வெள்ளி, 10 டிசம்பர், 2010

போரில் வென்றவர்களுக்குத்தானே எல்லா உரிமையும். தோற்றுப் போன சமூகம் எல்லாவற்றையும் கைகட்டிப் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

மழை மெல்லத் தூறிக் கொண்டிருந்தது. முன்னிருட்டுக் காலம் என்பதால் எங்கும் இருளின் போர்வை. இருளின் கருமையைக் கிழித்துக் கொண்டு வந்து சேர்ந்த வாகனங்கள். பழைமையோடு யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தைய செழுமையைச் சொல்லி நிற்கும் அந்தக் கட்டடத்தின் முன்னால் வந்து
நிற்கின்றன. அதன் வருகையை எதிர்பார்த்து நின்றவர்களின் முகத்தில் ஒருவித பரபரப்புத் தொற்றிக் கொண்டது. தயாராக வைத்திருந்த மூடை முடிச்சுகளை வாகனத்தில் ஏற்றிவிட்டு தாமும் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். சந்தடியின்றி ஒளியின் துணையோடு நகரத் தொடங்கியது வாகனம். அதன் பயண முடிவில் தலைவிரி கோலமாக நிற்கின்ற தென்னைகளைச் சுமந்து நிற்கும் காணி ஒன்று தென்பட்டது. இருளையும் பொருட்படுத்தாது வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் தமது மூடை முடிச்சுகளை ஓரிடத்தில் குவித்து விட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தமாகினர். இவர்களுக்கு உதவி செய்யவென அந்த இருளிலும் சீருடை அணிந்த ஒரு குழு அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தது. வாகனத்தில் வந்தவர்களும் இவர்களும் ஒன்றித்து கருமமே கண்ணாயினர். அவர்களின் காரியத்தின் பயனாக வெறுமையாக இருந்த அக் காணி விடியற்காலையில் இருபதுக்கும் மேற்பட்ட குடிசைகளின் உருவாக்கத்தோடு ஒரு குடியிருப்பாக மாறத் தொடங்கியிருந்தது.




எல்லாம் எதிர்பார்த்தபடியே நடந்து முடிந்திருக்கின்றன. நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் சொல்லாமல் கொள்ளாமல் இரவோடிரவாக கடந்த செவ்வாய்க்கிழமை குடியேற்றப்பட்டுள்ளனர். 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு இருந்ததாக உரிமை கொண்டாடிக் கொண்டு யாழ்.ரயில் நிலையத்தில் வந்து குவிந்திருந்த இவர்கள் தற்போது அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றில் அத்துமீறி நுழைந்திருப்பது யாழ் மக்களுக்கு ஆச்சரியமான செய்தியல்ல. எனினும் சிங்கள மக்கள் குருநகர் தொடர்மாடிக் கட்டடத்திலோ அல்லது கொழும்புத்துறை மணியந்தோட்டம் பகுதியிலோ தான் குடியேறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட்டிருந்தது. அதற் கேற்ற வகையில் சில காரியங்களும் நடை பெற்றிருந்தன. தாம் முன்னர் கொழும்புத்துறை மணியந்தோட்டம் பகுதியிலேயே குடியிருந்ததாகவும் தற்போது தமது காணிகள் யாவும் மாவீரர் குடும்பங்களுக்கு புலிகளால் கொடுக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் சிங்கள மக்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு யாழ்ப்பாணத்துக்கு வந்தது முதலே தாம் வாடகைக்கு இருந்ததாகவே சொல்லி வந்த இவர்கள் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது "எங்களுக்குச் சொந்தமான காணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளது. அதற்கான ஆதாரமும் எம்மிடம் உண்டு"என்று திடீர் "பல்டி" அடித்ததுடன் சில காணி உறுதிகளையும் காண்பித்தனர்.




இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்கள் கொழும்புத்துறையில் குடியேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருந்தன. மணியந்தோட்டம் பகுதியில் இன்னமும் வெடிபொருள்கள் அகற்றப்படவில்லை என்று கூறி அங்கு தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தாமதப்படுத்தப்பட்டு வந்தது.அத்துடன் வசந்தபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேறும் அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தே இப்பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற்ற அரசு திட்டமிடுகிறதோ என்று யாழ்.மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.




போர்க் களங்களில் எதிரியை திசை திருப்புவதற்காக உண்மையான இலக்கை விடுத்து வேறொரு இலக்கில் தாக்குதல் நடத்த முற்படுவதுபோல "பாவ்லா" காட்டுவதுண்டு. அதுபோலவே எல்லோரது கவனத்தையும் கொழும்புத்துறையில் குவிய வைத்துவிட்டு மிகக் கெட்டித்தனமாக அந்த மக்கள் நாவற்குழியில் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். இந்தக் குடியேற்றம் மக்கள் தாமாகவே நிகழ்த்திய ஒன்று என அரசுத் தரப்பும் படைத்தரப்பும் சொல்லக் கூடும். யாழ். ரயில் நிலையத்தில் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள மக்கள் அனைவரும் தங்கக் கூடிய கொள்ளவு இல்லாததாலும் அவர்கள் சிரமப்படுவதாக கடந்த சில வாரங்களாக "படம்" காட்டப்பட்டிருந்தது. ரயில் நிலையப் பகுதியில் உள்ள வசதியீனங்களால் அங்கிருந்த சிலருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதாகவும் ஒருவருக்கு டெங்கு நோயின் தாக்கம் ஏற்பட்டு அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு தங்கியிருந்த சிங்கள மக்களால் சில கதையாடல்கள் உலவ விடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஒருவருக்கு டெங்கு நோயோ வயிற்றோட்டமோ ஏற்பட்டால் அவரை யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்காமல் எதற்காக விழுந்தடித்துக் கொண்டு இங்கிருந்து அநுராதபுரத்துக்கு ஓடவேண்டும்? என்ற கேள்வி எல்லோரிடமும் இத்தருணத்தில் எழுவது இயல்புதான். இந்தக் கேள்விக்கான பதிலில் தான் யாழ்ப்பாணத்தில் குடியேற வந்த சிங்கள மக்களின் அல்லது அவர்களுக்குப் பின்னால் இயங்குகின்ற மர்மக் கரங்களின் சமயோசிதமான காய்நகர்த்தல் ஒன்றிருப்பது புலப்படும். யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதி, சுகாதார வசதி என்பவை எதுவுமற்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாக தென்னிலங்கையில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பிரமையை ஏற்படுத்தி அதனூடாக அனுதாபத்தைப் பெறுவதே இவர்களின் இலக்கு. இந்த அனுதாபம் மிக விரைவான குடியேற்றத்துக்கு உதவக்கூடும் என இவர்கள் எண்ணியிருக்கக் கூடும்.




தென்னிலங்கையில் கடந்த காலங்களில் இனவாதக் கருத்துக்களைக் கக்கி வந்த கட்சிகளும், சில அரசியல்வாதிகளும் சிங்கள மக்களின் யாழ்ப்பாணக் குடியேற்றத்துக்காக வக்காலத்து வாங்கவும் தவறவில்லை. அவர்களில் மிக முக்கியமானவர் ஜே.வி.பியின் முன்னைநாள் பிரசாரச் செயலாளரும் தற்போதைய வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச. யாழ்ப்பாணத்துக்குச் சென்றுள்ள சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கான சகல உரித்துக்களையும் உடையவர்கள் என்று இவர் பலமுறை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில்தான் அவருடைய அமைச்சின் ஆளுகைக்குள் வருகின்ற அரச காணியொன்றில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது விமல் வீரவன்சவின் ஒருசில மாதங்களுக்கு முன்னான யாழ் விஜயம் மீதான சந்தேகத்தையும் உண்டு பண்ணியிருக்கின்றது.




விமல்வீரவன்ச யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது ஏதோ யாழ். மக்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டே வருவதாகச் சொல்லப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு வந்தவர் குருநகரிலுள்ள ஐந்துமாடிக் குடியிருப்பையும், நாவற்குழியிலுள்ள வீடமைப்புக்குச் சொந்தமான காணியையும் பார்வையிட்டுச் செல்லத் தவறவில்லை. அவர் இங்கிருந்து சென்ற கையோடுதான் யாழ்ப்பாணத்துக்கு சிங்கள மக்களும் வந்து சேர்ந்தனர். இப்போது எவ்வித அச்சமுமற்றவர்களாக வெகு துணிச்சலோடு நாவற்குழியிலுள்ள காணியில் குடியேறியும் விட்டனர். வன்னியில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் மக்களால் "ஆள்காட்டி" என அழைக்கப்படுகின்ற வேவு விமானங்கள் வந்து சென்றபின்னரே குண்டு வீச்சு விமானங்கள் வருவதுண்டு. அத்தகைய ஆள்காட்டி வேலையைச் செய்யத்தான் விமல் வீரவன்ச யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பாரோ? என்று மக்களில் பலரும் தமக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள்.




அவ்வாறாக அவர்கள் சந்தேகிப்பதில் நியாயம் இருப்பதாகவே படுகிறது. இல்லாவிட்டால் ஏறக்குறைய 30 வருடங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணத்துடன் எந்தவித தொடர்புமற்றிருந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு நாவற்குழியில் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான மிகப் பரந்த காணியொன்றிருப்பது எப்படித் தெரியும்? அங்கே தாம் குடியிருந்தால் எந்தவித பிரச்சினைகளையும் எவரும் எழுப்ப முடியாது என்ற இரகசியமும் அவர்களுக்கு தெரியவந்ததன் மர்மம் என்ன? என்ற கேள்விகள் விமலின் யாழ் விஜயம் மீதான சந்தேகத்தையே உறுதி செய்கின்றன. உண்மையில் புகையிர நிலையத்தில் தங்கியிருந்து சமைத்து உண்டுவிட்டு அங்கேயே உறங்குபவர்களுக்கு கிட்டத்தட்ட 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள நாவற்குழி என்ற ஊரைக் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் பரம்பரையாக வாழ்கின்ற அநேக தமிழ் மக்களுக்குக் கூட சிங்கள மக்கள் குடியேறிய பின்னர்தான் நாவற்குழியில் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான காணியொன்று வெறுமையாக இருந்தவிடயமே தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் வாடகைக்கு இருந்ததாக வந்து சேர்ந்த சிங்கள மக்கள் மிகத் துல்லியமாக இந்த இடத்தில் தமது புதிய குடியிருப்புக்களை நிறுவத் தொடங்கியிருப்பது நீண்டகால திட்டமிடல் ஒன்றின் அங்கமாகவே அவர்களது நுழைவு இடம்பெற்றிருப்பதையே துலாம்பரமாக்குகின்றது.




மாஜாயாலப் படங்களில் வருவது போல ஒரே இரவுக்குள் குடியிருப்புக்கள் முளைப்பதற்கான எல்லாப் பொருள்களும் சிங்கள மக்களுக்கு கிடைத்த வழியும் இதுவரை சொல்லப்படவில்லை. எனினும் கிடைத்த விதம் எல்லோருக்குமே தெரிந்த பரகசியம்தான். பூர்வீகமாக இந்த மண்ணிலேயே வாழ்ந்து போரால் விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாகவே உழன்றுகொண்டிருக்கிற வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்ற இன்னமும் அரசுக்கு மனம் வரவில்லை. அவர்களது பிரதேசங்களில் உள்ள வெடிபொருள்களை அகற்ற நீண்ட காலம் தேவைப்படுகின்றது என்று அது நொண்டிச்சாட்டுகளையும் அள்ளிவிடுகிறது. ஆனால் வாடகைக்கு இருந்தவர்களுக்கு மட்டும் ஒரே நாளில் வசதியான காணியொன்றில் குடியிருப்பதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அரச காணியொன்றில் அத்துமீறி நுழைவது கூட சட்டப்படி குற்றம். சிங்கள மக்கள் நுழைந்ததோடு மட்டுமன்றி தமக்கான குடியிருப்புக்களையும் அரச காணியொன்றில் எவ்வித அனுமதியையும் பெறாமல் உருவாக்கியிருக்கிறார்கள். இது பாரதூரமான குற்றமாகும். ஆனால் சிங்கள மக்கள் அரச காணியில் குடியேறிய விடயம் எல்லா ஊடகங்களாலும் தகுந்த ஆதாரத்தோடு அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும் எவ்வித சட்ட நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இதிலிருந்தே அரசின் மறைமுக மனப்பூர்வ அனுசரணை இந்தக் குடியேற்றத்துக்கு இருப்பது புலனாகின்றது. பூர்வீகமாக வாழ்ந்த இடத்தில் அதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அவர்களது குடியிருப்பில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார்கள் வசந்தபுரம் மக்கள். ஆனால் இதே மண்ணில்தான் தமது இருப்பியலுக்கான எந்தவித ஆதாரங்களுமற்று வந்த சிங்கள மக்கள் "அடாத்தாக" இரவோடு இரவாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்விரு செயல்களையும் ஒரே தட்டில் பார்க்கும்போதே இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசின் தராசு எந்தப் பக்கம் தாழப்போகிறது என்பது புரிந்து விடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக