வெள்ளி, 18 ஜூன், 2010

விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம்!: வி.ருத்ரகுமாரன்

கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டு அணுகுமுறையினையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையினையும் மக்களுக்கு அறியத் தருதல் அவசியமானது எனக் கருதுகிறோம்.



எமது முதலமர்வு நிகழ்வுகள் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்படட பிலடெல்பியா நகரின் சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற்றமை நமது சுதந்திரவேட்கையினை குறியீட்டு முக்கியத்துவத்துடன் அனைத்துலகுக்கும் வெளிப்படுத்தியிருந்தது.


தாயகத்தில் நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விட்டதாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தி, அதற்கான ஓராண்டுக் கொண்டாட்டங்களை மேற்கொள்வதில் முனைப்புக் காட்டியிருந்த அதே காலப்பகுதியில் நாம் நமது சுதந்திரவேட்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வடிவில் உலகுக்கு அறியத்தந்திருந்தோம்.


எமது முதலமர்வு நிகழ்வுகளை நாடு கடந்த நிலையில் லண்டனிலும், ஜெனிவாவிலும் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் பங்கு கொள்ளக்கூடிய வகையில் ஒழுங்கமைத்திருந்தமை நாடு கடந்த நிலையில் இயங்கும் நமது முயற்சிக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்திருந்தது.


முதலமர்வு நிகழ்வுகள் நடைபெற்றபோது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான இடைக்கால நிர்வாகக்குழுவொன்றினையும் உடனடி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சில செயற்பாட்டுக்குழுக்களையும் அமைத்திருந்தோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்கி முடியும் வரையிலான காலத்துக்கென இடைக்கால நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடைமுறைகளுக்காக இவ் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.


முதலமர்வு நிகழ்வுகள் நிறைவடைந்ததும் எமக்கு மக்களிடம் இருந்து பல்வேறு வகையான கருத்துக்களும் ஆலோசனைகளும் கிடைக்கப் பெற்றிருந்தன. மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையினையும், எதிர்பார்ப்புக்களையும் இக் கருத்துக்கள் வெளிப்படுத்தின. மக்களது கருத்துக்களை நாம் மிகுந்த மதிப்புடன் கவனத்துக்கெடுத்துள்ளோம் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.


நாம் செல்ல வேண்டிய பயணம் நீண்டதும் சகிப்புத்தன்மையுடனும் உறுதியுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றுமாகும். உலக ஒழுங்கினை வழிநடத்தும் வல்லரசுகள் தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழீழத் தனி அரசமைவதற்கு மாறான கருத்தையே தற்போது கொண்டுள்ளன. இவ் அரசுகளின் உலக உறவுகளெல்லாம் நலன்கள் என்ற அச்சாணியிலேயே சுற்றுகின்றன. தமது நலன்களை இலங்கையினை ஒற்றை நாடாகப் பேணிய வண்ணமே அடைந்து கொள்ள இவ் அரசுகள் முனைகின்றன. இத்தகைய ஒரு சூழலில், தமிழீழத் தனியரசுக்கான ஆதரவுத் தளத்தை இவ் அரசுகளிடம் நாம் உடனடியாக எதிர்பார்க்க முடியாது.


இவ் யதார்த்தத்தினைக் கவனத்திற் கொண்டே நாம் எமது செயற்திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. அரசுகள் நலன்களின் அடிப்படையில் இயங்கினாலும் உலகின் மக்கள் சமூகம் (civil socity) ஜனநாயக விழுமியங்களுக்கும் அறவழி நிலைப்பாட்டுக்கும் மிகுந்த மரியாதை வழங்கும் தன்மை கொண்டது. தமிழீழ மக்களுக்கு எதிரான சிங்கள இனவெறி பிடித்த அரசு புரிந்த இனப்படுகொலையினையும்,


கொடூரங்களையும் நாம் மக்கள் மயப்படுத்தி, குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கும், நாம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் மக்கள் என்ற அடிப்படையிலும் அனைத்துலகச் சட்டங்களுக்கமைவாக தனியரசினை அமைத்துக் கொள்வதற்கு நாம் கொண்டுள்ள உரிமையினை வென்றெடுப்பதற்கான ஆதரவினையும் இப் பன்னாட்டு மக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டியெழுப்புவது முக்கியமானதெனவும் சாத்தியமானதெனவும் நாம் உணர்கிறோம்.


மக்கள் சமூகத்தின் மத்தியில் நாம் நமக்கான ஆதரவினை வென்றெடுத்து முன்னேறி வருகையில் அரசுகள் மீது, அரசுகள் வகுக்கும் கொள்கைகளின் மீது நமக்குச் சார்பான ஒரு மாற்றத்தைக் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இதேவேளை மாறிவரும் உலக ஒழுங்கில் உலகின் முக்கியமான அரசுகளின் நலன்களையும் எமது நலன்களையும் ஒரேகோட்டில் சந்திக்க வைக்கக்கூடிய நிலைமைகள் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதனையும் நாம் கவனத்திற் கொள்கிறோம்.


இத்தகைய ஒரு சூழலில் நமக்குச் சார்பான அரசியல் மாற்றத்தை உலகில் உடனடியாக ஏற்படுத்தி விடலாம் என நாம் எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதும் எமக்குக் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாய்ப்புக்களையும் நழுவிப்போக விடாமற் பயன்படுத்தி எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். அதற்கமைய செயற்பாட்டு உத்திகளையும் நாம் திட்டமிட்டு வருகிறோம்.


இதற்கேற்ற வகையில் அரசுகளுடன் உறவுகளை வளர்க்கும் நோக்கினை ஒருபுறமும் மக்கள் சமூகத்தின் மத்தியில் ஆதரவினை வளர்க்கும் நோக்கினை மறுபுறமாகவும் கொண்டு நாம் எமது செயற்பாடுகளை வடிவமைத்து வருகிறோம். இவ் அடிப்படையில் நாம் அமைத்துள்ள குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் (convenor) நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் குழுக்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளயும், தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய வேலைகள் தொடர்பான திட்டங்களையும் ஆராய்ந்து இக் குழுக்களுக்கென நியமிக்கப்படும் நிபுணர் குழுவின் ஆலோசனையுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்புக்களை உருவாக்கும்போது இக் குழுக்கள் இக் கட்டமைப்புக்களோடு ஒருங்கிணைக்கப்படும்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட குழுக்கள் மற்றும் அவற்றின் ஒருங்குகூட்டுனர் விபரங்கள் பின்வருமாறு:


1. அரசியல் அரசியல் அமைப்பு விவகாரக்குழு


திரு.பொன். பாலராஜன்


அரசியல் அமைப்பு உபகுழு


திரு. முரளி சிவானந்தன்


2. கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு


திரு. செல்வராஜா செல்லத்துரை


3. பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு


பேராசிரியர். செல்வா செல்வநாதன்


4. அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழு


புலமையாளர் உபகுழு


கலாநிதி ஜெராட் பிரான்சிஸ்


ஆதரவுதிரட்டல் உபகுழு


திரு.தணிகாசலம் தயாபரன்


ஊடகங்கள் உபகுழு


திரு. ஈசன் குலசேகரம்


5. இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விசாரிப்பதற்கான குழு


திரு. டிலக்ஷன் மொறிஸ்


6. பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு


திருமதி. பாலாம்பிகை முருகதாஸ்


7. வர்த்தக மேம்பாட்டுக் குழு


திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன்


8. மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு


திரு. உருத்திராபதி சேகர்


9. போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு


திருமதி. ஜெயமதி சிவசோதி


10. இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு


திரு. தவேந்திர ராஜா


11.இடம்பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு


திரு. முத்துக்குமாரசாமி இரத்னா


இக் குழுக்களுக்கென அமைக்கப்பட்டுவரும் நிபுணர் குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களை நீங்கள் எந்தச் செயற்பாட்டுக்குழுவின் நிபுணர் குழுவில் இணைந்து கொள்ள விரும்பகிறீர்கள் என்பதனையும் உங்களது நிபுணத்துவப் பின்னணிகளையும் எமது மின்னஞ்சல் முகவரி secretariat@tgte.org மூலம் அனுப்பி வைக்குமாறும் தங்களை வேண்டிக் கொள்கிறோம்.


மேலும், தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் யுத்தக் குற்றங்கள் குறித்து அனைத்துலக மட்டத்திலான ஒரு விசாரணை தேவை எனும் கருத்தை வலியுறுத்தி அனைத்துலக மட்டத்திலான செயற்பாடுகளை நாம் ஆரம்பிக்கிறோம். இதன் முதலங்கமாக உலகின் அரச தலைவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலான வேண்டுகோளினை கடிதம் வாயிலாக நாம் இவ்வாரம் விடுக்கவுள்ளோம். இதன் தொடர்ச்சியாக இவ் விடயம் தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் மக்கள் சமூகத்தின் மத்தியிலும் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்கவுமுள்ளோம்.


இவ் விடயத்தில் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடன் ஒருங்கிணைந்த வகையிலேயே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.


பன்னாட்டு மக்கள் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்கும் முயற்சியின் ஓரங்கமாக அயர்லாந்துத் தலைநகர் பெல்பாஸ்ட் நகரில் European Association of Lawyers for Democracy and World Human Rights, Transitional Justice Institute¸ University of Ulster ஆகிய அமைப்புக்களின் ஆதரவில் இம் மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான ஒரு மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இரு பிரதிநிதிகள் கலந்து கொண்டு எமது போராட்டத்தின் நியாயத்தன்மையினையும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகைளயும் அநீதிகளையும் வெளிப்படுத்தினர்.


இலங்கை அரசின் கொடுங்கரங்களில் இருந்து தப்பி ஏதிலிகளாக நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கான ஆதரவுச் செயற்பாடுகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர். மலேசியாவில் இவ் விடயம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளுடனும் செயல்வீரர்களுடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். அரசியல் தஞ்சம் கோரியுள்ள மக்களை ஏற்றுக் கொள்வது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை மூன்று நாடுகளின் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளது.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால நிறைவேற்றுக்குழு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பினை மேற்கொண்டு வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுக்குழுக்கள் மேற்கொண்டு செயற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ள விடயங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினைத் தயாரித்து முடித்து, அதனை விவாதித்து ஏற்றுக் கொள்வதற்கும், அரசாங்கத்தின் நிரந்தரக் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பினை செப்டெம்பர் மாத இறுதிக்குள் கூட்ட முடியும் எனவும், இக் காலப்பகுதிக்குள் தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்பட வேண்டியுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுவிடுவார்கள் எனவும் நம்புகிறோம்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டு வெற்றி நாம் அனைவரும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் இயங்குவதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. நம் முன்னால் உள்ள வரலாற்றுப்பணியை முன்னெடுக்கவென நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எமது கரங்களை இறுகப் பற்றிக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக