வெள்ளி, 7 மே, 2010

போர்வெற்றி கொண்டாட்டங்களுக்கு பெருந்தொகையான சிங்களமக்கள்

சிறிலங்காவின் இராணுவ தலைநகராக மாற்றப்பட்டுவரும் கிளிநொச்சி பெருநகரில் எதிர்வரும் 20 ஆம் திகதி சிங்களதேசத்தின் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுவதற்கான பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அன்றைய தினத்தில், கிளிநொச்சிக்கு அரசதலைவர் மகிந்த உட்பட பல முக்கியஸ்தர்கள் சென்று, ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள வெற்றித்தூபிக்கு முன் சிங்கக்கொடியேற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதால் தென்பகுதி ஊடகவியலாளர்கள் பலரும் கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். கிளிநொச்சியில் ஏ-9 பெருவீதியெங்கும் வரிசையாக சிங்கக்கொடிகள் ஏற்றப்பட்டு, அங்கு சிங்களப்படையினரின் நினைவுத்தூபிகள் கட்டப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. தென்பகுதியிலிருந்து பெருந்தொகையில் கிளிநொச்சிக்கு சென்றுள்ள சிங்கள மக்களும் அப்பிரதேசங்களில் குடியேறியுள்ள பெருந்தொகையான சிங்கள மக்களும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளின் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெருந்தொகையான படையினர் பெருவீதிகளெங்கும் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரின் நினைவுத்தூபிகளுக்கு அருகில் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென் பகுதியிலிருந்து வருகை தந்துள்ள உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட இடங்களை கொண்டு சென்று காண்பிக்கும் படையினர், விடுதலைப்புலிகள் அமைப்பு வன்னியில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பது குறித்த பொய் பிரசாரங்களை மேற்கொள்வதில் முழுமுனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர். கிளிநொச்சியில் நடைபெறும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு பெருந்தொகையான தென்பகுதி மக்கள் தனி பேரூந்துகளில் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு செல்லும் சிங்கள மக்களில் - படையினரின் பெற்றோர் மற்றும் ஊனமுற்ற படையினரின் உறவினர்கள் ஆகியோருக்கு வன்னிப்பகுதியில் அவர்கள் குடியமரும் சாத்தியநிலை குறித்து படையினரால் ஆலோசனை கூறப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தடுப்புமுகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட வன்னி மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அங்கு கொண்டு செல்லப்பட்டு தென் பகுதி மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் படையினரால் காட்சி மனிதர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். கிளிநொச்சி உட்பட முக்கிய பிரதேசங்களில் தபாலகம், புனர்வாழ்வு அலுவலகங்கள் ஆகியவற்றை அமைத்து அவற்றை தமது சிவில் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கமாகவும் அங்கு வழமைநிலை திரும்பிவிட்டதாகவும் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளதாகவும் காண்பிப்பிப்பதிலும் அரசு முழுமூச்சாக செயற்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக