திங்கள், 26 ஜூலை, 2010

குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச் சத்தங்களும் ஓய்ந்துள்ளதே தவிர மக்களின் வாழ்க்கை நிலை இன்னமும் வழமை நிலைக்கு திரும்பவில்லை

இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அங்கு முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என பலதரப்பினர் கூறுகிறார்கள்.



இக்காலப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் அம்மாகாணத்தில் வெளிப்படையாக தெரிகின்ற போதிலும், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்களும் இருக்கின்றன.


விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் இன்னமும் அச்சத்துடன் வாழ்வதாக கூறும் 'அகெட்' எனப்படும் தன்னார்வ தொண்டர் அமைப்பின் இயக்குநரான அருட்தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன், நகர பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை காணக் கூடியதாக உள்ளது என்கின்றார்.




குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச் சத்தங்களும் ஓய்ந்துள்ளதே தவிர மக்களின் வாழ்க்கை நிலை இன்னமும் வழமை நிலைக்கு திரும்பவில்லை




மனித உரிமைகள் சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்த வரை பல பகுதிகளிலும் மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வந்தாலும் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களாக இருந்த பிரதேசங்களைப் பொறுத்த வரை போர் காலத்தில் இடிந்து போன வீடுகளில் அநேகமானவை இன்னமும் அப்படியே இருக்கின்றன.அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னும் வழமைக்கு திரும்பியதாக இல்லை என கூறப்படுகிறது.


போருக்கு பின் இன ஐக்கியத்திற்கான முயற்சிகள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக உரசல்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பதாக கூறுகிறார் சமூக ஆய்வாளரான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம்.இப்ராகிம்.


கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய தொழில்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கடந்த மூன்று ஆண்டுகளில் மேலோட்டமாகப் பாரக்கும் போது ஜனநாயகம் மலர்ந்து, அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட்டுள்ளதாகவே அறிகுறிகள் தென்பட்டாலும் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மிகக் கூடுதலாகவே உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக