சனி, 22 மே, 2010

நாடு கடந்த தமிழீழ அரசு: நன்மை நடந்தால் கோடி புண்ணியம்

பல இடையூறுகளுக்கிடையில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்த மாதம் 17-ஆம் திகதி பிற்பகல் 1: 20 ஆரம்பித்த அமர்வு 19-ஆம் திகதி பிற்பகல் 1 மணிவரை தொடந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் எட்டப்படுமேயானால் தமிழர் சிந்திய குருதிக்கும் அவர்களின் சொல்லனாத் துயர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் கருத முடியும்
. முதல்நாள் அமர்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பலர் கலந்துகொண்டாலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்சன் நிர்வாகக் காலப்பகுதியில் அமெரிக்காவின் சட்டமா அதிபராக 1967 முதல் 1969 வரை பதவி வகித்த ராம்சி கிளார்க் (Ramsey Clark) மற்றும் அடுத்து மலர இருக்கும் சுதந்திர நாடாக கருதப்படும் தென்சூடானிய மக்களின் அரசியல் தலைமையான சூடானிய மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) அமெரிக்கப் பிரதிநிதி டொமாஸ் வோல் ரூஸ் ஆகியோர் கலந்து கொண்டது ஈழத் தமிழரின் ஜனநாயக வழிப் போராட்டத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ராம்சி கிளார்க் தனது உரையில் கூறியதாவது: “உங்கள் சுதந்திரம் சாத்தியமானது. உங்கள் வரலாற்றினை மறக்காதீர்கள். உங்கள் பாதைகளை மறக்காதீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும், நீங்கள் உங்கள் நியாயப்பாட்டினை நன்றாக எடுத்துக்கூறவேண்டும். உங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆகவே நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்குள்ளேயே இருக்கும் வேறுபாடுகளை களைந்து கொள்ளுங்கள். அமெரிக்கர்கள் ஒன்றாய் இருந்ததனால் அமெரிக்கா வென்றது. அதுபோலவே நீங்களும் இருக்கவேண்டும். பிரித்தாளும் சூட்சியினால் உங்கள் வெற்றி பறிக்கப்படும் ஆகவே ஒற்றுமையுடன் செயற்படுங்கள்." டொமாஸ் வோல் ரூஸ் தனதுரையில் கூறுகையில், “எப்போதுமே போராட்டத்தின் விளைவு ஓர் இரவில் வந்து விடுவதில்லை. அதற்குக் காலங்கள் வரையறுக்க முடியாது. அதனை உள்வாங்கி தமிழர்களும் ஒற்றுமையுடன் போராடவேண்டும். சூடானிய விடுதலை இராணுவம் பெரும் படையணிகளை வைத்திருந்தும் இராணுவ ரீதியாக இன்னமும் வெல்ல முடியவில்லை ஆகவே ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமும் நீண்டகால செயற்பாடுகளும் அவசியம்” எனக் கூறினார். இதனடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் தற்பொழுது உணரப்பட்டுள்ளது. கே.பத்மநாதன் என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த நாடு கடந்த அரசை உருவாக்க அமெரிக்க வதிவுடமையை பெற்ற முன்னாள் யாழ் மேயரின் புத்திரரான ருத்ரகுமாரனை பொறுப்பாளராக நியமித்தார். பின்னர் பத்மநாதன் சிறிலங்காவின் வலையில் சிக்குண்டு பின்னர் சிறிலங்காவிற்கு நாடுகடத்தபட்டு இன்று மகிந்த மற்றும் அவரின் சகோதரர்களின் விசுவாசியாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். இவரின் செயல்பாடினால் விரக்தியுற்ற புலம்பெயர் தமிழர் அவரினால் அத்திவாரம் போடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசை எதிர்த்தார்கள். இருப்பினும் எள்ளளவேனும் தளராது இந்த நாடு கடந்த அரசு செய்கையில் குறியாக இருந்து முதலாவது அமர்வையும் நடத்திவிட்டது என்பது ஒரு ஆறுதலான சம்பவமாக இருந்தாலும் அடுத்த வரப்போகும் காலம் மிகவும் கடினமான மற்றும் சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும். தடம் புரளாமல் இருந்தால் வெற்றி நிச்சயம் நாடு கடந்த அரசு தடம் புரளாமல் எந்த உலக ஆதிக்க சக்திகளினதும் கைப்பொம்மையாக செயல்படாமல் இருந்தால் வெற்றி நிச்சயம். என்று விடுதலைப் புலிகள் உலக நாடுகளுடன் உறவை வெளிப்படையாக பேணத் தொடங்கினார்களோ அதுவே அவர்களின் இராணுவ சமநிலையின் தோல்விக்குக் காரணம். அதை உணர்ந்து நாடு கடந்த அரசின் செயல்பாட்டாளர்கள் செயலாற்றினால் தமிழருக்கான ஒரு வரலாற்றை உலகத்தில் பதியலாம். இதன் மூலம் ஈழத் தமிழரின் விடுதலையின் தார்ப்பரியத்தை உலகநாடுகளின் முன்னால் வைக்கலாம். இந்த அரசாங்கத்திற்கு குறைந்தது 135 அங்கத்தவரை உள்வாங்குவது என்பதுதான் முடிவு. அதில் மக்கள் பிரதிநிதிகளாக நேரடித் தேர்தல்கள் மூலம் 115 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. மிகுதியானவர்களை நாடு கடந்த அரசினால் நியமிப்பதென்று முடிவெடுக்கப்பட்டு நடைமுறையில் கொண்டுவரப்பட்டது. 115 பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த முதலாவது அமர்வில் 87 பிரதிநிதிகளே வெற்றி பெற்ற பிரதிநிதிகளாக அறிவிக்கப்பட்டார்கள். கனடா (25), அமெரிக்கா (10), பிரித்தானியா (17), சுவிட்சர்லாந்து (10), பிரான்ஸ் (7), ஜேர்மனி (3), நோர்வே (3), டென்மார்க் (3), சுவீடன் (1), அவுஸ்திரேலியா (6), நியுசிலாந்து (2) ஆகிய நாடுகளில் இருந்து 87 பிரதிநிதிகள் இதுவரை தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இத்தாலி (3), Benelux [நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸ்சம்பேர்க் (3)], பின்லாந்து (1), அயர்லாந்து (1) ஆகிய நாடுகளில் இருந்து தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படவேண்டிய 8 பிரதிநிதிகளின் தெரிவு சில நடைமுறைப் பிரச்சினைகளால் அடுத்த கட்டத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது. பிரித்தானியா (3), பிரான்ஸ் (3) ஆகிய நாடுகளில் இடம் பெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த நடவடிக்கைகளால் மேலும் 6 பிரதிநிதிகளின் தெரிவும் தாமதமாகின்றது. ஜேர்மனியின் இரு தேர்தல் தொகுதிகளில் தேர்தல்களை பொது நிறுவனம் ஒன்று பொறுப்பெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையால் அங்கு இன்னும் தெரிவு செய்யப்படவேண்டிய 7 பிரதிநிதிகளுக்குரிய தேர்தல்கள் யூன் மாதம் 20ம், 27ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. அவுஸ்திரேலியாவில் இருந்தும் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து 4 பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளனர். இவற்றை விட, தென்னாபிரிக்காவில் நேரடித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதற்கு மதியுரைக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட 3 பிரதிநிதிகளின் தெரிவு நேரடித் தேர்தல் தவிர்ந்த வேறுமுறையில் மேற்கொள்ளப்படுவதே நடைமுறையில் பொருத்தமானது என்ற தமது கருத்தினை தென்னாபிரிக்கா செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளதனால் இன்னும் மொத்தம் 28 பிரதிநிதிகள் தேர்வாக வேண்டியுள்ளது. இப்படியாக சில நடைமுறைப் பிரச்சனைகளை சந்திக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு வரும் காலங்களில் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். பல நாடுகளில் வதியும் தமிழர்களினால் தேர்ந்தெடுக்கப்படுவதனாலும் மற்றும் சிலர் அவர்களின் தகுதியினால் நியமிக்கப்படுவதனாலும் பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்தாலும் இந்த அமைப்பினர் தடம் புரளாமல் அவர்களின் கொள்கை என்னவோ அதனடிப்படையில் பயணிப்பார்களேயானால் பாதை ஒருபொழுதும் மாறாது. நாடு கடந்த அரசின் செயல்பாடுகள் தான் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களிடத்தினரிடமும் மற்றும் உலக நாடுகளின் செல்வாக்கைப் பெற வழிவகுக்கும் என்பதை இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களும் முடிவுகளை எடுக்கும் தலைவர்களும் உணர்ந்து செயலாற்றினால் கடலேறிய கப்பல் பாதுகாப்பாக கரையை வந்து சேரும். அல்லது திசைமாறிய கப்பலாக அலையினால் மூழ்கடிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து செயலாற்றினால் தமிழரின் விடிவு தொலைவிலில்லை. அரசியல்வாதிகளினால் அளிக்கப்படும் வாக்குறுதிகள் காப்பற்றப்படுமா? பொதுவாகவே அரசியல்வாதிகளினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறியவுடன் காற்றுடன் கலைந்துவிடும். ஆனால் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகளினால் அளிக்கப்படும் வாக்குறுதிகள் காப்பற்றப்படுமா என்பது தான் இன்று எழும் கேள்வி. முதலாவது அமர்வில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையானது தனது முதலமர்வினை அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைத்து, இவ் அரசாங்கத்துக்கான அரசியலமைப்பு (Constitution) உருவாக்கும் அரசியலமைப்புக்குழுவினை அமைத்துக் கொள்ளும், அரசியலமைப்பினை உருவாக்கி முடியும் வரையிலான காலப்பகுதியில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒரு இடைக்கால நிறைவேற்றுக்குழுவினையும் அமைத்துக் கொள்ளும். மேலும் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர, குறுங்கால திட்டங்களினை முன்னெடுப்பதற்காக பொருத்தமான அமைச்சுக் கட்டமைப்புக்களினையோ, சட்டவாக்க குழுக்களினையோ உருவாக்குவதனை இடம்பெயர்ந்த மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்காக ஒரு செயற்பாட்டணி அமைக்கப்படுதல் பற்றியும் முதலாவது அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்படியாக வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள் இந்த அரசியல்வாதிகள். இந்த விவகாரங்களுக்கு எப்படியான தீர்வை இவர்களால் பெற்றுத்தரமுடியும் என்பதே இப்பொழுது எழும் கேள்வி. சிறிலங்காவின் இராஜதந்திர செயல்பாடுகளுக்கிடையில் இவர்களது அடுத்தகட்ட நகர்வுகள் எப்படியானதொரு தீர்வைத் தரும் என்பது இன்னொரு புறம் எழும் கேள்வி. கேள்விகளுக்கு பதில்கள் அடுத்த சில வாரங்களில் கிடைக்கப்போவதில்லை. ஆனால் இவர்களின் அடுத்த அமர்வில் நிச்சயம் பதில் சொல்லவேண்டும் காரணம் புலம்பெயர் ஈழத் தமிழர் பலர் இந்த அரசின் செயல்பாடுகளை சமீப காலமாக கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள். ஆகவே இந்த அரசின் வெற்றி தோல்வி இவர்களின் அடுத்த கட்ட செயல்பாட்டின் ஊடாகத்தான் தீர்மானிக்கப்படும். இன்னுமொரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்கள் இந்த பாராளுமன்ற அங்கத்தவர்கள். அதாவது ருத்தரகுமாரனை நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்துள்ளார்கள். தமிழீழ மக்களின் விடுதலையை வென்றெடுக்க இந்த நாடுகடந்த அரசு போன்ற செயற்பாடுகள் மூலமாக ஜனநாயக ரீதியாக புலம்பெயர் தமிழர் செய்யலாம். ஆனால் எழும் கேள்வி என்னவென்றால் சராசரி அரசியல்வாதிகள் போன்று இந்த நாடுகடந்த அரசியல்வாதிகளும் தமது வாக்குறுதிகளை காற்றோடு காற்றுடன் விட்டுவிடுவார்களா அல்லது தமிழீழ விடுதலை எட்டும்வரை ஜனநாயக ரீதியாக போராடுவார்களா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். எது எப்படியாயினும் நாடு கடந்த அரசினால் ஒரு விமோசனம் ஈழத் தமிழரின் விடுதலைக்கு கிடைத்தால் கோடி புண்ணியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக