வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம்

லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமையை அனுப்பவில்லை எனவும் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவரேசென்றதாகத் தெரிவித்த
அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பென தடை செய்த பிரிட்டிஷ் அரசு அதன் ஆதரவாளர்களை ஜனாதிபதிக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய எப்படி அனுமதித்தது எனவும் கேள்வி எழுப்பினார்.இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் சாக்குப் போக்குக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமென்பது உலகின் மிகப் பிரசித்தி பெற்ற உயர்கல்வி நிறுவனமாகும். அந்த அமைப்பின் அழைப்பை கௌரவமாக ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றச் சென்றார். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது ஜனாதிபதிக்கு எதிராக புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்ததை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்கூட்டியே அறிந்த நிலையிலும் அதனைத் தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒரு விருந்துக்கு முக்கிய பிரமுகரை அழைத்துவிட்டு அவர் வரும்போது கதவை மூடும் பண்பு யாரிடமாவது இருக்கமுடியுமா?


முதற்றடவையாக உலகப்புகழ் மிக்க கல்வி நிறுவனத்தில் நடந்துள்ளது. இதனால் அபகீர்த்திக்குள்ளாவதும் வெட்கப்பட வேண்டியது நாமல்ல பிரிட்டிஷ் அரசும் ஒக்ஸ்போர்ட் யூனியனும்தான்.விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென்று பிரகடனப்படுத்தி தடை விதித்த நாடுகளில் பிரிட்டிஷ் முன்னணியில் இருக்கின்றது. அவ்வாறு தடைவிதித்த நாடு பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டின் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கமுடியுமா எனக் கேட்க விரும்புகின்றோம்.ஜனாதிபதி இந்த வைபவத்தில் தனிப்பட்ட ரீதியில் பங்கேற்கச் செல்லவில்லை. ஒக்ஸ்போர்ட் யூனியனின் அழைப்பின் பேரில் பிரதான உரையொன்றை ஆற்றுவதற்கே சென்றார். ஜனாதிபதிக்கு அங்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறும் ஒக்ஸ்போர்ட் யூனியன் வளாகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் ஜனநாயகம்பேசும், பயங்கரவாத ஒழிப்புக்குக் குரல் கொடுக்கும் நாடுகளின் மறைமுக நடவடிக்கைகள் உலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இங்கு விஜயம் செய்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கு போதியளவு உச்சக்கட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வரவும் அரசு உரிய பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தது. உலகிலேயே உன்னதமான கல்வி நிறுவனமாகிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு சென்றார். அதற்கேற்ற வகையில் பிரிட்டிஷ் அரசு இராஜதந்திர மட்டத்தில் செயற்படத் தவறிவிட்டது. இதனை அந்த நாட்டின் திட்டமிட்ட செயற்பாட்டின் வெளிப்பாடாகவே நாம் நோக்குகின்றோம்.


பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் பிரித்தானியா பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட புலிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தது போன்று அல்ஹைதா அமைப்புக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த இடமளிக்குமா எனக் கேட்க விரும்புகின்றோம். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமை ஒருவர் அனுப்பப்படவில்லை. பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் கௌரவமான தொரு நாட்டின் தலைவரே அங்கு சென்றார். இதற்கு முன்னரும் உலகத் தலைவர்கள் பலரும் இங்கு உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.


ஒரு காலகட்டத்தில் இந்த ஒக்ஸ்போர்ட் யூனியனின் செயலாளராக முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவும் தலைவராக முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் பதவிவகித்துள்ளனர். அவ்வாறு உயர்வான தரத்தையுடைய ஒரு உலகப் புகழ் மிக்க கல்வி நிறுவனத்துக்கு இன்று மாசு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த விரும்பத்தகாத செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. அத்துடன் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் யூனியனின் தலைவராக பதவி வகித்தவர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். புதிதாக தலைமைப்பதவியை ஏற்றிருப்பவர் ஜனாதிபதி லண்டனில் அடுத்த சில தினங்களுக்கு தங்கியிருப்பாரானால் அங்கு உரையாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.


ஆனால் ஜனாதிபதி அதற்கு ஆர்வம் காட்டவில்லை. மற்றொரு சந்தர்ப்பம் வரும்போது பங்கேற்பதாகத் தெரிவித்து விட்டு நாடு திரும்பிவிட்டார் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக