வெள்ளி, 10 டிசம்பர், 2010

விக்கிரமபாகு கருணாரத்தின கைது செய்யப்படலாம்!!!

லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கத்துக்கெதிரான கருத்துக்களை வெளியிட்ட காரணத்துக்காக விக்கிரமபாகு கருணாரத்தின கைது செய்யப்படலாம் என்று ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய
அதிகாரிகளின் தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஒரு இலட்சம் பேரளவிலான சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர் லண்டனில் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, பொய்யான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதற்கு ஏதுவான சட்டப்பின்புலம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
விக்கிரமபாகு மற்றும் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோரைக் கைது செய்யுமாறு ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புப் பணிப்பாளர் விமல் கீகனகே மற்றும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய சட்டத்தரணிகள் சிலரும் ஏற்கெனவே பொலிசில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.
அவ்வாறான பின்புலத்தில் தான் ஜனாதிபதியே இன்று அது தொடர்பான சட்டவிதிகளை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினர் ஒரு இலட்சம் தமிழ் சிவிலியன்களைப் படுகொலை செய்ததாக விக்கிரமபாகு கருணாரத்தின லண்டனில் வைத்துத் தெரிவித்த குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கையில் பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளதாக நேற்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான நிலையில் பொதுமக்கள் சுயமாக விக்கிரமபாகு கருணாரத்தின மீது தாக்குதல் மேற்கொண்டாலோ அல்லது அவர் போன்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கெதிராக வன்முறையில் இறங்கினாலோ அரசாங்கத்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது போகும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
அரசாங்கம் அனைத்து மக்களினதும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிரிட்டனில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதை கடுமையாகச் சாடிய மறுகணமே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கை மக்களின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டது தான் வேடிக்கையாக இருந்தது.
பிரிட்டனில் நடைபெற்றது பொது மக்களின் ஆர்ப்பாட்டம் அல்லவென்றும் அது புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களினது ஆர்ப்பாட்டம் என்றும் அவர் வலியுறுத்தினார். அந்தவகையில் ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்தானது கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் செயல் எனவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
அதற்கடுத்த நிமிடமே அவர் விக்கிரமபாகுவின் கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் வார்த்தைகளை உதிர்த்தமை தான் பெரும் நகைச்சுவையாக இருந்தது.
அத்துடன் விமான நிலையத்தில் விக்கிரமபாகு மீதான தாக்குதலையும் நியாயப்படுத்துவது போன்று அவர் கருத்து வெளியிட்டார். மேலும் அன்றைய சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும்,எந்தவொரு ஊடகவியலாளருக்கும் காயங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய வண்ணம், அவர்கள் தாக்கப்படவில்லை என்றும் அழிச்சாட்டியமாக மறுத்தார்.
அதே போன்று ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களில் அமைச்சர்கள் அல்லது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒரு சிலர் கதை பரப்புவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல, அவையனைத்தும் சோடிக்கப்பட்ட பொய்கள் என்றும் மறுத்துரைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக