புதன், 28 ஜூலை, 2010

அரசியல்யமைப்பு திருத்தத்தால்,ஐ .தே.க வின் நிலை ஊரடங்குபோல்....

ஒரு நாட்டின் அரசியலமைப்பு அந்த நாட்டின் உயிர் நாடி எனக் கூறலாம். நாட்டின் நிர்வாகம் முதல் நீதித்துறை வரை அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அரசியலமைப்பே அடிப்படையாக அமைகின்றது.
எனவே தான் அரசியலமைப்பைத் தயாரிப்பதில் சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் எனக் கூறுவர். முதலாவது குடியரசு அரசியலமைப்பு அவ்விதமாகவே தயாரிக்கப்பட்டது.
அரசியலமைப்பு நிர்ணய சபையில் சகல சரத்துகளும் விவாதிக்கப்பட்டதோடு விவாதங்கள் பகிரங்கமாகவும் இடம் பெற்றன.


ஐக்கிய தேசியக் கட்சி 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் முதலாவது குடியரசு அரசியலமைப்பை நீக்கி விட்டுப் புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இந்த அரசியலமைப்பு ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் இரகசியமாகத் தயாரித்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் புதிய அரசியலமைப்பு பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.


பொதுமக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அன்றைய அரசாங்கம் அரசியலமைப்பைத் தன்னிச்சையாகத் தயாரித்தது மாத்திரமன்றிப் பதினாறு திருத்தங்களையும் தன்னிச்சையாகவே மேற்கொண்டது.


அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கோ அதற்குத் திருத்தங்களை மேற்கொள்வதற்கோ எவரிடமும் ஆலோசனை பெறவிரும்பாது செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி யினர் அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன் எல்லா அரசியல் கட்சிகளுடனும் பேச வேண்டும் என்றும் மதத் தலைவர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும் என்றும் இப்போது கூறுகின்றனர். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருப்பது ஐக்கிய தேசி யக் கட்சியின் பாரம்பரியம் போல் தெரிகின்றது.


அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கம் மற் றைய கட்சிகளுடனும் பேசப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் மக்கள் விடுதலை முன்னணியுடனும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஊடகவியலாளர் மகாநாடொன்றில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.


உண்மை நிலை இவ்வாறிருக்க, சகல கட்சிகளுடனும் அரசாங்கம் பேச வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி இப்போது கூறுவது கடின நிலைப்பாடொன்றை மேற்கொள்வதற்கான முஸ்தீபா என்ற சந்தேகம் மக்களிடம் இயல்பாகவே ஏற்படும். ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்ஹ நடத்திய பேச்சுவார்த்தையின் போதும், அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க பிரதிநிதிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் முன்வைக்காத கோரிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி இப்போது முன்வைப்பதாலேயே மக்களிடம் சந்தேகம் எழுகின்றது.


அரசியலமைப்பு சில திருத்தங்களுக்கு உள்ளாக வேண்டியது அவசியம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொள்கின்றதென்றால் அத்திருத்தங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமேயொழிய, மற்றைய கட்சிகளையும் மதப் பெரியார்களையும் பொது மக்களையும் சாட்டாகக் காட்டி ஒதுங்க நினைப்பது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல். மக்களின் நலனில் ஐக்கிய தேசியக் கட்சி உண்மையான அக்கறை கொண்டுள்ளதா என்பதைப் பரீட்சிக்கும் களமாக அரசியலமைப்புத் திருத்தம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக