வெள்ளி, 7 மே, 2010

போர்க்குற்ற விசாரணைகள் நியாயமான முறையில் மேற்கொள்ளுக!

வன்னிப் போரின் போது இடம்பெற்ற சர்வதேச போர் நியமங்களுக்கு மாறான செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு பக்கச் சார்பற்ற முறையில் நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது
. இவ்விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவை நியமித்துள்ளமை குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்ப்பும் தெரிவித்துள்ளது. இப்போரின் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு நேற்றுத் தெரிவித்திருந்தது. அத்துடன், இத்தகைய நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய சூழ்நிலைகள் தொடர்பாகவும், இந்நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டு கொள்வது குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை, மேற்குலகம், மனிதவுரிமை அமைப்புக்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் அழுத்தங்களின் பின்னணியிலேயே இப்போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் குறித்து விசாரணைகளை நடாத்துவதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழு ஒன்றை நியமித்திருப்பதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையில், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னிப் போரின் போது இடம்பெற்ற சர்வதேச போர் நியமங்களுக்கு மாறான செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழு நியமனத்தை வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏழு பேரை உள்ளடக்கி அமைக்கப்படுகின்ற இக்குழு மாற்று நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த குழு யுத்த சட்டமீறல்கள் தொடர்பிலும் ஆராயும் என ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு நாடுகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. சிறிலங்கா ஜனாதிபதியின் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சட்ட மீறல்களை வெளிப்படுத்த உதவுNதொடு மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியாக சிறிலங்கா மீது ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கமும் நீக்கப்படும். அத்துடன், நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு இந்த ஆணைக்குழு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக