புதன், 15 டிசம்பர், 2010

குழையைக் காட்டி ஆட்டை கூட்டிச் செல்லும் கலாசாரம்........

தமக்குப் பின்னால் வரமறுக்கின்ற ஆடுகளுக்குக் குழையைக் காட்டி அதனைக் கூட்டிச் செல்லும் வழக்கம் ஒன்று நம் ஊர்களில் உண்டு. குழைக்கு ஆசைப்பட்ட ஆடுகள் அழைப்பவர் யாரென்று தெரியாமல்- குழை இன்னதென்று அறியாமல் பின்னால் செல்லும். ஆடு குழையைச் சாப்பிட எத்தனிக்கும்போது குழையை இழுத்துக் கொள்வது ஆட்டைக் கூட் டிச்செல்பவரின் நுட்பமாக இருக்கும். எனினும் சில ஆடுகள் நிலைமையை உணர்ந்துகொண்டு குழைக்குப் பின்னால் செல்ல மறுக்கும்.இச் சந்தர்ப்பத்தில் ஆட்டுக்குக் குழையைக் காட்டியவர் சற்று இறங்கி குழையை ஆட்டுக்குச் சாப்பிடக் கொடுப்பார்.
குழை சாப்பிடும் நேரத்தில் குழையைக் கையில் எடுத்து மீண்டும் அழைத்துச் செல்ல முற்பட, அந்த ஆடோ சாப்பிட்ட குழையின் தன்மையை உணர்ந்து செயற்படும்.
குழையைக் காட்டி ஆட்டைக் கூட்டிச் செல்பவர் சில வேளை ஆட்டை வெட்டலாம் அல்லது தான் விரும்பும் புதையலை எடுக்கப் பலி கொடுக்கலாம். சில வேளை கட்டி வளர்க்கலாம். பாலும் கறக் கலாம். இதில் எது நடக்கும் என்று தெரியாது. ஆனாலும் குழையைக் காட்டுபவர்களின் சூழ்ச்சி யில் பலவீனமான ஆடுகளே மாட்டுப்பட்டு வதைபடும்.இதனால் பலமான ஆடுகள் கூடப் பாதிக்கப் படும். இவை நடந்தால் ஆட்டினம் அல்லல் படு வது தவிர்க்கமுடியாததே. குழையைக் காட்டி ஆட்டைக் கூட்டிச்செல்லும் கலாசாரம் போன்று மனிதனை மனிதன் ஏமாற் றும் நாடகமும் இவ்வுலகில் நடக்கின்றன. இதனாலேயே, யேசுபிரான் நல்ல மேய்ப்பராக இருந்தார். ஆட்டினத்தைப் பாதுகாக்க எங் ஙனம் மேய்ப்பர் அவசியமோ, அதுபோல பாதிக் கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கும் நல்ல மேய்ப்பர் அவசியம்.
இந்தத் தேவையை தமிழினம் நன்கு உணர்ந் துள்ளது. அரசினால் காட்டப்படும் குழையை கண்டவுடன் பின்னால் செல்வதை விடுத்து, காட் டப்படும் குழையின் தன்மை, குழையைக் காட்டு பவரின் சிந்தனை என்பன பற்றி ஆராய்ந்து செயற்பட வேண்டும். இல்லை என்றால் கழுத்தில் கத்தி விழுவது தவிர்க்கமுடியாமல் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக