சனி, 22 மே, 2010

அமையாமல் போகாது தமிழீழம்...............


 உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக சமர் புரிந்து எண்ணற்ற கவிஞர்கள், படைப்பாளிகள், அரசின் ஆசைகளுக்கு பலியாகமால் அரியாசனத்தின் அசைவுகளில் விழுந்துவிடாமல் அவர்களின் ஆசை வார்த்தைக்கு வசப்படாமல் வரலாற்றை தூக்கி நிறுத்தினார்கள். அடக்குமுறையாளர்கள் அவர்களின் கவிதைப் பல்லுக்கிடையே சிக்கி, பிழிந்தெறியப்பட்டார்கள். எந்த இடையூறுக்கும் எந்த அடக்குமுறைக்கும் அவர்கள் அஞ்சவில்லை. காரணம்,
 அவர்கள் தமது படைப்புகளை மக்களுக்காக படைத்தளித்தார்கள். ஆசை விருந்துகள் அவர்களிடையே தோற்றுப்போனது. ஆகவேதான் இன்றுவரை அவர்கள் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கவிதைகள் உயிரோடு வலம் வருகிறது. அதன் உயிர் சத்தங்கள் நமது மனங்களை இன்றுவரை உறங்காமல் விழி திறக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரலாறு எப்போதும் தோற்றுப்போவோரின் பக்கத்தில் நிற்பதில்லை. அது, அடக்குமுறையாளர்களை வெல்லம் என புரண்டு, புரட்டிப்போட்டு தமது வாழ்வை மக்களோடு பிணைத்துக் கொள்கிறது. ஆகவேதான் வரலாறு இதுவரை தான் இயங்கிக் கொண்டே தமது கதாநாயகர்களான மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சில காலம் தமது அடக்குமுறை கரங்களில் மாந்தகுல குருதிகளை உலகம் முழுக்க பூசிக் கொண்டு, வேதியியல் கருவிகளைக் கொண்டு மாந்தத்தை கருக்கித் தள்ளும் இந்த கயவர்கள், ஒருநாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களை காப்பாற்ற எந்த கரமும் நீளாது. அந்த தனிமையின் கொடுமையில் அவர்கள் நொந்து வாழ்வை இழப்பார்கள். அதோடு காலமும், வரலாறும் அந்த துரோகிகளை மாந்த குல எதிரிகளை காரி துப்பிவிட்டு மக்களின் தோள்மீது கரங்களைப்போட்டு மீண்டும் புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும். அவர்களுக்கான புதிய உலகையும், புதிய வாழ்வையும் படைத்தளிக்கும். ஆகவே, தோற்றுப்போன வரலாறு என்று மக்களுக்கு என்றுமே கிடையாது என்பதை உலகத் தமிழின உறவுகள் மறந்துவிடக் கூடாது. இன்று ரத்த வெறி பிடித்த இன வெறியன் ராசபக்சேவின் அடக்குமுறைக்கு எதிராக இன அழிப்புக்கு முரண்பட்டு நிற்கும் புதிய உலகு கிழக்கு வானிலே ஒளிக்கீற்றாய் நமக்குத் தெரிகிறது. மாபெரும் கவிஞன் புஷ்ஷின் இவ்வாறு சொல்கிறான், நெருங்காதேஉன்னோடு ஒட்டும் இல்லை,உறவும் இல்லை.உணர்வெல்லாம் கெட்டுகல்லானது. கனமும் என் கவிதையாய்இசைக்காது உனக்காது.என்று அடக்குமுறையாளர்களுக்கு எதிரான நிராகரிப்பை தொடர்ந்து செய்தது கவிதைதான். ஆனால் இன்று அரசவைக்கு சாமரம் பேசும் கேடுநிறைந்த துரோகிகள் ஏதோ தமக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் கேவலம் சுகத்திற்காக, பதவிக்காக, பணத்திற்காக தம்மையே இழந்து, மாந்தம் என்ற தமது அடையாளத்தை இழந்து முகம் தெரியாமல் மூளையில் கிடக்கிறார்கள். ஆனால் இவர்களைப் பார்த்து நாம் அமைதிகாத்துவிட வேண்டாம். நமது இனத்தின்மீது தொடுக்கப்பட்ட அநீதிக்கு அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு பழி தீர்க்கும்வரை நம்முடைய வாழ்வும், நம்முடைய எண்ணமும் மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் தயக்கமின்றி பயணிக்க வேண்டும். இது, வருங்கால தமிழ் சமூகத்திற்கு, தமிழின வாழ்வுக்கு, தமிழர்களின் அடையாளத்திற்கு நாம் செய்யும் ஈகமாகும் என்பதை உள்ளார்ந்த உணர்வோடு செயல்படுத்த தொடங்க வேண்டும். அசைக்க முடியாதது என்று இந்த உலகில் ஒன்றும் இல்லை. இந்த உலகை உலுக்கிய பல கொடுங்கோலர்கள் வீழ்ந்து போயிருக்கிறார்கள். நமது இனம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. நாம் நாளை இதற்காக போராடலாம் என்று உறங்கிவிட நேரம் கிடையாது. தமிழின விடுதலையை ஒடுக்கிவிட சிங்கள பாசிசம் நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. ஆனால் அது இறுதிவரை நீடிக்காது என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏராளமாக இருக்கிறது. இன்று சிங்கள பாசிசத்தை தலைமேல் சுமக்கும் சில பரிசுத்தவான்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எஸ் ராபவுண்ட் போன்று. இவன் கலை கலைக்காகவே என்ற காட்டுக் கத்தலில் நிலைத்துப் போனவன். தம்மை ஒரு பிரதானமான மார்க்சிய எதிர்ப்பாளனாக காட்டிக் கொள்வதற்காக தொடர்ந்து போராடியவன். தமது வாய்களிலிருந்து வரும் வார்த்தைகள் மார்க்சியத்திற்கு எதிராக மட்டுமே வரவேண்டும் என்பதிலே தீர்மானமாக இருந்தவன். அவன் மார்க்சியத்தின் மீது கொண்ட வெறுப்பால், தமது அறிவுக்கே தானே தடைவிதித்துக் கொண்டான். அவன் அறிவின் சாளரத்தை இறுக்க மூடி வைத்தான். கார்க்கி, டால்ஸ்டாய், செகாவ், துர்கனேவ் போன்ற இலக்கிய மேதைகளின் பெயர்களைக் கூட உதடுகள் உச்சரிக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தான். அவர்கள் ரஷ்யர்களாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த மாமேதைகளை அவன் நிராகரித்தான். ரஷ்யர் என்றச் சொல் அவனை கிலியூட்டியது. வெறுப்படைய செய்தது. அந்த பெயரையே அவன் வெறுத்தான். ரஷ்யா என்பது இந்த உலக வரைபடத்தில் இருந்தே வழி தெரியப்பட வேண்டும் என்பதிலே அவன் தொடர்ந்து பணியாற்றினான். அதற்காக அந்த சிகப்பு மண் இருக்கும் தேசத்தை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. இதன் காரணமாக இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, இந்த படைப்பாளி முசோலினியின் வார்த்தையாக செயல்படத் தொடங்கினான். இத்தாலியிலே முசோலினியின் பரப்புரையாளனாக பட்டம் வாங்கிக் கொண்டு, தமது சிந்தனையை ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து வீசி வந்தான். அவனுக்கு ரஷ்யர்களைப் போலவே யூதர்களையும் பிடிக்காமல் போனது. ஆனால் இந்த பாசிஸ்ட் வெறியன், வானொலியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அமெரிக்கப்படையால் கைது செய்யப்பட்டான். மாபெரும் அடக்குமுறையாளனான முசோலினி வீழ்த்தப்பட்டான் என்ற செய்தி அவனுக்குள் ஏற்பட்ட மனஉளைச்சல் பெரும் அதிர்வை உண்டாக்கி அவனை மனநோயாளியாகவே மாற்றி விட்டது. அமெரிக்கா அவனை 12 ஆண்டுகள் மனநோய் விடுதியிலே கைதியாய் வைத்து காவல் காத்தது. பின்னர் நாடு கடத்தப்பட்ட அவனுக்கு ஜெர்மனியின் சுவொஸ்திக் கொடி மிதிப்பட்டுப் போனதைக் கண்டு தடுமாறிப்போனான். ஆஹா.. இட்லரா தோற்றுப் போனான். அந்த செஞ்சேனை வென்று விட்டதா என்று நினைத்து நினைத்து மனங்கசந்து மௌனத்தில் உறைந்துபோன அவன், தற்கொலை செய்துக் கொள்ளக்கூட துணிந்தான். எந்த நிலையிலும் அவனால் ரஷ்யாவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அது அவனுக்குள் ஏற்படுத்திய உளைச்சல். அந்த செஞ்சேனை மக்களுக்கான மாபெரும் ஆற்றல் களமாக இருந்தது. இது உலகத்தின் வரலாறு. முசோலினியும் இட்லரும் வீழ்த்தப்பட்ட மண்ணிலிருந்துதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இட்லரும், முசோலினியும் மாந்த குலத்தின் மாபெரும் கதாநாயகர்களாக பார்த்துக் கொண்டிருந்த பல கவிஞர்கள், அவர்கள் வீழ்ந்தார்கள் என்ற செய்தியால் மனநோயாளியாய் மாறிப்போனார்களேத் தவிர, மக்கள் நீடித்து வாழ்ந்தார்கள். இப்படி மக்கள் வென்ற மண்ணிலிருந்துதான் நாம் இந்த படைப்புகளை உங்களிடம் அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே நமது இனத்தை எந்த நிலையிலும், யாராலும் வெல்ல முடியாது என்கின்ற உள்ள உறுதியை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நமது தேவையை நோக்கி நாம் பயணிக்கும் இந்த தருணத்தை சரியாக பயன்படுத்த வேண்டிய நிலையில் எமது உலகத் தமிழ் உறவுகள் இருக்கிறார்கள். தமிழகமானாலும் உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களானாலும் முன்னைக்காட்டிலும் உறக்க ராசபக்சே குற்றவாளி என்று சொல்லவேண்டிய தருணம் வந்திருக்கிறது. தயக்கம் வேண்டாம். நாம் பார்த்த வரலாறுகள் அடக்குமுறையாளர்களை வாழ வைத்தது கிடையாது. அவர்களோடு ஒப்பிடுகையில் இந்த ராசபக்சேவும், அவனின் சகோதரர்களும் தூசுக்கு சமமானவர்கள். அவர்களின் வீழ்ச்சியை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமது ஆதரவு களத்தில் இருந்தபோது, தலைமேல் வைத்துக் கொண்டாடிய சரத் இன்று அவர்களின் அடக்குமுறை சிறைச்சாலையிலே ஒடுக்கப்பட்டிருக்கிறார். ஆகவே எந்த அடக்குமுறையாளனாக இருந்தாலும், அவனுக்கான குணநலன் இதுதான். இதை மாற்றி அமைக்க முடியாது. ஆகவே நாம் சமர்களத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். கருவிகளை மௌனிக்க செய்த நமது தேசிய தலைமை இப்போது அறிவாயுதங்களை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறது. ஒவ்வொரு புள்ளியும் அந்த அறிவாயுதங்களால் தீர்மானிக்கப்பட இருக்கிறது. நாம் அடக்குமுறைக்கு அஞ்சி, கருவிகளைப் போல அறிவையும் உறையில் போட வேண்டாம். உண்மைகள் உறங்கிப் போகாது. அதை உலகிற்கு அறிவிக்க நாம் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்மை நமது இனத்தை ரத்த சகதியிலே போட்டு புதைத்த அந்த கொடியவனின் கோர முகத்தை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டிய தருணத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமக்குள் மன்னிப்பு என்ற வார்த்தை மறந்தும் வரக்கூடாது. நமக்குள் எரியும் கோப நெருப்பு எமது உறவுகளின் அணைக்கப்பட்ட மூச்சுக் காற்றில் இருந்து மேலும் மேலுமாய் கிளர்ந்தெழ வேண்டும். அவர்களின் மூச்சுக்காற்றில் எரியும் எமது விடுதலைப் போர் அணையாமல் காக்க உங்களையே அவர்கள் நம்பி தம்மை ஒப்படைத்தார்கள். ஆகவே நீங்கள் துளித்துளியாய் ஒன்றிணைந்து பெருங்கடலாய் வெற்றி எழுந்து நிற்க வேண்டும். அடக்குமுறையாளனைக் கண்டு அஞ்ச வேண்டாம். அவன் தூக்கி எறியும் ரொட்டித் துண்டுகளுக்காக வாலாட்ட வேண்டாம். உறக்கத்தை தவிர்ப்போம். தவிப்போடு வாழும் எமது மக்களின் விடுதலை உறுதி செய்ய தொடர்ந்து போராடுவோம். நாம் வெற்றி பெறும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த கொடுங்கோலனை அடையாளப்படுத்துவோம். உலக அரங்கிலே அவனை குற்றவாளி என்று சொல்லும் வரை நமது போராட்டத்தை அணையாமல் காப்போம். தமிழீழம் அமைய உறுதி எடுக்க இதுவே சிறந்த காலம். மறந்துவிட வேண்டாம். நமது தேசத்தைக் கட்டி அமைக்க நமக்கு நாமே அறைக்கூவல் விடுப்போம். அமையாமல் போகாது தமிழீழம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக