வெள்ளி, 10 டிசம்பர், 2010

இயற்கையும் வஞ்சிக்கிறது - மழை,வெள்ளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

சிறிலங்காவில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்து கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் வடபகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



சிறிலங்கா முழுவதும் கடும் மழை பெய்த போதும் வடபகுதியிலேயே அதிகளவான மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.


நாடு முழுவதிலும் சுமார் 28 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 135,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் காரியவசம் தெரிவித்தார்.


யாழ்ப்பாண மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் 8365 குடும்பங்களைச் சேர்ந்த 30,452 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இங்கு 156 வீடுகள் முற்றாகவே அழிந்து போயுள்ளன. 2138 வீடுகள் சேதமடைந்துள்ளன.


மன்னார் மாவட்டத்திலேயே அதிகளவான மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இங்கு 9693 குடும்பங்களைச் சேர்ந்த 40,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரச செயலகம் அறிவித்துள்ளது.


மன்னார்- பூநகரி வீதி வெள்ளத்தில் மிதக்கிறது.


இந்த வீதியில் மூன்று கி.மீ பகுதி முற்றாகவே போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.


அகத்திமுறிப்புக்குளம் உடைப்பெடுத்ததால் இங்கு பாரியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தில் 3500 குடும்பங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.


இங்கு இடம்பெயர்ந்த சுமார் 1975 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தண்ணிமுறிப்புக் குளம், உடையார்கட்டுக் குளம், விசுவமடுக் குளம், வவுனிக் குளம் ஆகிய பிரதான குளங்கள் அனைத்தும் நிரம்பி வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன.


கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி பிரதேச செயலர் பிரிவுகளில் 5628 குடும்பங்களைச் சேர்ந்த 21,564 பேர் மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இங்கு 41 வீடுகள் முற்றாகவே அழிந்து போயுள்ளன. 1827 வீடுகள் சேதமடைந்துள்ளன.


இந்த மாவட்டதிலுள்ள இரணைமடு மற்றும் அக்கராயன் குளங்கள் நிரம்பியுள்ளதால் அவை உடைப்பெடுப்பதைத் தடுக்கும் வகையில். அணைக்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக