக்கவோ கூடாது. வன்முறைகள் நற்பலனைத் தராது. இந்த நாடு குறிப்பிட்ட எந்த ஒரு சமூகத்திற்கும் சொந்தமானதல்ல. சகல சமூகங்களும் நாட்டுக்குச் சொந்தமானவை. வெவ்வேறு சமூகங்களால் பிரிக்கக் கூடிய வகையில் நாடு இல்லை. அது சிறியது. ஆனால் சகல சமூகங்களும் சமாதானமாக வாழக் கூடியது எனவும் அவர் கூறியுள்ளார். மிகவும் எதிர்பார்த்திருந்த ““கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க சபை'' ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இந்த ஆணைக்குழு நியமனம் ஓராண்டு காலமாக அடை காக்கப்பட்டு வந்தது. ஐ. நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தனது அரசாங்கம் ““உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் சபையில் 2009 ஜூன் மாதம் தெரிவித்திருந்தார். இவ்வளவு காலத்தின் பின்னர் வெற்றித் தின நிகழ்வின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ, ஆணைக் குழு நியமனத்தை ஏன் தெரிவு செய்தார்? யுத்த காலத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டில் இருந்து விடுபட பல வழிறைகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அந்த வகையில் இந்த ஆணைக்குழு விவகாரம் ஒன்றாகும். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ ன் இந்த விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் பிரேரணையை முன்வைத்ததன் விளைவாக இலங்கை அரசாங்கம் எல்லா வகையிலும் அதனை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. உண்மையில், ஐ. நா. செயலாளர் நாயகத்தின் நடவடிக்கையை குளறுபடி செய்து கெடுத்து விடும் நோக்கில் அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அணிசேரா நாடுகளின் இயக்கம் பிரதிநிதிகளின் ஆதரவைத் தேடியது. யுத்தத்தில் ஈடுபட்டது முதல் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனக்குத் தானே சிக்கலுக்குள் உள்ளாகியது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிவில் சமூகத்திற்கு பெரும் வேதனையை அளிக்க இது காரணமானது. அவசர கால நிலை மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பன யுத்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் எவராயினும் அவர்கள் மீது இச்சட்டம் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. பிரபல ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் உலக ஊடகத்துறையில் இலங்கை “கறுப்புப் புத்தகத்தில்' பதிவானது. இந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பெரிதும் கவலை தெரிவித்திருந்தார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரித்தது. ஐ. நா. வின் குரல்கள் இலங்கை மீது கொடூரமாக ஒலித்தன. இதன் விளைவாகவே “நிபுணர்கள் குழு' ஒன்றை நியமிக்க பான் கீ மூன் பிரேரித்தார். தர்க்க சாஸ்திர அடிப்படைக் கொள்கையின்படி விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை அழித்து யுத்தத்தில் வெற்றி பெற்றதன் பின்னர், யுத்த காலத்தில் அமுல்படுத்திய சகல கட்டுப்பாடுகளையும் இலங்கை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. இருப்பினும் சிறிய அளவிலான நடவடிக்கைகளை ஜனாதிபதி ராஜபக்ஷ மேற் கொள்வதாகத் தோன்றுகிறது. இந்தியாவுக்கு கவலை தரும் சில விவகாரங்கள் குறித்து இந்திய வெளி விவகார செயலாளர் நிருபமாராவ் இலங்கையில் தெரிவித்த கருத்தினையடுத்தே “கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ஆணைக்குழு தனது பணியினை முடித்தாலும் கூட சட்ட மறுப்புவார்த்தைகள் மூலம் அதன் ஆலோசனையை அமுல் செய்ய தாமதப்படுத்துவதற்கும் இடமுண்டு. சர்வதேச நெருக்கடி தொடர்பான குழுமம், சனல் 4 தொலைக்காட்சியும் ஆயுதப் படைகளும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவரமாகத் தெரிவித்துள்ளன. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் யுத்தக் குற்றச்சாட்டுகள் விவகாரத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இவற்றுக்கு இலங்கை முகம் கொடுப்பதோடு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். இலங்கையில் மனிதாபிமான செயற்பாட்டிற்கான நிதியில் 24 வீதத்தையே இலங்கை பெற்றுள்ளது என ஐ. நா. அறிக்கை கூறுகிறது. ஆகவே ஆணைக்குழு நியமனம் இலங்கைக்கு எதிரான கொடூரமான குரல்களை தணிக்கப் போவதில்லை. அல்லாமலும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை அதிகரிக்கப் போவதுமில்லை. கடந்த காலங்களில் பல ஆணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. நிர்வாகத் தந்திரோபாயங்கள் மூலம் தாமதப்படுத்தப்பட்டன. இதுவும் அவ்வாறானதாகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக