ஞாயிறு, 4 ஜூலை, 2010

செய்திகள்..........................

இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்குமா?
---------------------------------------
இலங்கை அமைச்சர் விமல் விரவன்ச அங்குள்ள ஐ.நா அலுவலகம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மன்னிப்பு கோரல் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இக்கருத்து தனிப்பட்ட நபரின் கருத்தே தவிர இலங்கை அரசின் கருத்து அல்ல என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவை கலைக்காவிட்டால் இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிடுவேம் என அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரந்தன் பகுதியில் குழந்தையின் சடலம்
-----------------------------------------
பரந்தன் பகுதியில் குழந்தை ஒன்றின் சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் கடந்த வெள்ளிக் கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியின் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள பற்றைக்குள்ளிருந்தே இந்தச் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையை தாயாரே பற்றைக்குள் வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இதுவரை இந்தக் குழந்தையின் தாயார் யாரென்பது கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது

மட்டக்குளிய பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
--------------------------------------------------
மட்டக்குளிய பொலிஸ் நிலையம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகப் பொலிஸ் நிலையத்துக்குப் பலத்த சேதமேற்பட்டது. இதனையடுத்து அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில், போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபரொருவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அவர் திடீரென பொலிஸ் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடி மீது பலமாக அடித்ததன் காரணமாக அவரது கையில் காயமேற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்..

இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட நபர், பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகியே காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென்ற யூகத்தின் அடிப்படையில் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது

ஐ.நா அலுவலக முற்றுகை;நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
---------------------------------------------------------
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கான முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுக்கும்வரை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றிவளைக்குமாறும், அங்குள்ள உத்தியோகர்த்தர்களை தடுத்து வைக்குமாறும் பொதுமக்களிடம் கடந்த வாரம் விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் 3 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதானது, இலங்கைத் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கை என்றும் விமல் வீரவன்ஸ இதன்போது குறிப்பிட்டிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக