வெள்ளி, 18 ஜூன், 2010

சீனாதான் முன்னணியில்....

விடுதலைப் புலிகள் என்ற தரப்பு களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையில் சிறிலங்கா பலம்பொருந்திய நாடாக வேகமாக வளர்ச்சிகண்டு வருகிறது.


அதேநேரம்..........
இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் தனது அயல் நாடாகிய சிறிலங்காவுடனான உறவில் தனது நிலையினைத் தக்கவைப்பதற்கு இந்தியா தொடர்ந்தும் போராடி வருகிறது.கடந்த வாரம் சிறிலங்காவினது குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடில்லிக்கு மேற்கொண்டிருந்த உத்திபோகபூர்வ சுற்றுப்பயணம் வெற்றிகரமானதொன்று என்றே பலரும் கருதுகிறார்கள்.


ஆனால் இந்த சுற்றுப்பயணம் தொடர்பான விடயங்களை ஆழமாக ஆராய்ந்தால் உண்மை அவ்வாறில்லை என்பது புலப்படும்.


பெரும் உட்கட்டுமானத் திட்டங்களுக்கான கடன் உதவிகள், மின்சாரத்தினைப் பகிர்ந்துகொள்ளும் முனைப்பு மற்றும் இரண்டு நாடுகளுக்குமிடையிலான கலாச்சார ரீதியிலான உறவினை மேம்படுத்துதல் போன்ற பரந்துபட்ட உடன்பாடுகள் ராஜபக்சவின் புதுடில்லி பயணத்தின் போது கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.


திருகோணமலையில் 500 மெகாவாற் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையத்தினைக் கூட்டாக அமைக்கும் திட்டத்திற்காக இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய NTPC மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.


பாதுகாப்புத் தொடர்பான வருடாந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் இந்த இரண்டு நாடுகளும் உடன்பட்டிருக்கின்றன.


குற்றவியல் நடவடிக்கைகளில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்பாடு மற்றும் இரண்டு நாடுகளிலும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக்கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தினை தத்தமது நாட்டிலேயே கழிக்கும் உடன்பாடு என்பனவும் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. .


சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இருக்கும் தலைமன்னாருக்கும் மடுப்பகுதிக்கும் இடையிலான தொடருந்துப் பாதையினை அமைப்பதற்கும் இந்தியா உடன்பட்டிருக்கிறது.


எது எவ்வாறிருப்பினும், ராஜபக்ச அரசாங்கமானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்த முறைமை தொடர்பில் குறிப்பாகத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் இன்னமும் கோபத்துடனேயே இருக்கின்றன.


கடந்த வாரம் தமிழ்நாட்டில் தொடருந்துத் தடம் ஒன்று விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது. ராஜபக்சவின் இந்திய பயணத்தினை எதிர்த்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


தமிழ்நாட்டினைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று போரின் விளைவாக இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் காலதாமதம் தொடர்பாக அதிபர் ராஜபக்சவுடன் உரையாடியிருந்தது.


இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் விடயத்தில் காலதாமதம் ஏற்பட்டதை ஏற்றுக்கொண்ட அதிபர் ராஜபக்ச எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் இடம்பெயர்ந்து வசிக்கும் அனைவருமே மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என உறுதியளித்தார்.


கடந்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர் விவகாரம் பெரியளவிலான தாக்கங்கள் எதனையும் ஏற்படுத்தாத போதும், அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலினைக் கருத்திற் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் விவகாரத்தினைக் கையாளலாம்.


இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தொடர்ந்தும் வசித்துவரும் மக்களை உடனடியாக மீள்குடியேற்றவேண்டிய தேவையினை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.


அத்துடன் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறிலங்காவினது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் விரைவான புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


அரசியலமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் அடிப்படையில், இலங்கைத் தீவில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வுக்கு இட்டுச்செல்லும் வகையிலமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுக்கான தேவையினையும் பிரதமர் மன்மோகன் சிங் கோடிட்டுக் காட்டினார். ஆனால் குறித்த இந்த விடயம் தொடர்பாக அதிபர் ராஜபக்ச எந்தவிதமாக கருத்தினையும் தெரிவிக்காது தவிர்த்திருக்கிறார்.


விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற மற்றும் குடியரசு அதிபர் தேர்தல்களில் அமோக வெற்றியினைத் தனதாக்கியிருக்கும் அதிபர் ராஜபக்ச அதிகாரத்தின் உச்சத்தில் தற்போது இருக்கிறார்.


இருப்பினும், சிறிலங்காவில் தொடரும் மோசமான மனித உரிமை நிலைகளின் காரணமாக மேற்கினது கடுமையான கண்டனத்திற்குச் சிறிலங்கா அரசாங்கம் உள்ளாகியிருக்கிறது.


இந்த நிலையில், அதிபர் ராஜபக்ச இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டமை புதுடில்லி சிறிலங்காவிற்குப் பக்கபலமாக இருக்கிறது என்ற செய்தியினைச் குறிப்புணர்த்துவதாகவே அமைகிறது.


ஆனால் இந்த குறியீட்டு ரீதியிலான காரணத்திற்கு அப்பால், இந்தியாவினது சுற்றுவட்டத்திலிருந்து சிறிலங்கா வேகமாக விலகிச் செல்கிறது என்பதே உண்மை.


போரின் இறுதி நாட்களில், மோதல்களின் மத்தியில் சிக்கித் தவித்த தமிழர்கள் சந்தித்த இடர்களைப் போக்கும் வகையிலான மனிதாபிமான ரீதியிலான உதவிக்கரத்தினை நீட்டுவதற்கு இந்தியா தவறிவிட்டது.


சிறிலங்காவினது வடக்குக் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மனிதபிமான நெருக்கடியினைத் தவிர்க்கும் வகையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு புதுடில்லி எடுத்த முயற்சிகள் பெரும் தோல்வியில் முடிந்தன.
சிங்கப்பூர் மற்றும் ஏடன் ஆகிய துறைமுகங்களுக்கு நடுவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் கொழும்பு அமைந்திருப்பதானது இந்தியா தனது ஆளுமை வெளிபாட்டினை [Power Projection] மேற்கொள்வதற்குச் சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும்.


தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் ஆரம்பத்தில் இந்தியாவினைப் பின்பற்றிச் செயற்பட்ட கொழும்பு 1957ம் ஆண்டு திருகோணமலை மற்றும் கட்டுநாயாக்கா பகுதிகளில் அமைந்திருந்த பிரித்தானியக் கடற்படை மற்றும் விமானப்படைத் தளங்கள் அகற்றப்படவேண்டும் எனக் கோரியிருந்தது.


ஆனால் பின்னான நாட்களில் இதிலிருந்து படிப்படியாக விடுபட்ட சிறிலங்கா தனக்கென சுதந்திரமானதொரு வெளியுறவுக் கொள்கையினை நோக்கிச் செயலாற்றத் தொடங்கியது.


சிறிலங்காவினை இவ்வாறு மாற்றியது சீனாதான் என இந்தியா கருதுகிறது. எவ்வாறிருப்பினும் 1962ம் ஆண்டு இடம்பெற்ற இந்தியாவுடனான போரில் சீனா வெற்றிகொண்டதைத் தொடர்ந்து கொழும்பு பீஜிங்கிற்கான தனது ஆதரவினை அதிகரித்தது எனலாம்.


இன்றைய நிலையில் சிறிலங்காவிற்கு அதிக உதவித்தொகையினை வழங்கும் நாடாக இருந்த யப்பானைச் சீனா இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டது. வருடமொன்றுக்கு 1 பில்லியன் அமெரிக்கா டொலர் பணத்தினை பிஜீங் கொழும்புக்குக் கொடையாக வழங்குகிறது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகியுளது. இது சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்குதாரராகச் சீனா மாறுவதற்கு வழிசெய்திருக்கிறது. இன்று சிறிலங்காவிற்குக் கிடைக்கும் அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கடன்களில் அரைப்பகுதிக்கும் அதிகமானதைச் சீனாவே வழங்குகிறது.


சிறிலங்காவில் உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளுக்கான சீன முதலீடுகள் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. சிறிலங்காவினது உட்கட்டுமான மேம்பாட்டுக்காக வட்டியற்ற கடன்களைச் சீனா கொழும்புக்கு வழங்கி வருகிறது.


சிறிலங்காவில் தனக்கெனத் தனியான பொருளாதார வலயத்தினைக் கொண்டிருக்கும் முதலாவது வெளிநாடு சீனாதான். மின் உற்பத்தி நிலைய நிர்மாணம், தொடருந்துப் போக்குவரவினை நவீனப்படுத்துதல், தொலைத்தொடர்புச் செய்மதிகளை அனுப்புவதற்கான நிதிசார் மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட சிறிலங்காவின் பரந்துபட்ட உட்கட்டுமான அவிருத்தித் திட்டங்களில் சீனா ஈடுபட்டிருக்கிறது.


அடுத்துவரும் பத்தாண்டுகளில் முழுமையாகப் பூரணப்படுத்தப்படவுள்ள அம்பாந்தோட்டை அபிவிருத்தி வலையத்தினை ஏற்படுத்தும் திட்டத்திற்கான நிதியில் 85 சதவீதமானவற்றை சீனாவே வழங்குகிறது. அளவில் பெரிய சரக்குக் கப்பல்களும் வந்துசெல்லும் வகையிலான துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு மையம், அனைத்துலக விமான நிலையம் மற்றும் இதர வசதிவாய்ப்புக்களை இது உள்ளடக்குகிறது.


கொழும்பு துறைமுகத்தினை விட ஆழமானதாகவும் விசாலமானதாகவும் அமைக்கப்பட்டு வரும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனக் கடற்படைக் கலங்களின் எரிபொருள் மீள்நிரப்பும் இடமாகவும் தேவையேற்பட்டால் அந்தக் கலங்கள் தரித்திருக்கும் தளமாகவும் செயற்படும் எனத் தெரிகிறது.


குறித்த இந்தத் துறைமுக நிர்மாணம் வெறுமனே வர்த்தக நலன்சார்ந்ததே என இரண்டு தரப்பும் வாதிடுகின்ற போதும், இது எதிர்காலத்தில் சீனாவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கடற்படைத் தளமாகலாம் என்ற அதியுச்ச கவலை இந்தியாவிற்கு உள்ளது.


சீனாவினைப் பொறுத்தவரையில், பொதுவான சரக்கு மற்றும் எண்ணெய்தாங்கிக் கலங்கள் தரித்துச் செல்லும் முதன்மையான இடைத்தங்கல் இடமாக மாத்திரம் அம்பாந்தோட்டை அமையாது.


மாறாக, இந்தியாவிற்கு எதிரான புலனாய்வுத் தகல்களைத் திரட்டுவதற்கும் கண்காணிப்புப் பணியினை விரிவுபடுத்துவதற்குமான கேத்திர முக்கியத்தும் வாய்ந்த தளமாக இது அமையும்.


சிறிலங்காவில் சீனாவினது ஈடுபாடு என்றுமில்லாதவாறு அதிகரித்திருப்பது தொடர்பில் இந்தியா பலமுறை தனது கவலையினை வெளியிட்டிருக்கிறது.


2007ம் ஆண்டு, இந்தியாவினது வான் பரப்பினையும் கண்காணிக்கும் வகையிலான திறன் பொருந்திய சீனத் தயாரிப்பு கதிரியினைக் [radar system] கொள்வனவு செய்வதற்கான சிறிலங்காவினது முயற்சி தொடர்பாக இந்தியாவின் அப்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியிருந்தார்.


ஈழப் போருக்கு எதிரான இராணுவ வெற்றி மற்றும் இலங்கைத் தீவில் இறுதிய இடம்பெற்ற தேசிய ரீதியிலான இரண்டு தேர்தல்கள் ஆகியவற்றில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் உறுதியானதொரு நிலையில் தற்போது உள்ளது.


இவ்வாறாகச் சீனச் செல்வாக்குச் சிறிலங்காவில் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு முனைப்பாகத் தனது இராசதந்திரப் போரை விரைவுபடுத்திய இந்தியா கொழும்புக்கான பல மீள்கட்டுமான உதவிகளையும் வழங்க முன்வந்தது.


விடுதலைப் புலிகள் என்ற தரப்பு களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையில், சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவினை மேம்படுத்துவதற்குத் தேவையான முக்கியத்துவமான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவே புதுடில்லி கருதுகிறது.


எவ்வாறிருப்பினும், சிறிலங்கா தொடர்பில் உள்நாட்டு மக்களின் கவலைகள் மற்றும் மூலோபாய நலன்கள் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் சம அளவிலான முக்கியத்துவத்தினைக் கொடுத்துச் செயற்படவேண்டிய தேவை புதுடில்லிக்கு உள்ளது.


ஆனால் இதுபோன்ற எந்தத் தடைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாத பீஜிங், மூலோபாய நலன்களை மாத்திரம் கருத்திற்கொண்டு, கொழும்புடனான தனது இருதரப்பு உறவினை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகிறது.


இதன் விளைவாக, சீனாவை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த சிறிலங்காவினது பங்குதாரர் தான்தான் என்பதை நிரூபிப்பதற்குப் புதுடில்லி கடுமையாகப் போராடிவருகிறது.


கொழும்பில் இடம்பெறும் விடயமெனில் அது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் விடயமாகி விட்டது. இந்தச் சிறிய நாடு இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் 'முதன்மையானதொரு ஆட்டத்தினை' ஆடவுள்ளது.


அமைவிடத்தின் அடிப்படையில் இந்து சமுத்திரப் பிரந்தியத்தில் நடவடிக்கைசார் நல்வாய்ப்புகள் இந்தியாவிற்கே அதிகம் இருக்கிறது.


ஆனால், தனது அமைவிட நல்வாய்ப்பின் பலன்களைப் பற்றிப் பிடிப்பதற்கானதொரு நிலையில் புதுடில்லி இருக்கிறது எனக் கூறிவிடமுடியாது.


உலகின் முதன்மையானதொரு பகுதியில் தனது இருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் சீனா சிறிலங்காவுடனான தனது உறவினை இறுக்கி வருகிறது.


வினைத்திறனுடன் செயற்படத் தவறுமிடத்து இந்தப் போட்டியில் தாம் தோற்றுவிடுவோம் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் நன்கு விளக்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக