ஞாயிறு, 4 ஜூலை, 2010

"உயிராயுதம்"

கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.. கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்...
எந்தமொழியும் தோற்றுப்போகும். வார்த்தைகள் வறுமை அடையும் உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள் அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்களும் தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும். பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும். ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது. சமுத்திர நீரை அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா? ஓடும் முகிலை ஏணிவைத்து எட்டித்தொட முடியுமா? எதிரியின் எந்தவலுவும் இறுதியில் இவர்களிடம் சரணடையும். கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர். மறுநாள் வெடித்த செய்தி வெளிவரும்போது ஜாதகமும் சோதிடமும் தங்களுக்குத் தாங்களே தீமூட்டிக் கொள்ளும் காலால் நடந்து வாயால் மொழிந்து கையால் தலைவாரிக் கொண்டு எல்லோரையும் போலவேதான் இவர்களும். உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும் வேறுபட்டது. உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள். கிட்ட நெருங்க முடியாத இலக்குகளைக்கூட தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர். முதுகில் வேர்க்குரு போட்டாலே.. முந்நூறு மருந்துகள் தேடும் உலகில் சாவைத் தம் தோள்களில் சுமந்து நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள் காற்றிலும் நீரிலும் இவர்கள் கலக்கும்போது காற்றுக்கு வேர்க்கும். நீர் நெருப்பாகிவிடும். இவர்களுக்கு; சூரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான். பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம். கரும்புலிகள்; தலைவன் தலைவாரிவிடும் புயல்கள். தாயை நேசிக்கும் அளவுக்கு தலைவனையும் நேசிப்பவர்கள். தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள். ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம் இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை. யுலை 5.1987 கருமைக்கும் பெருமை வந்த நாள். புலியொன்று முதல் கரும்புலியான தினம் நெல்லியடியில் "மில்லர்" புதிய வரலாற்றை தொடக்கிய நாள். "எல்லாம் சரி வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்" கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின் வாய் மூட முன்னர் செவிப்பறைகள் கிழிந்தன. சாவு நேரே ஓடிவந்து முகத்தில் சந்திக்குமென்று எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான். "உயிராயுதம்" வலுவானது. கரும்புலிகள் தேவை அறிந்து செல்பவர்களே அன்றி சாவை விரும்பிச் சந்திப்பவர்களல்ல.. இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல. இதயம் இரும்பாலானவர்களும் அல்ல. பனியாய் உருகும் நெஞ்சுக்கும் பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும் உரிமையாளர்கள். வெடித்த பின்னரும் இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான். "நடுகல் நாயகர்கள் " ஆகும் வாய்ப்பும் எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை. கல்லறை கூட இல்லாத காவியமாய் வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல் சிலருக்கு வெளியே தெரியாத வேரின் வாழ்வு. பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு கரும்புலிகளின் ஜனனம் மட்டும் மரணத்தில்தான் ஆரம்பம் கால நதியில் இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள். மற்றவர்களுக்கு இனி என்ன செய்வதுதென்று தலைவெடிக்கும் போதுதான் இந்த சுகந்த ஊதுபத்திகள் உடல்வெடித்துப் போகிறார்கள். "ஊரறியாமலே உண்மைகள் கலங்கும் ஒருபெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும் வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்" பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல வந்தவரிகளில் வென்றவரிகள் இவை. கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன? கண்ணீரா? கல்லறையா? இல்லை. எதுவுமே இல்லை நெஞ்சின் நினைவே நெடிய கோபுரம். கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக