வெள்ளி, 7 மே, 2010

பிரித்தானியாவின் புதிய பிரதமராக,டேவிட் கெமரூன்?

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பழமைவாதக் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன் வருவதற்கான வாய்ப்புக்களே இருப்பதாக அந்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்றிரவு 10 மணியுடன் முடிவடைந்திருந்தது. இத்தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி, பழமைவாதக் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் பிர்த்தானிய தேசயக் கட்சி என நான்கு கட்சிகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்கு வகித்தன. இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பழமைவாதக் கட்சி 302 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள தொழிலாளர் கட்சி 256 ஆசனங்களைப் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் படி பழமைவாதக் கட்சி 307ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 255 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆட்சியில் அமர்வதற்கு பழமைவாதக் கட்சிக்கு 325 ஆசனங்கள் இருக்க வேண்டும். இதனால் சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று பழமைவாக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டை நிர்வகிக்கும் நம்பிக்கையை தொழிலாளர் கட்சி இழந்து விட்டது என பழமைவாதக் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார். பிரித்தானிய மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், இம்மாற்றம் புதிய தலைவரை வரவேற்கத் தயாராகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக