வெள்ளி, 10 டிசம்பர், 2010

சர்வதேச மனித உரிமைகள் தினமும் தமிழீழ மக்களும்: ச.வி.கிருபாகரன்

கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்னர் (1948 டிசம்பர் 10ம் திகதி) ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் ஜக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல சர்வதேச சட்டங்களின் முன்னோடியாக அமைந்துள்ளது.



முப்பது சாரங்களை கொண்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் ஒரு தனிமனிதனின் சமூக, பொருளாதார,கலை-கலாச்சாரம் அரசியல் உரிமைகளை உள்ளடக்கியவையாக அமைகிறது.


சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை பொறுத்தவரையில் ஜக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நூற்று தொண்ணூற்றிரண்டு (192) அங்கவத்துவ நாடுகளும் தமது தலையாய கடமையாக ஏற்றுகொள்கின்றன.


உலகம் பூராகவும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் ஏற்கப்பட்டபோதிலும், மனித உரிமை மீறல் என்பது பரவலாக சகல நாடுகளிலும் நடைபெறுகின்றன. வேறுபட்ட பூலோக பிராந்தியங்களில் அரசியல் பொருளாதார, கலை-கலாச்சாரத்தை, அடிப்படையாக கொண்டு, வேறுபட்ட நாடுகளில் புரட்சிகள், விடுதலை போராட்டங்கள், தொழிலாளர் உரிமைகள், சமய ரீதியான போராட்டங்களின் பொழுது, போராட்டக்காரர்கள் அரச படைகளினால் தாக்கப்படுகின்றனர். இதனால் கைது, தடுப்புக்காவல், சித்திரவதைகள், கொலைகள், காணமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்கள் ஏற்படுவது மட்டுமல்லாது, பெருமளவான பொருளாதாரச் சேதஙகளும்; கலாச்சார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.


சர்வதேச மனித உரிமை பிரகடனத்துடன் கூடிய பல பலம் பொருந்திய சர்வதேச சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருந்தும் நாடுகளின் காவலனாக உள்ள ஜக்கிய நாடுகள் சபையினால் இவற்றை தடுத்து நிறுத்த முடியாதுள்ளனர். இவை தவிர்ந்து இயற்கை அனர்த்தங்களான சூறாவளி, சுனாமி, பூமியதிர்ச்சி, கடல் கொந்தளிப்புக்களினாலும் பெருமளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.


இயற்கை அழிவுகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் என்ன தொடர்புகள் உள்ளன என சிலர் அதிசயமாக வினாவலாம்! ஓர் இயற்கை அழிவினால் பாதிக்கப்ட்ட மக்களை, அதற்குரிய அரசுகள் நிவாரணங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை இதிலிருந்து காப்பற்ற தவறும் பட்சத்தில் இது ஒரு மனித உரிமை மீறலாக மாறுகிறது! இதற்கு நல்ல ஓர் உதாரணமாக சிறீலங்கா விளங்குகிறது.


சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணம் கொடுக்காது காலத்தை கடத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை அவலநிலைக்கு ஆக்கிய சிறீலங்கா அரசு, வடக்கு – கிழக்கு மக்களின்மனித உரிமையை மிகமோசமாக மீறியுள்ளது.


அது மட்டுமல்லாது, வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் மொழி, சரித்திரம், கலை-கலாச்சாரம், பொருளாதரம்,ஆகியவற்றை அலட்சியம் செய்து அவர்களது அரசியில் உரிமைகளை கடந்தஆறு தசாப்தங்களுக்கு மோலாக மறுக்கப்பட்டு, ஓர் உரிமை அற்ற இனமாக, அடிமைகளுக்கு சமனாக நடத்துவது மாபெரும் மனித உரிமை மீறலாகும்.


அடுத்தது, மேற்கூறப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், சாத்வீக உரிமை போராட்டங்களை மேற்கொண்ட மக்கள் மீது சிறீலங்கா அரசு, காடையர்களை கொண்டு வன்முறை, இனக்கலவரங்கள், கொலை, கொள்ளை, பாலியல்வன் முறைகளை மேற்கொண்டு தமிழினத்தை பூண்டோடு அழிக்க முனைவது அடுத்து மனித உரிமை மீறலாகும்.


ஆயுதப்போரட்டம்


மனித உரிமைச் சட்டங்கள் ஒரு தனிமனித உரிமைபற்றி பேசும் அதேவேளை, சர்வதேச மனிதபிமானச் சட்டங்கள் ஓர் ஒடுக்கப்பட்ட இனம் தமது தற்காப்பிற்காக ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு உரிமை உடையதெனக் கூறுகிறது. இச் சட்டத்திற்கு அமைய பல இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்கள் இறுதியில் ஓர் ஆயுத போராட்டத்தை 80ம் ஆண்டின் முற்பகுதியில் சிறிது சிறிதாக ஆரம்பித்தனர். இது 1983ம் ஆண்டு ஓர் முழுமூச்சான ஆயுதப்போராட்ட வடிவத்தை அடைந்தது.


இப்படியாக தமிழீழ இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தை எந்த வெளிநாட்டு அரசோ,சர்வதேச சமுதாயமோ நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபொழுதும் முன்வைக்க முனையவில்லை. அவ்வேளையில் உலக ஒழுங்குகள் மட்டுமல்லாது, தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு அயல் நாடான இந்தியாவின் முழு ஆதரவும் இருந்தமையும் காரணியாக இருந்தது.


போராட்ட வடிவங்கள் மாறி இறுதியில் வடக்கு கிழக்கு நிலப்பரப்பின் மூன்றில் இரண்டு பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டதை கவனித்த சர்வதேச சமுதாயமும், அயல் நாடான இந்தியாவும் தமிழீழ மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு முழுக்கு போடுவதற்கு திட்டமிட்டனர்.


இதன் அடிப்படையில் சிறீலங்கா அரச படைகளின் கைகள் மேலோங்க தொடங்கியது. தேவைகளுக்கு மேலதிகமான ஆயுதங்கள், சர்வதேச மனிதவலு உட்பட ஆலோசனைகள் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டன.


எந்த மனிதபிமான சட்டத்தின் கீழ் தமிழீழ மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆரம்பித்தார்கள், அதேசட்டம் சிறீலங்காவில் வலுவிழந்து நிற்க, மனித உரிமை மீறல், போர் குற்றங்கள், இனஅழிப்புகளை சிறீலங்கா அரசு சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழீழ மக்கள் மீது மேற்கொண்டு வெற்றியும் கண்டது.


இன்றைய நிலை


பலவிதப்பட்ட இயற்கை அழிவை எதிர்கொண்ட மக்கள் மீது, எந்தவித ஈவிரக்கமின்றி சர்வதேச போர் விமானங்களும் எறிகணைகளும், குண்டுவீச்சுகளும் மழையாக பொழிய தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பதினையாயிரம் போராளிகள் தடுப்புக்காவலிலும், மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எந்தவித வசதிகளோ உணவோ அற்ற முகாம்களில் தஞ்சம் கோரினர்.


ஆனால் இவற்றை பற்றியே அக்கறையற்ற சிறீலங்கா அரசு தினமும் சிங்கள மக்களை வடக்கு – கிழக்கில் குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகளையும், கோயில்களையும் தமிழர் தாயக பூமியில் நிறுவுவதில் காலத்தை கழிக்கின்றனர்.


ஆனால் சர்வதேச சமுதாயமும் அயல் நாடான இந்தியாவும் ஆயுதப் போராட்டத்தை அழிப்பதில் காட்டிய அக்கறையில் சரிபாதி வேகம்கூட இல்லாது நத்தை வேகத்தில் தமிழீழ மக்களின் பரிதாபநிலையில் அக்கறை காட்டுகின்றனர். உண்மையாக கூறுவதனால் சர்வதேச மனித உரிமை சாசனமோ சர்வதேச சட்டங்களோ இரவோடு இரவாக நிச்சயம் தமிழீழ மக்களை கப்பாற்ற போவது இல்லை.


ஆகையால் தமிழீழ மக்களாகிய நாம் உள்நாட்டிலும் புலம்பெயர் வாழ்வில் ஒன்றுபட்டு எமது இனத்திற்காக உழைக்க வேண்டும்.


நாம் ஒவ்வொருவரும் எமது இனத்திற்கு பயன்படும் விடயத்தில் இன்று என்ன செய்யப்போகிறோம் என்ற நினைவில் காலையில் எழ வேண்டும். அதேபோல் மாலையில் தூக்கத்திற்கு போகும்பொழுது இன்று எதை உருப்படியாக எமது இனத்திற்கு செய்தோம் என்பதை எண்ண வேண்டும் இதுவே எமது இனத்தின் விடுதலைக்கு வழிவகுக்கும்.


ச.வி.கிருபாகரன்
பொதுச் செயலாளர் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் – பிரான்ஸ்
10 டிசம்பர் 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக