சனி, 22 மே, 2010

ஒரு கொலை செய்தாலும் ஒரு லட்சம் கொலை செய்தாலும் தூக்கு ஒன்று தான்- கோட்டபாய

முள்ளிவாய்க் காலில் சமர் முற்றுப் பெற ஒரு வார காலம் இருக்கும் ருவாயில் இலங்கை ராணுவம் மக்களை ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொண்டு இச்செய்தியை அனைத்து சிங்கள ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஒலிபரப்பு செய்து இலங்கை ராணுவத்திற்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல் பட்டுக்கொண்டிருந்தன. இறுதி சமரின் இறுதி நான்கு நாட்களில் ராணுவம் மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதல்களை இரவு பகலாக மேட்கொண்டிருந்தது. 

அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தின் கடற்படைத் தளபதி மக்களைக் காப்பாற்ற தனது கடற்படை தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட  அறிக்கை மேல் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒபாமாவும் பங்கிற்கு ஒரு அவசர ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி போரை நிறுத்தச் சொல்கிறார். போரில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவும் மருந்தும் வழங்கிடவும், ஊடகவியலாளர்களை யுத்த பிரதேசத்திற்கும் செல்ல அனுமதிக்குமாறும் இலங்கை அரசை கோருகிறார்.  எதையும் செவி மடுக்காத சிங்களம் கனரக ஆயுதங்களை பாவிக்கவில்லை என்று பொய்சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றி தனது கொடூர தாக்குதலை தொடர்கிறது. இவ்வேளையிலே பேரிடியாக இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது என்னும் செய்தி மக்களின் மிச்ச மீத நம்பிக்கையையும் சிதறடிக்கிறது. 

கனரக  தாக்குதல்களின்  உக்கிரத்தை தாங்க முடியாத மக்கள் ராணுவத்தின் பேச்சை உண்மை என நம்பி கூட்டம் கூட்டமாக ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசத்திற்கு வர ஆரம்பித்தார்கள். சமகாலத்தில்  இதற்க்கு மேல் மக்களையும் போராளிகளையும் இழக்க முடியாது என்பதை உணர்ந்த  போராளிகளும் ராணுவத்தின் பாதுகாப்பு அரண்களை உடைத்து வெளியேற தாக்குதல்களை உக்கிரமாக நடாத்தினார்கள். ராணுவம் சிதறி ஓடியது. 
மக்களின் இழப்பைத் தடுக்க நடேசன் தலைமையிலான 300 க்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைகிறார்கள். புலிகள் என்னும் அத்தியாயமே இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது அனைவரையும் சித்திரவதை செய்து சுட்டுக் கொல்ல கட்டளை இடுகிறார் கோட்டபாய.

ஆண்களின் ரத்தத்தால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும் பெண்கள் படையினருக்கு விருந்தாகட்டும் என்று ஏற்கனவே கட்டளை பிறப்பித்திருந்த கோட்டபாய இச்சூழ்நிலையில் தான், யுத்த களத்திளிருந்து ஒருவரையும் உயிரோடு தப்பிக்க விடவேண்டாம்; குழந்தைகள் முதல் முதியவர் வரை எவ்வித வேறுபாடுமின்றி  அனைவரையும் கொல்ல உத்தரவு பிறப்பிக்கிறார். ராணுவ மட்டத்தில் இது பற்றிய சிறு விவாதம் எழுந்த போதும் 58 ஆம் படையணியின் கட்டளைத் தளபதி சவெந்திர சில்வா படைகளுக்கு ஆணையிட்டு தொடக்கி வைத்தார்.

முதலாவதாக ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திகுள் வந்த மக்கள் ராணுவத்தின் கைகளிலிருந்த கனரக இயந்திர துப்பாக்கிகளின் நேரடிச் சூட்டுக்கு பலியாகி கூட்டம் கூட்டமாக செத்து மடிந்தார்கள். சரணடைய வரும்போது நேரடிச்  சூட்டுக்குப் பலியாகி இறந்த மக்களின் தொகையே 12000 ஐ தாண்டும் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.  இறுதி யுத்தத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் மொத்த தொகை நாம் நினைப்பது போல் 45,000 ஆக இல்லாமல்  67000- 75000 வரை இருக்கும் என்பது ஒரு மேல்மட்ட தகவல். 

கனரக ஆயுத தாக்குதலின் உக்கிரத்தை தாங்காமல் மக்கள் வெள்ளம் போல் ராணுவ கட்டுப் பாட்டுப் பிரதேசத்திற்கு வருவதை ராணுவத்தால் தடுக்க முடியாமல் ராணுவம் மக்களை சுடுவதை ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொள்கிறது. சமகாலத்தில் ஆர்ட்டில்லரி போன்ற கனரக ஆயுதங்களும் உயிருக்கு அஞ்சி ஓடிய மக்களை, பயந்து பங்கருக்குள் ஒளிந்திருந்த மக்களின் உயிர்களை வரையறையின்றி கொன்று குவித்தது. சொல்லப்போனால் ராணுவம் ஏவிய ஒவ்வொரு எறிகணைகளும் வீணாகாமல் தமிழ் மக்களின் உயிர் குடித்தது. எதிர் முனையில் இருந்து எவ்வித தாக்குதலும் வரவில்லை என்பதை உறுதி செய்த ராணுவம் முன்னேறிச் சென்றது. பிணக் குயியலைப் பார்த்த ராணுவம் தாக்குதலை நிறுத்தியது. தமிழ் மக்களின் ரத்தம் இராணுவமே அதிர்ச்சியுறும் அளவிற்கு  ராணுவத்தின் சப்பாத்துக்களை முழுவதுமாக நனைக்கிறது. யுத்தம் முடிந்து விட்டது பயங்கரவாதம் ஒழிந்து விட்டது என்று சிங்களம் கர்ஜிக்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊடகவியலாளர்களை யுத்த பிரதேசத்திற்குள் வருவதற்கு அனுமதி மறுத்திருந்த அரசாங்கம் கொல்லப்பட்ட உயிர்களின் எச்சங்களையும்  உயிரோடுள்ள காயப்பட்டு உறுப்புக்களை இழந்து முனகிய மக்களின் உடலங்களையும் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது. 

போர்க்குற்றம் 

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேச நாடுகளின் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப் பட வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பி இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. இதில் கோட்டபாயவே  முக்கிய பங்கு வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டும் உள்ளது. தன் மீது சுமத்தப் பட்டிருக்கும் போர்க்குற்றம் விசாரணைகளுக்கு வரும் முன், தன் அதிகாரம் பறிபோகுமுன் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளை இல்லாது ஒழிப்பதற்கான அடித்தள  முயற்சிகளை கோட்டபாய கடந்த வருடம் மேட்கொண்டிருந்தார். இதற்காக கோணேஸ்வரன் என்பவர் தலைமையில் 300 புலிகள் காட்டுக்குள் மறைந்துள்ளதாகவும் எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் பொருளில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதன் பொருளானது சிறை வைக்கப் பட்டுள்ள தங்கள் சகாக்களான  புலிப்போராலிகளை சிறை மீட்க அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள  ராணுவ முகாமைத் தாக்குவதாகும். இதன் போது சிறை வைக்கப்பட்டுள்ள  அனைவரையும் கொன்று விட்டு எதிர்த் தாக்குதலின் போது அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சர்வதேசத்தை நம்ப வைப்பதே ஆகும். ராணுவ மட்டத்திலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தது. கோத்தபாயவை எதிர்த்த ராணுவ அதிகாரிகள் மகிந்தவினால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது இட மாற்றம் செய்யப்பட்டார்கள். அத்தோடு, இச்செய்தி தமிழ் இணைய தளங்களில் வெளியாகி சிங்கள அரசின் சதி வேலைகளை அம்பலப் படுத்தி இருந்தது. இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்குவதும், புலிகள் என்ற அமைப்பு இருந்ததற்கான தடயமே இல்லாது ஒலிக்கும் வேளையில் இலங்கை அரசு மும்முரமாக  ஈடுபட்டு உள்ளது.

போராளிகளைக் காப்போம்

அதே போன்று சதி வேலைகள் மீண்டும் நடைபெற இருப்பதாக அரச எதிர்ப்பு  தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை மீதான மனித உரிமை மற்றும் போர்க் குற்றச் சாட்டுக்கள் சர்வதேச ரீதியில் வலுப்பெற்று வருகின்றன. போர்க்குற்ற சுருக்கு தன் கழுத்தை இருக்கும் முன் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டுள்ள அனைத்து போராளிகளையும் சித்ரவதை செய்து கொலை செய்து விடுவதே ஸ்ரீலங்கா அரசின் நோக்கமாகும். சர்வதேசத்தின் போர்க்குற்ற சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் ஒரு முகமாகவே ஒரு சில போராளிகளை விடுதலை செய்வது அவர்களை யாருக்கும் தெரியாமல் கொலை செய்வது, போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்க்கு நடப்பு அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான மீள் குடியேற்ற அமைச்சர் கருணா எனும் விநாயக மூர்த்தி முரளிதரன் துணைக்கு அழைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் செய்வதறியாது நிற்பதாகவும் செய்திகள் கசிகின்றன.      

சர்வதேச நியமனங்களை மதியாது ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று ஒரு இன அழிப்பையே நடாத்தி முடித்த கோட்டபயவிட்கு சிறைப்பட்டுள்ள போராளிகளை கொள்வது சிரமமாகாது. இலங்கையின் நீதி, காவல், சட்டம், நிர்வாகம் என்று அனைத்து துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் கோட்டபாய எந்த சட்டத்தையும், நியமனங்களையும் மதியாது ஒரு கொலை செய்தாலும் ஒரு லட்சம் கொலை செய்தாலும் தூக்கு ஒன்று தான் எனும் சிந்தனையின் கீழ் செயல்படும் ஒரு கொடூர மனம் படைத்த மானுட உலகின் கொடிய சிங்கள சர்வாதிகாரி. எது எப்படியாயினும், போர்க்குற்றவாளிகளை நீதிக்கூண்டில் நிறுத்துமுன் தடுத்து வைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகளையும், பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டுள்ள போராளிகளையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புக்கள் பொறுப்பெடுப்பதன் மூலமே அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். புலம் பெயர்ந்த நாம் தடுத்து வைக்கப் பட்டுள்ள முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அதற்கான போராட்டங்களை துரிதப்படுத்த விரைந்து செயல்படுவோம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

-ருத்ரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக