திங்கள், 26 ஜூலை, 2010

மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் சிவந்தன் அழைப்பு

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.



பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து 2000 இற்கும் மேற்பட்டோர் வழியனுப்பி வைக்க, சிவந்தன் ஆரம்பித்த பயணம் கடற்கரை டோவரை இன்று பிற்பகல் சென்றடையும் என அங்குள்ள உதவியாளர்கள் அறிவித்துள்ளனர்.


நெடுஞ்சாலைகள் ஊடாக நடந்து செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில், அவற்றிற்கு சமாந்தரமாக அல்லது மாற்று வழிகள் ஊடாக நடந்து செல்லும் சிவந்தன் மிகவும் களைப்படைந்த நிலையிலும், கால் தசைநார்கள் இறுகிய நிலையிலும் காணப்படுகின்றார்.


இதனால் நேற்றிரவு அல்லது இன்று காலை டோவரை சென்றடைய வேண்டிய சிவந்தன், இன்று பிற்பகலே டோவரை அடைய முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.


நண்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்னும் 6 முதல் 7 மைல்கள் அவர் நடக்க வேண்டியுள்ளது. தோடர்ந்து நடந்தால் இன்னும் சில மணித்தியாலங்களில் அவர் டோவரை சென்றடைய முடியும்.


இதனையடுத்து பிரான்சின் கரையான கலையை அடைந்த பின்னர் பரிஸ் ஊடாக ஜெனீவா செல்லவுள்ளார். பிரான்சில் பிரித்தானியாவைவிட அதிக தூரம் நடக்க வேண்டியிருப்பதால், சிவந்தனுக்கு உற்சாகமும், ஆதரவும் வழங்க பிரான்ஸ்வாழ் தமிழ் மக்கள் தயாராகுமாறு அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.


சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,


தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,


மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்


போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுவிற்சர்லாந்து ஜெனீவா முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக