வெள்ளி, 7 மே, 2010

பட்டினி சாவின் உச்சத்தில் முள்ளிவாய்கால் மீள்பார்வை .........


மே மாதம் முதலாம், இரண்டாம் நாட்களும் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலை , குடிசைகள் மீது ஆட்லறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன. ஆனால் விமான தாக்குதல்கள் முன்னையதை விட இன்று குறைவாக இருந்தது. இதற்கு காரணம் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராட்சியம் ஆகியன பாதுகாப்பு சபையில் பேசும் போது இலங்கை வாக்குறுதிகளை மதித்து நடக்க பழகவேண்டும் என கூறி இருந்தன.
இந்த இரு நாடுகளின் செயற்பாடு இந்த பேச்சுடன் முடிவடைந்ததாகவே இருந்தது. அனால் சிங்கள அரசு பேச்சளவில் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என கூறிவிட்டு ஆட்டிலறி தாக்குதல்களை மேற்கொண்டவண்ணம் இருந்தது. இலங்கை பாதுகாப்பு அமைச்சு பிபிசி ஊடகத்திற்கு கூறுகையில் தாம் எறிகணைகளை ஏவவில்லை ஆனால் பாதுகாப்பு வலையத்திற்குள் சத்தங்கள் கேட்கின்றன. யார் எறிகணை ஏவுகின்றனர் என தெரியாது என நகைச்சுவையாகவும் நளினமாகவும் கூறியது. வைத்திய சண்முகராஜா அவர்களின் கண்கண்ட சாட்சி அறிக்கை இதே வேளை முள்ளிவாய்க்கால் உட்பகுதியில் இருந்து வைத்தியர் சண்முகராஜா அவர்கள் தொலைபேசியூடாகவும் வீடியோ ஊடாகவும் தனது அனுபவத்தை பதிவு செய்தார். அவர் கூறும் போது.. 2.5.2009 அன்றைய தினமான இன்று முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரி மீது நடாத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் 67 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 83 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். எறிகணை தாக்குதல்கள் நடக்கும் போது வைத்திய சாலையில் தமஹு பராமரிப்பில் 400 இற்கு மேற்பட்ட காயமடைந்த , பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் உட்பட பலர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர் என்றும் கூறினார். இன்று சிங்கள அரசின் தாக்குதலினால் கொல்லப்பட்ட , காயப்பட்ட பொதுமக்களை தான் நேரடியாக பார்த்துக்கொண்டே இருப்பதாகவும், இந்த செவ்வி வழங்கி கொண்டிருக்கும் போது தானும் ஆஸ்பத்திரி பணியாளர்களும் இறந்த உடலல்ங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அவர் தனது செவ்வியில் தமது வைத்தியசாலை அமைவிடம் பற்றி இலங்கை சுகாதார அமைச்சிற்கு தெரிவித்ததாகவும் அத்னைவிட மூன்று நாட்களுக்கு முன்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக அமைவிடம் பற்றிய செய்மதி தரவுகளை பாதுகாப்பு அமைச்சிற்கு கொடுத்திருந்ததாகவும் கூறினார். தரவு அனுப்பிய இரண்டு மணித்தியாலத்தில் வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியதாக அவர் சொன்னார்.ஆகவே இலங்கை அரசாங்கம் வைத்தியசாலை மீது திட்டமிட்டே தாக்குதலை மேற்கொண்டமை மேலும் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலபரம் பற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் அறிக்கை அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள் இன்று ஓர் அறிக்கை விட்டிருந்தார் அதில் மனித அழிவுகளையும் மனிதாபிமான அவலங்களையும் நிறுத்த ஒரேயொரு வழி யுத்த நிறுத்தமே என்றும் அதற்கு தாம் முழுமையாக ஒத்துழைக்க தயார் என்றும் கூறினார். அத்துடன் தாம் ஐக்கியராட்சியம் , பிரான்ஸ் போன்ற நாடுகளின் கரிசனையினை வரவேற்பதாகவும் கூறி இருந்தார். மே 3, 2009 மக்கள் தமது அன்றாட கடமைகளை கூட செய்ய மனம் இன்றி, அசைவியக்கம் முற்றாக நிறுத்தப்பட்ட நிலையில் ஆங்காங்கே பொழுதினை கழித்தனர். இருக்கின்ற பொருட்களை தாம் இருந்த இடங்களில் புதைத்தனர். சிலர் தமது இளம் பிள்ளைகளிற்கு திருமணத்தினை செய்து வைத்தனர். சிலர் ஆண் துணையில்லா குடும்பங்கள் தமது இளம் பிள்ளைகளை திருமணம் முடித்து கொடுத்து ஒப்படைத்தனர். காரணம் அவர்களாவது தப்பட்டுமே என்பது ஒருபுறம் இருக்க சிலவேளை இராணுவம் உள் நுழைந்தால் அல்லது இராணுவத்திடம் பிடிபட்டால் திருமணம் ஆகியோர் என்றால் சிலவேளை இராணுவம் கைவைக்காது என்ற ஓர் சிறிய நம்பிக்கையே ( உண்மையில் அவ்வாறு இல்லை, சிங்கள இராணுவம் தமிழ் சிறுமிகள் தொடக்கம் முதிய பெண்கள் வரை ஒருவரையும் விட்டு வைப்பதில்லை). நேற்று கொல்லப்பட்ட சடலங்களை புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் உழவு இயந்திரங்கள் மூலம் எடுத்து சென்று இரு பெரும் குழிகளில் போட்டுவிட்டு சிறிய கிறிஸ்தவ வழிபாட்டுடன் குழிகளை மூடிவிட்டனர். ஒவ்வொரு புதை குழிகளிலும் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் அந்த குழிக்குள் புதைக்கப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற தகவல்களை சொப்பிங்க் பாக்கில் போட்டு குழிக்குள் மூடிவிட்டனர். காரணம் அந்த தரவுகளை தாம் வைத்திருந்தால் சிலனேரம் தவறவிடப்படலாம் அல்லது இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்படலாம் என்பதனாலேயே ஆகும். இன்று தான் அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசின் தாக்குதல்களினால் 7000 பேர் வரையான சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக கூறியது. மே 4, 2009 இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலினை விட முள்ளிவாய்க்காலில் உணவு மற்றும்மருந்து பொருட்கள் இல்லாமையினால் மக்கள் மிகுந்த ஏக்கத்துடன் இருந்தனர். அதாவது காயப்பட்டால் என்ன செய்வது? காயமடைந்தால் உடனேயே இறந்துவிடவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருந்தது. உணவு பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினர். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே பெரும்பாலான மக்கள் சிங்களப்படைகளின் செல் வீச்சுக்களில் சிக்குண்டு மாண்டனர். தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு, பனங்கீரை, இலைகள், குழைகள் ,காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல், குளத்து மீன்கள், ஆலமர குருத்துக்கள்,ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளனீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் சிறார்கள் தமது உணவாக்கி கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனி கால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்துவிட்டது. கையில் பணம் இல்லாதவர்கள் தமது தோடு உட்பட அனைத்து நகைகளையும் பணம் உள்ளவர்களிடம் அறா விலைக்கு கொடுத்து காசாக்கி வைத்திருந்தனர். சிலர் படகுகளில் தப்பி செல்வதற்காக நகைகள் , பணங்களை கொடுத்து தயாராக இருந்தனர். சிலர் இராணுவ பகுதிக்குள் எவ்வாறு ஓடி செல்வது என்பதற்கான வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிலர் எங்காவது ஓடிசெல்வோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். ஆனால் பெரும்பான்மையானோர் எங்கு போனாலும் இதே நிலைதான் எங்களை விட்டு வைக்கமாட்டாங்கள் என்ற நிலைப்பாட்டில் கடவுள் மீது பழியினை போட்டுவிட்டு இருந்தனர். மே மாதம் 5 நேற்றும் இன்றைய காலை நேரமும் இலங்கை வான்படையினர் மீண்டும் விமான தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். இதனை இன்றைய தினம் தமிழர் புனர்வாழ்வுகழகம் ஓர் நிலபர அறிக்கையும் வெளியிட்டிருந்தது. இந்த விமான தாக்குதல்கள் கிழக்கு கரையோர குடி இருப்புக்கள் மற்றும் கடற்கரையோரங்களில் இடம்பெற்றது. பட்டினி கொடுமை முள்ளிவாய்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்தது. கற்பிணிதாய்மார், சிறார்கள்,முதியோர்கள் கடந்த மூன்று நான்கு நாட்களாக அசுத்த நீரினை பருகியதால் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக ஆரம்பித்தனர். சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். கற்பிணிதாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று வீழ்ந்தனர். கூடுதலான முதியோர் பட்டினி நிலைமையினால் மயக்கமுற்றும் , கோமா நிலையினை நோக்கியும் சென்று கொண்டிருந்தனர். சில முதியோர்களுக்கும் சிறார்களுக்கும் வயிற்றோட்டம் ஏற்பட்டது. இதனால் சிலர் இறந்து போயினர். இந்த மோசமான நிலையினை ஓரளவாவது தடுப்பதற்காக புனர்வாழ்வுக்கழகத்தினரால் இறுதி தேவைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை கொண்டு கஞ்சி கொடுக்கும் பணி இன்று காலை மீண்டும் ஆரம்பமானது. பெருமளவான மக்கள் விமான எறிகணை தாக்குதலையும் பொருட்படுத்தாது கஞ்சிக்கு அதிகாலையே வந்து குழுமி இருந்தனர். மூன்று நாளைக்கு தேவையான கஞ்சி வழங்க கூடிய தனது இருப்பில் ஒரு பகுதியினை இன்று புனர்வாழ்வுக்கழகம் செலவழித்திருந்தது. இதே வேளை செஞ்சிலுவை சங்கத்திடம் உணவும் மருந்தும்து கோரி அனுப்பபட்ட செய்திகளுக்கு இதுவரை சாதகமான பதிகள் கிடைக்கவில்லை என புனர்வாழ்வுக்கழக கள அலுவலகம் தெரிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக