புதன், 15 டிசம்பர், 2010

பெரும்பான்மை இனத்திற்காக அர்ச்சனை செய்வது- அவர்கள் விரும்பும்படியாகப் பேசுவது எல்லாம் சொந்த இனத்திற்குச் செய்யும் துரோகத்தனமாகும்.!

தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே இருக்கின்றனர்பொதுவில் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று நாம் கேள்விப்பட்டதுண்டு. தென் பகுதியில், அரச பணியில் ஈடுபட்ட தமிழர்கள், மற்றும் தென்பகுதியில் வர்த்தகம் செய்த தமிழர்கள் இவ்விதம் கூறிக்கொள்வர். சிங்களவர்கள் உதவி செய்வார்கள், மற்றவர்க ளுக்கு மதிப்பளிப்பது அதிகம், இரக்கம் காட்டுவார் கள் என்றெல்லாம் எம்மவர்கள் கூறக் கேட்ட நாம் நடைமுறையில் அதைக் காணவில்லையே என்று நினைப்பதும் உண்டு.



ஆனால், இப்போதுதான் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அதாவது தமிழர்களாகிய நாம் இத்துணை துன்ப துயரங்களுக்கு ஆளாகியதற்கு சிங்களவர்களை விட தமிழர்களே அதீத பங்காற்றினர் என்பது புலப்படுகின்றது. சிங்களவர்கள் தமிழர்களுக்கு ஏதேனும் கொடுப் போம் என்றாலும் அதற்கு தமிழர்கள் விடமாட்டார் கள் போல் தெரிகின்றது. திருமதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது இனப்பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்வதில் தமிழரான அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரே முக்கிய பங்காற்றினார்.


அவர் நினைத்திருந்தால் தமிழர்களின் பிரச்சி னைக்கு ஏதோவொரு வகையில் தீர்வு காண்பதற்கு வழிசெய்திருக்க முடியும். இதுபோல விடுதலைப்புலிகளின் தோல்வி கூட விடுதலைப்புலிகளோடு சேர்ந்திருந்தவர்கள் வழங்கிய தகவல்கள், காட்டிக்கொடுப்புகள் என்பவற்றால் ஏற்பட்டதே.


விடுதலைப்புலிகளோடு இருந்து தாக்குதல்க ளை நடத்தியவர்கள், வெளிநாடுகளில் தமிழ் மக்க ளிடம் பணம் சேர்த்தவர்கள் திடீரென மாறினார்கள். அதன் முடிபு; பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் வன்னி யுத்தத்தில் பலியாகவேண்டி யதாயிற்று. அந்த இழப்புக்களோடு தமிழ் மக்களின் துயரம் நின்றாகவில்லை. காலாகாலமாக, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்த சொத்துக்கள் அத்தனையும் பறிபோய்- பாழாய்ப் போய் இப்போது தறப்பாள்களின் கீழ்க் குந்தியிருக் கும் பரிதாபம்.


இவை விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என நினைத்த தமிழர்களால் நேர்ந்த கதிதான் இது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டீர்கள். எதிர் காலத்தில் இலங்கை மண் அமைதி நிறைந்த பூமி யாக இருப்பதற்காக தமிழர்களின் உரிமைப்பிரச் சினைக்கு தீர்வு காணுங்கள் என அரசை வலியுறுத் தும் பணியையாவது தமிழுக்கு விரோதமான தமிழர்கள் செய்வது அவசியமல்லவா!


இதைச் செய்யத் தவறும்போது அதற்காக வருந்த வேண்டிய காலம் விரைவில் ஏற்படும் என்பதை எவரும் மறந்துவிடலாகாது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் இப்போது இல்லை. நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வை முன்வைக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே அழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக