வெள்ளி, 7 மே, 2010

சர்வதேச அழுத்தங்களையிட்டு சமாளிக்க சார்க்கை துணைக்கு இழுக்கும் மகிந்த

மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறது. பூட்டானில் நடைபெற்ற சார்க் மாநாட்டுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டனவே தவிர,
 என்ன விடயங்கள் குறித்து அவர்கள் பேசினர் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கத் துணை அமைச்சரும், மகிந்த ராஜபக்ஸவும் பேசிய விடயங்கள் இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியைக் தரக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால் இந்தச் சந்திப்பின் பின்னர் சார்க் மாநாட்டில் உரையாற்றிய போது, மகிந்த ராஜபக்ஸ சில வியடங்களைக் குறிப்பிட்டிருந்தார். “ மேற்குலக நாடுகள் தெற்காசிய நாடுகள் மீது திணிக்கும் தீர்வுத் திட்டங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. தெற்காசிய நாடுகள் வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்பட வேண்டும். பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். பிராந்தியத்துக்கு வெளியே உள்ள நாடுகளுடன் உறவைப் பேணுவதில் காட்டப்படும் அக்கறை பிராந்திய நாடுகளுக்கு இடையில் காட்டப்படுவதில்லை.” என்பன மகிந்த ராஜபக்ஸவின் உரையின் முக்கியமான விடயங்கள். பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டு வெளிச்சக்திகளின் அழுத்தங்களைத் தோற்கடிப்பது பற்றியே மகிந்த ராஜபக்ஸ பேசியுள்ளார். மகிந்த ராஜபக்ஸ உரையாற்றிய அன்று காலையில் புதிய பிரதமராக தனது அலுவலகக் கடமைகளைப் பெறுப்பேற்றுப் பேசிய டி.எம். ஜெயரட்ண, இன்னொரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளின் அழுத்தங்களைத் தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். லங்கையின் இரண்டு பிரதான தலைவர்கள் ஒரே நாளில் விடுத்துள்ள வேண்டுகோள்களின் அடிப்படை ஒன்று தான். வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட தளங்களும், இடங்களும் வித்தியாசமாக இருந்தாலும்- வெளிநாடுகளின் அழுத்தங்களைத் தோற்கடித்தல்- பற்றியே இவர்கள் பேசியுள்ளனர். இது முக்கியமான ஒன்று. இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களையிட்டு மிகவும் அச்சத்துடன் இருக்கிறது என்பதற்கு இவர்களின் இந்த உரைகளே உதாரணமாகும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாக இருப்பதால் தான்- இரு முக்கிய தலைவர்களிடம் இருந்தும் ஒரே அடிப்படையிலான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. சார்க் நாடுகளில், மேற்குலகின் அழுத்தங்களை அதிகம் சந்திக்கும் ஒரே நாடு இலங்கை தான். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அது இன்னமும் மேற்குலகின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறது. இந்தியாவை மேற்குலகினால் அதிகம் அழுத்திப் பிடிக்க முடியாது. ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில் மேற்குலகம் அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய நிலையில் இல்லை. எனவே சார்க் நாடுகளை அடிபணியக் கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியிருப்பது இலங்கையின் தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் சார்க் மாநாட்டில் அமெரிக்காவின் பார்வையாளராக றொபேட் ஓ பிளேக் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதிலிருந்தே றொபேட் ஓ பிளேக்கும் மகிந்த ராஜபக்ஸவும் பேசிய விடயங்கள் இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கவில்லை என்று உணரமுடிகிறது. மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் இவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது றொபேட் ஓ பிளேக் இதை வலியுறுத்தியிருப்பதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன. அடுத்து தேர்தல் வெற்றிக்குப் பின்னரான இலங்கையின் நிலைமைகள், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து அமெரிக்கா தமது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கலாம். இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரங்களிலோ அல்லது மனிதஉரிமைகள் விவகாரங்களிலோ அமெரிக்காவின் தலையீட்டை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. அமெரிக்கா என்ன- எந்தவொரு வெளியுலக நாடுகளும் தம் மீது அதிகாரம் செலுத்துவதை அது விரும்பவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதுமே அரசாங்கம் இதைத் தெளிவாகக் கூறியிருந்தது, நாட்டுமக்களின் கருத்துக்கு வெளிநாடுகள் மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதே அது. அதாவது இலங்கை அரசாங்கத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். எனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டிக்கவோ, திருத்தவோ முற்படக்கூடாது என்பதே அது. இந்த எண்ணப்பாட்டில் இருந்து இலங்கை அரசு விடுபடப் போவதில்லை என்பதையே பூட்டானிலும், கொழும்பிலும் சமகாலத்தில் வெளியான கருத்துகளில் இருந்து உணர முடிகிறது, இது வெளிநாடுகளின் தலையீடுகளைத் தோற்கடிக்கவோ அல்லது தட்டிக் கழிக்கவோ இலங்கை அரசாங்கம் முடிவு செய்துவிட்டது என்பதற்கான அடையாளமே. புதிய அரசாங்கத்தின் கொள்கையாக இதுவே அமையவுள்ளது. இத்தகைய நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைகள், அடிப்படை மனிதஉரிமைகள் மீது கவனம் செலுத்தக் கூடிய தரப்புகளை- இலங்கை அரசு வெறுப்போடும், எதிரிகள் போலவுமே பார்க்கப் போகிறது. இத்தகைய சூழலானது இலங்கை அரசின் மீது சர்வதேச சக்திகள் அதிருப்தி கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கட்டத்தில் தான் மகிந்த ராஜபக்ஸ சார்க் நாடுகளின் ஒத்துழைப்புடன் அதைக் கையாள முற்படுகிறார் என்பது வெளிப்படையாகியுள்ளது. பிராந்திய நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பிராந்தியத்துக்கு வெளியே உள்ள நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளக் காட்டப்படும் அக்கறை- பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்திக் கொள்வதில் காட்டப்படுவதில்லை என்ற வருத்தமும்; இதையே தான் வெளிப்படுத்துகின்றன. அதாவது இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய அயல் நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு- அவர் மேற்குலகச் சவால்களை சந்திக்கத் தயாராகிறார் போலவே தெரிகிறது. இது எந்தளவுக்கு அவருக்குக் கைகொடுக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக