சனி, 22 மே, 2010

முள்ளிவாய்க்காலில் ஆயுத பலத்தை இழந்து போன போது ...............!

இந்தமுறை ஏமாந்தது சிங்கள அரசிடம் மட்டுமல்ல. உலக வல்லாதிக்க சக்திகளையும் நம்பி ஏமாந்து போன நாள். உலகமே ஈழத்தமிழினத்தை வஞ்சித்த நாள். இறுதிப்போரின் ஒரு கட்டமாக முள்ளிவாய்க்காலுக்குள் இலட்சக்கணக்கான மக்களும் தமிழீழத்தேசியத் தலைமை மற்றும் தளபதிகள் போராளிகளும் முடங்கிப் போயிருந்த கட்டத்திலும் தமிழ்மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பினார்கள். சர்வதேசமே எம்மை ஓடி வந்து காப்பாற்று என்ற கதறினார்கள்
. தொலைதூர நாடுகள் இல்லாது போனாலும் அயல்நாடான இந்தியாவேனும் கைகொடுத்துக் காப்பாற்றும் என்று முழுமையாக நம்பினார்கள். இலட்சக்கணக்கான மக்களை, காயப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போராளிகளைக் காப்பாற்ற யாருமே வரவில்லை. அமெரிக்கா, இந்தியா என்று உலகின் பல நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் மனிதாபிமான அடிப்படையில் தமிழருக்கு உதவ முன்வரவில்லை. பேரழிவைத் தடுக்க முனையவில்லை. ஏதோ உதவுவது போன்று கூறிக் கொண்டு நாடகமாடினரே தவிர கடைசி நேரத்தில் எந்த உருப்படியான காரியத்தையும் ஆற்றவில்லை. சிங்களதேசத்தின் கைகளில் சிக்கி தமிழரின் கடைசிப் பலம் சிதைந்து போய்க் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தன. இது தான் உலம். அரசுகளுக்கு ஒரு நியாயம்,அடக்கப்படும் மக்களுக்கு இன்னொரு நியாயம் என்பதை உலகம் இன்னொரு தடவை உணர்ந்து கொண்டது. தமிழினத்துக்கு இப்படியொரு ஏமாற்றம் கிடைக்கும் என்ற யாரும் எதிர்பார்த்ததில்லை. கைகொடுப்பார்கள் என்று இறுதிக்கணம் வரை தமிழ் மக்கள் நம்பியிருந்தவர்கள் எல்லோருமே கையை விரித்து விட,கதியற்றவர்களாக எமது மக்கள் அலறித் துடிதுடித்தனர். ஆயிரக்கணக்கான மக்களின் குருதி முள்ளிவாய்க்காலில் வழிந்தோடியது. வெண்மணல் எங்கும் இரத்தக் கறைகள் உறைந்துபோயின. இவ்வளவுக்கும் தமிழ் மக்கள் செய்த பாவம் தான் என்ன? தமது உரிமைகளைத் தட்டிக் கேட்க முனைந்தது தான் நாம் செய்த பாவமா? எமக்கான பாரம்பரிய வாழ்விடத்தில் ஒரு அரசமைத்து வாழ அசைப்பட்டது தான் நாம் செய்த குற்றமா? உலகமே எம்மைக் கைவிட்ட நிலையில் வேறு வழியேதுமில்லாமல் குண்டு போட்டு;க் கொன்று குவித்தவர்களிடமே மண்டியிடும் நிலை வந்தது. அலையலையாக மக்கள் வெளியேறி படையினரிடம் சரணடைந்த போது நடந்தது என்ன? மனிதாபிமானத்துடன் சிங்கள தேசம் எம்மை நடத்தியதா? ஏதோ பயங்கரமான மனிதர்களாகவே பார்த்தது. மிருகங்களை விடக் கொடுமையாக நடத்தியது. வாருங்கள் வளமான வாழ்வு தருகிறோம் என்று கூவி அழைத்த சிங்கள தேசம் வளமாக வாழ்வையா கொடுத்தது? சிறைப்பட்ட முகாம் வாழ்வு. மழை- வெயில்- வெள்ளம் என்று எல்லாமே வாட்டி வதைக்க தமிழ் மக்கள் யாருமேயற்ற அனாதைகள் போன்றிருந்தார்கள். ஆறு மாதங்களக்கு மேலாக அடைபட்டிருந்த வன்னி மக்களை கைகொடுத்துக் காப்பாற்றி நல்லதொரு தீர்வைக் காண உலகம் முன்வந்ததா? யாருமே எமக்காக வரவில்லை. தமிழ் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். பலமாக இருந்த போது ஓடி ஓடி கிளிநொச்சிக்கு வந்தவர்கள் எல்லாம் சிறைப்பட்ட மக்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இது ஏன்…? எம்மிடம் பலம் இல்லை. எமது ஆயுதபலம் எப்போது இல்லாது போனதோ அன்றோடு போனது எமக்கான பாதுகாப்பு. இன்று தமிழரைப் பாதுகாக்கவும் யாருமில்லை- தமிழருக்காக குரல் கொடுக்கவும் யாருமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக