வெள்ளி, 18 ஜூன், 2010

ஸ்ரீலங்காவின் தந்திரமும் தமிழர்களின் இயலாமையும் ...

ஈழத்தமிழர் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ‘கே.பி.’ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.


அவரைப் பற்றி ஏற்கெனவே பல கதைகள் புழக்கத்தில் உண்டு. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நவீன ரக ஆயுதங்களை சர்வதேச மட்டங்களில் ரகசியமாகக் கொள்முதல் செய்து, காதும் காதும் வைத்தாற்போல கடத்தி, ஆழக்கடல் ஊடாக வன்னிக் காட்டுக்குள் கொண்டுவந்து சேர்ப்பதில் அவர் பலே கில்லாடி என்பது உலகறிந்த ரகசியம்.



பல்வேறு பெயர்களில் பத்துப் பதினைந்து நாடுகளின் பாஸ்போர்ட்டுகளுடன் இன்டர்போலின்(சர்வதேச போலீஸின்) கண்களுக்கு மண்ணைத் தூவியபடி உலகம் சுற்றிய பெரும்புள்ளி. சர்வதேச மட்டத்தில் கள்ள மார்க்கெட்டில் கே.பி. வாங்கிக் குவித்து, சுவீகரித்து, வன்னிக் காட்டுக்குக் கப்பல் கப்பலாக கனகச்சிதமாக அனுப்பி வைத்த ஆயுதங்கள் அளவிட இயலாதவை. ஓரிரு பிஸ்டல்களுடனும் துருப்பிடித்த துப்பாக்கிகளுடனும் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை பெரும் மரபு வழி ராணுவமாக விஸ்வரூபம் எடுக்க வைத்தது கே.பி.தான் என்பது அவர்பற்றிய மலைக்க வைக்கும் உண்மை.


2000-த்தின் முற்பகுதியில் இலங்கை அரசு மற்றும் புலிகள் இடையே அரங்கேறிய சமரசப் பேச்சு மற்றும் சமாதான உடன்படிக்கையை அடுத்து, கள நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது புலிகள் அமைப்பின் உயர்மட்டத் தலைமையில் இடம்பெற்ற குத்து – வெட்டு அரசியல் காரணமாக கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டார் கே.பி. என்பதும் தெரிந்த கதைதான்.


கே.பி.யை தள்ளி வைத்துவிட்டுப் புதிய தரப்புகளின் தலைமையில் நவீன ஆயுதங்களை சுவீகரிக்க புலிகளின் தலைமை எடுத்த முயற்சிகள் பலவும் பெரும் தோல்வியில் முடிந்து புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.


கள்ள மார்க்கெட்டில் ஆயுதங்களை விற்கும் பல நபர்களிடமிருந்து புலிகளின் ஆட்கள் ஒருபுறம் ஏமாற்றப்பட்டு பெரும் தொகையான பணத்தை இழக்க வேண்டியதாயிற்று. அதையும் தாண்டி.. விலைக்கு வாங்கப்பபட்ட ஆயுதங்களை இலங்கைக் கடல் எல்லையைக் கடந்து வன்னிக் காட்டுக்குள் கொண்டுவர முடியாமல், அவை கப்பல் கப்பல்களாக கடலுக்குள் இலங்கைக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டன. மிச்சமும் மீதியுமாக வன்னிக் காட்டுக்குள் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்ட ஆயுதங்களில் கணிசமானவை ஆயுத முகவர்களால் ஏமாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தரங்குறைந்த அல்லது ‘டம்மி’ ரக ஆயுதங்களாகவே இருந்தன.


ஆயுத சுவீகரிப்பில் இப்படிப் பெரும் பின்னடைவுகளைக் கண்டு, நிலைமையைப் பட்டுணர்ந்து தெளிந்து, புலிகளின் தலைமை மீண்டும் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற பாணியில் கே.பி.யின் காலில் விழு நேர்ந்தது. ஒதுக்கப்பட்டு, தாய்லாந்தில் அந்த நாட்டுப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து சிவனே என்று தன் பாட்டில் ஓய்வில் இருந்த கே.பி. மீண்டும் களமிறங்கினார்.


ஆனால்.. புலிகளின் கள நிலைமை அப்போது ‘தலைக்கு மேல் வெள்ளம் கடந்த’ கட்டத்தை அடைந்து விட்டிருந்தது.


இருந்தபோதும் தன் முயற்சியை நிறுத்தவில்லை கே.பி. அவசர அவசரமாக செயலில் இறங்கினார். இரண்டு கப்பல்கள் நிறைய ஆயுதங்களை வாங்கிக் குவித்தார். தமது வழமையான திறன்மூலம் இலங்கைக் கடற்படையின் கண்களுக்கு மண்ணைத்தூவி, வெற்றிகரமாக அவற்றை வன்னிக் காட்டுக்குள் சேர்ப்பிக்கச் செய்தார். இருந்தபோதும் அந்த ஆயுதங்கள் அழிவின் விளிம்பில் இருந்த புலிகள் அமைப்பை மீட்டுக் காப்பாற்ற போதுமானவையாக அமையவில்லை.


கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வன்னியில் புலிகள் அமைப்பின் சீரழிவுச் செய்தியோடு கே.பி.யின் பெயரும் சர்வதேச மட்டத்தில் மேலும் அம்பலத்துக்கு வந்தது.


புலிகளின் தலைமை அழிந்த பின்னணியில் அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவின் தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, மலேசிய நாட்டில் வெளிப்பட்டு பரபரப்பாக பேட்டியளித்த கே.பி. ஆயுத வன்முறையற்ற புதிய ரூபத்தில் புலிகளின் விடுதலைப் போரட்டத்தைத் தாம் முன்னெடுக்கப் போவதாகப் பிரகடனப்படுத்தினார். வன்னி யுத்த களத்தில் சீரழிந்த புலிகள் அமைப்புக்கு சர்வதேச மட்டத்தில் புதிய வடிவத்தை அளித்து அந்த இயக்கத்துக்குப் புத்துயிரூட்ட பம்பரம் போல சுழன்று கொண்டிருந்த கே.பி.யை தனது தந்திரம் மூலம் சத்தம் சந்தடியின்றிக் கொழும்புக்கு அலேக்காகத் தூக்கி வந்தது இலங்கை அரசின் பாதுகாப்புப் பிரிவு.


புலிகளுக்கு சர்வதேச மட்டத்தில் ஆயுதங்களை வாங்கிக் குவித்து சர்வதேச போலீஸுக்கு தண்ணி காட்டி வந்த கே.பி. இன்று இலங்கைக் காவல்துறையின் கைகளில்!


மலேசியாவிலிருந்த கே.பி.யைத் தனது ராஜதந்திரம் மூலம் இலங்கைத் தரப்பு பலவந்தமாகத் தூக்கி வந்ததா? அல்லது புலிகளின் தலைமை அழிந்த சூழ்நிலையை உணர்ந்து, இலங்கையின் பாதுகாப்புத் தரப்புடன் இணங்கிச் செயல்படுவதன் மூலமே ஈழத்தமிழர்களுக்கு ஏதும் செய்ய முடியும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, இலங்கை அரசுத் தலைமையுடன் உடன்பாடு கண்டு, இணங்கி தாமாகவே கே.பி. மலேசியாவிலிருந்து திடீரென இலங்கைப் பாதுகாப்புத் தரப்புடன் கொழும்புக்கு வந்தாரா? இந்த விஷயத்திலும் மர்மம் தொடர்ந்து நீடிக்கவே செய்கின்றது.


கே.பி.யைக் கொழும்புக்குக் கூட்டி வந்தமையைப் பகிரங்கப்படுத்திய இலங்கை அரசு, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார் என்று மட்டுமே அறிவித்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் எதிலும் முன்னிறுத்தாமல் அவரை சுமார் ஒன்றரை வருடங்கள் வரை தான் விரும்பிய தடுப்புக் காவலில் வைத்திருக்கும் சட்ட அதிகாரம் இலங்கை அரசுக்கு உண்டு.


ஆனால் கே.பி. தொடர்பாக இப்போது கசியும் செய்திகள்.. ‘அவர் தடுப்புக் காவலில் தற்சமயம் இல்லை, கட்டுக்காவலில் இருந்தபடி அரசியல் நடத்தும் முக்கியப் பிரமுகர்தான்’ என்ற விஷயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன.


லண்டன் உட்பட பல நாடுகளில் இருக்கும் புலிகளின் ஆதரவாளர்களுடன் அவர் இப்போதெல்லாம் அடிக்கடி சரளமாக தொலைபேசியில் உரையாடுகிறார்.


‘‘உங்களிடம் உள்ள நிதியை எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வாருங்கள். அவற்றைப் பாதுகாப்பாக தமிழர் பகுதியில் முதலீடு செய்யும் உறுதியை நான் பெற்றுத் தருகிறேன். போரினால் அழிந்த தமிழ் பிரதேசங்களின் புனரமைப்புப் பணிகளில் நீங்கள் அனைவரும் பங்குபெறலாம். அதற்கான வசதியை இலங்கை அரசுத் தரப்புடன் பேசி நான் பெற்றுத் தருகிறேன்’’ என்று தமிழ் அரசியல்வாதி போல புலம்பெயர்ந்த தேசத் தமிழர்கள் பலரோடும் தமது முன்னாள் நண்பர்களோடும் உரையாடி வருகிறார்.


இன்னொரு கதையும் இப்போது வெளிவந்துள்ளது.


வன்னி இறுதிப் போரின் பின்னர் இலங்கைப் படையினரிடம் சிக்கிக் கொண்ட சுமார் பத்தாயிரம் புலிகளின் போராளிகள் இலங்கைப் படைகளினால் பல்வேறு தடுப்பு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களுக்கு கே.பி. இப்போது அடிக்கடி கூட்டிச் செல்லப்படுகிறார். அங்குள்ள அந்தப் போராளிகளைச் சந்திக்கிறார். அவர்களுடன் மனம் திறந்து பேசுகிறார்.


அவர்களை மூளைச் சலவை செய்து, கே.பி. போல இலங்கை அரசுத் தரப்புடன் சேர்ந்து இயங்குபவர்களாக மாற்றும் தந்திரத்தை கொழும்பு இப்படி முன்னெடுக்கின்றதாம்!


பழக்கிய யானையை வைத்து காட்டு யானைகளை மடக்குவது போல, கே.பி.யை வைத்து ஏனைய போராளிகளைத் தம் வழிக்கு வரப்பண்ணும் எத்தனத்தில் இலங்கை அரசுத் தரப்பு இறங்கியிருப்பதாகத் தெரிகிறது!


இப்படி தனக்கு ஆதரவாக வீழும் முன்னாள் புலிப் போராளிகளை வைத்தே ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கு ஆதரவான அரசியல் கட்டமைப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் எனக் கனவு காண்கிறது கொழும்பு அரசுத் தலைமை.


புலிகளின் தலைமையின் அழிவின் பின் மலேசியாவிலிருந்தபடி கே.பி. செயல்பட்டபோது அவரது மூளையில் உருவானதுதான் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற கட்டமைப்பு. அவர் போட்ட விதையை இப்போது செடியாக்கி வளர்த்திருக்கின்றார் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கிய ஆதரவாளரும் அமெரிக்காவில் செயல்படும் சட்டத்தரணியுமான விஸ்வநாதன் உருத்திரகுமாரன்.


சர்வதேச மட்டத்தில் கொழும்பு அரசுக்கு பெரும் தலையிடியாக உருவெடுத்திருக்கும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசையும் கே.பி. என்ற பழக்கிய யானை மூலம் வளைத்துப் போட்டு அடக்கலாமா என்ற எண்ணம் அரசுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.


இதற்காக கே.பி. மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியப் பிரமுகர்களுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்றும் தகவல்.


ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் பல்வேறு நாடுகளைத் தளமாகக் கொண்டு சுறுசுறுப்பாகவும் மும்முரமாகவும் செயல்பட ஆரம்பித்திருக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசு. புலம் பெயர்ந்த தமிழர்களின் பலத்த ஆதரவுடன் உருவாகும் இந்தக் கட்டமைப்பை கே.பி. மூலம் சிதைக்கும் நரித் தந்திரத் திட்டம் சாத்தியப்படாது என்பதுதான் அவதானிகளின் உறுதியான கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக